பொன்னகரம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Ponnakaram!

0

பொன்னகரம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Ponnakaram!

பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில ‘மகாராஜர்களுக்காக’ இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்… சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’ – அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும்? – அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் – ஆமாம், வசிப்பதற்குத்தான்!தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை – சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?

பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு ‘மீன் பிடித்து’ விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா?

‘போனால்’ பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, ‘கிளாக்ஸோ’ ‘மெல்லின்ஸ் பூட்’ குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று “குட்மார்னிங் சார்!” என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.

ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்கவரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.இள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் – விடிய விடிய மின்சார ‘ஸ்பின்டிலை’ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும்?

கண்கள்தாம் என்ன இரும்பா? உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக்கியமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன! எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான்.

அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான்? வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன?கழுத்தில் ஒரு கருப்புக் கயிறு – வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை. அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.அம்மாளு ஒரு மில் கூலி.

வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் ‘ஜட்கா’ வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை – ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு – (குதிரை உள்பட), வீட்டு வாடகை, போலீஸ் ‘மாமூல்’, முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு – எல்லாம் இதற்குள் தான்.

எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். ‘டல் ஸீஸ’னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! ‘பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்’ என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் ‘தண்ணி போட்டு’ விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி ‘டோ க்கர்’ அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க.

வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.‘கும்’மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?எப்பொழுதும்போல் இரைச்சல்தான்.

ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.சந்தின் பக்கத்தில் ஒருவன் – அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் ‘கண்’ வைத்திருந்தவன்.இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்!என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபடபடப்பு! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Padapadappu!
Next articleஇரண்டு உலகங்கள்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Irandu Ulagangal!