கனவுப் பெண்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kanavu Pen!

0

கனவுப் பெண்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kanavu Pen!

ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி,

ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது.

இந்து – சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி…

அதெல்லாம் பழைய கதை, மார்த்தாண்டன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல் இருக்கும் என்று கண்டானா?

சோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து – சீனப் போரில் அவன் படையிலே தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள்;

அவன் அரண்மனைத் தலைவாயிலைக் காத்திருந்தார்கள்.

அகழிக்கப்புறம் அண்ணாந்து பார்த்தால் தலையறுந்து விழுந்து விடும்படி பெரிய வாயில். உள்ளே சற்றுத் தள்ளி வெண்கலத்தினால் ஆன துவஜஸ்தம்பம். அதன் உச்சியில் முன்னங்கால்களை உயரத் தூக்கிக் கொண்டு, வாயைப் பிளந்தவண்ணம், பாயும் நிலையில் வார்த்த ஒரு வெண்கலப் புலி.

முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. அதன் கண்களுக்கு இரண்டு பெரிய இரத்தினங்கள்! சூரியனுடைய கிரணங்கள், அதன் மிடுக்கை – சாம்ராஜ்யத்தின் மனப்பான்மையை – தன்னையே வென்று கிழிக்க முயலுவதைப்போல் நிற்கும் புலியை – அந்தச் சிற்பியின் கைவன்மையை – எடுத்துக் காட்டின.

ஸ்தம்பத்தின் அடியில் குறுகிய கவசம் அணிந்து, கச்சையைப் போல் வேஷ்டியை இறுக்கிக் கட்டிய மறவர்கள் கையில் எறி – ஈட்டிகளை ஏந்தியவண்ணம் கல்லாய்ச் சமைந்தவர் போல் காத்து நிற்கிறார்கள்.

சற்று உள்ளே ராஜமாளிகை, கல்லில் சமைந்து, தமிழனின் மிடுக்கை, தமிழனின் வீரத்தை, தமிழனின் இலட்சியத்தை ஒருங்கே எடுத்துக் காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் ஏகாதிபத்தியச் செருக்கு.

சாம்ராஜ்யத்தின் ஹ்ருதயமின்மை அழகுருவத்தில் மனிதனை மலைக்க வைக்கிறது. மிருகத்தன்மை – அதற்கு வீரம் என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் – அழகுடன் கைகோத்து உலாவுகிறது.

உள்ளிருந்து சங்கமும் முரசும் ஏகமாக முழங்குகின்றன.

“ராஜ ராஜ அரிகேசரி வர்மன் பராக்…!”

இன்னும் எத்தனையோ முழ நீளம் முடிவில்லாமல் செல்லுகிறது அவன் பெயர்!

முன்பு சிற்றரசர்கள், தானாதிபதிகள், தளகர்த்தர்கள் யாவரும் படிப்படியாக முறை முறை வந்து வழிபட்டு விலகி நின்று அடிபணிகிறார்கள்.

எங்கிருந்தோ மங்கள வாத்தியம் முழங்குகிறது.

உள்ளிருந்து ஒரு யௌவன புருஷன் – ஆணின் இலட்சியம் – வருகிறான். நெஞ்சிலே வைரங்கள் பதித்த குறுகிய கவசம் – மத்தியில் ரத்தினங்களில் புலி – காலில் வீரக் கழல், சிரத்திலே மரகதக் கிரீடம். இடையில் ஒரு சுரிகை.

அகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரக் கண்கள். புருவத்தின் அழகை எடுத்துக்காட்டுவது போன்ற நெற்றி.

அகன்ற நெற்றியிலிட்டிருக்கும் கருஞ்சாந்தின் அழகை மங்க வைத்து எடுத்துக்காட்டும் அந்தக் கண்களில் கனிவு, சிற்சில சமயம் மிடுக்கு.

மெதுவாக அசைந்தசைந்து உலகம் பெயர்வது போல் நிகரற்ற நடை. பக்கத்தில் வரும் ஒருவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு வருகிறான்.

இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் பார்ப்பதிலே மனித இலட்சியங்கள் இரண்டையும் காணலாம்: ஒன்று மனிதனின் சக்தி; மற்றது மனிதனின் கனவு.

அவனும் அழகன்தான்; அழகும் தெய்வீகமானது. இந்தப் படாடோ பத்துக்குச் சமமாக மதிக்கும் கண்களிலே கனவுகள், இலட்சியங்கள், உருவப்படுத்த முடியாத எண்ணங்கள் ஓடிமறையும் கண்கள்.

அவனுடைய இடையிலும் ஒரு சுரிகையிருக்கிறது. சம்பிரதாயமாக, வழக்கமாக இருக்கும் போலும்!

பக்கத்தில் பணிப் பெண்கள்! அழகின் பரிபூரணக் கிருபையாலே அரச படாடோ பத்தின் உயிருடன் உலாவும் சித்திரங்கள். மார்பில் கலை கிடையாது. அக்காலத்தில் அரசன் முன் அப்படி நிற்க முடியுமா?

முத்துவடங்கள் அவர்கள் தாய்க்கோலத்தை மறைக்கின்றன. இடையில் துல்லிய தூய வெள்ளைக் கலிங்கம். அரசனுக்கு அடைப்பத் தொழில் செய்தலும், சாமரை வீசுவதும் அவர்களுக்குரியவை.

அரசனுக்கு நடக்கும் மரியாதை அந்த அழகனுக்கும் நடக்கின்றது.
வெளியே வந்தாகிவிட்டது.

காவிரிப்பூம்பட்டினத்தில் நாவாயேறி இந்து – சீனத்திற்குச் செல்கிறான். அந்தப் பெயர் தெரியாத பிரதேசங்களில் தமிழ் இரத்தத்தைத் தெளித்து வெற்றிக்கொடிகளைப் பயிராக்க. பட்டத்து யானையில் ஏறியாகி விட்டது – கவிஞனுடன்.

நல்ல நிலா நடுக்கடல் எங்கு பார்த்தாலும் நீலவான், நீலக்கடல்… நாவாய் கீழ்த் திசை நோக்கிச் செல்லுகிறது. அதன் மேல்தட்டில் கவிஞனும் சோழனும்.

கவிஞனுக்கு அன்று உற்சாகம். ஊர்வசியின் நடனத்தை, அவள் அழகை, ஓர் அற்புதமான கவியாகப் பாடுகிறான். ஊர்வசி அரசனைக் காதலிக்கிறாளாம்; அரசனைக் காண வருகிறாளாம்.

கவிஞன் கற்பனை அரசன் உள்ளத்தைத் தொட்டது. கவிஞன் கனவில்தான் கண்டான். அரசன் முன்பு ஊர்வசியே தோன்றிவிட்டாள்!

வெறுங் கனவு!

சோழனுக்குமா அப்படி?

“ஊர்வசீ! ஊர்வசீ! அதோ வருகிறாளே! அதோ, அந்த அலையின் மேல்! அதோ! அதோ! ஊர்வசி!”

கவிஞன் அரசனை யழைக்கிறான். ‘ஊர்வசி’ என்ற பதில்தான்.

அரசன் கட்டளைப்படி, கடலில் தறிகெட்டுத் தேட ஆரம்பிக்கின்றது நாவாய்.

“அதோ அந்த அலைமீது… அந்தப் பெரிய அலை மறைந்துவிட்டது… அதோ தெரிகிறாள்! அவளே ஊர்வசி!”

அந்தப் பெரிய அலையின் கீழே பாறைகள் என்று யாருக்குத் தெரியும்?…

கடகடவென்ற சப்தம்! உள்ளே ஜலம் வெண்மையாகப் பாய்கிறது.

“ஊர்வசி!” என்ற குரல் சோழன் இருக்கும் திசையைக் காட்டுகிறது. அந்த அமளியில் படைத்தலைவன் நெருங்குகிறான்.

 அதற்காகக் கப்பல் பொறுத்துக் கொண்டிருக்குமா? இன்னொரு பாறை!

கப்பலில் உச்சி முதல் அடிவரை ஒரு நடுக்கம். பாய்மரம் தடால் என்று ஒடிந்து விழுகிறது!

கப்பல்?

ஆயிரமாயிரம் மக்கள் கூட்டம், ஜீவனுள்ள உயிர்ப்பிராணிகள், அரசன் சாம்ராஜ்யம், படாடோ பம், புலிக்கொடி, வெற்றி, வீரம்… இன்னும் எத்தனையோ!

சமுத்திர ராஜன் பர்வத ராஜனுடன் ஒத்துழைத்தால் எதிர்த்து என்னதான் செய்யமுடியும்?

அரசனைக் காப்பாற்ற வேண்டியது அவசியந்தான். ஆனால் அகோரமான அலைகளுக்கு மத்தியில் யார் என்ன செய்ய முடியும்?

ராஜ மார்த்தாண்டன், வீரன், பலவான். நீந்திக்கொண்டு செல்லுகிறான், ஆனால் தன் இஷ்டப்படியல்ல.

மிதப்புக் கட்டை மாதிரி நீருக்கு மேல், பெரிய அலைகள் மூச்சுத் திணறும்படி வாரியடிக்கும் நுரைக்கு மேல், முகத்தைத் தூக்கிக் கொண்டு நீந்துகிறான்.

வாரியிறைக்கும் நுரைத் திரையிலே ஒரு பெண்ணின் பாதம் தெரிகிறது.

“ஊர்வசி!”

“அவள்தான் வருவாளே! வருகிறாளே!”… தைரியமும் ஊக்கமும் சக்தியைக் கொடுக்கின்றன.

நீந்துகிறான்.
எதிரிலே ஓர் உயரமான பாறை. தலை நிமிர்ந்து உச்சியைக் காண முடியாத நெடும்பாறை!

அதில் நின்று கொண்டால்!

அவன் நீந்த வேண்டாம், அலை வேகமே இழுத்துச் செல்லுகிறது.

அப்பா!

இன்னும் ஒரு கை!

எட்டிப் போடுகிறான்.

பின்புறம் இடிமுழக்கம் போல் ஒரு ஹுங்காரம்! நட்சத்திரங்கள் கண்ணுக்குள் மின்னி மறைகின்றன.

அப்புறம் ராஜமார்த்தாண்ட சோழன் அல்லன் – முங்கி மிதக்கும் ஒரு சரீரம்…

எவ்வளவோ நேரம் சென்றது.

கண்களில் ஏன் இந்தச் சூரியன் இப்படித் தகிக்க வேண்டும்? யாரோ அணைத்திருக்கிறது மாதிரி ஒரு தோற்றம்.

தாயின் கனிவுடன் சற்று மேலோங்கி வளர்ந்தும் வளராத கன்னங்கள். கன்னத்தோடு சாய்ந்து.

“அம்மா அ அ அ!”

என்ன ஹீனஸ்வரம்! என்ன பலவீனம்!

கவிஞனின் கனவு போன்ற கண்கள் அவனைக் கவனித்துச் சிரிக்கின்றன.

திரும்புகிறான் – மாந்தளிரின் நிறம்! மனத்தில் சாந்தியளிக்கக்கூடிய அழகு…

கூந்தல் கறுத்துச் சுருண்டு ஆடையாக முதுகுப்புறத்தை மறைக்கின்றது!

அதுதான் ஆடை!

திடுக்கிட்டு எழ முயற்சிக்கிறான்; முடியவில்லை.

அவள் கரங்கள் அவனை அணைத்துக்கொள்கின்றன.

உதட்டில் அவளுடைய மெல்லிய விரல்கள் பதிந்து, அவனைத் திரும்பவேண்டாம் என்று சமிக்ஞை செய்கின்றன.

அவன் அரசன்! ராஜ மிடுக்கு! அவளோ தாதிப் பெண்!

“காலைப் பிடி!”

பதில் இல்லை. புன் சிரிப்புத்தான். தாயின் கனிவு அவனையணைத்துக் கொள்ளுகிறது.

“நான் அரசன்! ராஜமார்த்தாண்ட வர்மன்! ஹும்?”

பதில் இல்லை.

புன்சிரிப்புத்தான்.

அவ்வளவு தைரியமா?

அவளது கேசத்தை அவள் கழுத்தில் முறுக்குகிறான். வெற்றிப் புலிக்கொடி! அவன் கண்கள் இருள்கின்றன.

“மூச்சு!”

“அம்மா! இருள்! இருள்!”

கண்களுள் நட்சத்திரங்கள் தோன்றி மறைகின்றன…

இருள்!

நீலக் கடல்!

ஒரு பிணம் குப்புற மிதக்கின்றது. அதன் முகத்தில் என்ன சாந்தி!

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகட்டிலை விட்டிறங்காக் கதை! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kattilai vidirangaa kathai!
Next articleகாஞ்சனை! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – kanjanai!