செல்வம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Selvam!

0

செல்வம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Selvam!

அன்று டிராமில் வந்து கொண்டிருந்தேன். சென்ட்ரல் வரை தரையில் புரண்டு தொங்கும் புடலங்காய்தான்.

அப்பா! உட்கார்ந்தாகிவிட்டது. மனிதனுக்கு உட்கார இடங்கொடுத்து விட்டால் கொஞ்சம் அப்படி இப்படிச் சுற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பேசுகிறவர்கள் – சென்னை அவசரத்தில் அந்த மாதிரிப் பிரகிருதிகள் மிகவும் சொற்பம் – யாராவது இருந்தால் கொஞ்சம் காது கொடுக்க வேண்டும்; கூடுமானால் பேசவேண்டும். பிறகு வெற்றிலை நீண்ட நட்பு. இறங்கும்வரை, எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய்.

சென்ட்ரலில் ஒரு கூட்டம் வந்து ஏறியது. இடம் வசதி பார்த்தாகி விட்டது. வந்தவரில் ஒருவர், வைதிகச் சின்னங்கள்; மெலிந்த தேகம் சுகமாகக் காலை நீட்டிக் கொண்டு சொல்லுகிறார்:

“செல்வம் இருக்கிறதே, அது வெகு பொல்லாதது. இன்று ஒரு இடத்தில் இருக்கும், நாளை ஒரு இடத்தில் இருக்கும்; அதோ அந்த வண்டிச் சக்கரம் போல. அதைத் துறந்தால்தான் மோட்சம்…” இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார்.

என் மனம் இருக்கிறதே, அது எப்பொழுதுமே இப்படித்தான். ஒன்றைக் கேட்டால் எதிர்த்தோ, பேசவோ செய்யாது. அப்படியே நீண்ட யோசனைகளை இரகஸியமாக என்னிடம் வந்து கொட்டும்.

இந்தச் ‘செல்வம்’ என்ற சொல் ‘செல்வோம் செல்வோம்’ என்ற பொருள்பட நின்றதாம். அதிலே தமிழுக்கு வேறே பெருமை. அதன்மீது, செல்வத்தின் மீது ஒரு வெறுப்பு உணர்ச்சி – முக்கால்வாசிப் பெயரிடம், ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்ற தத்துவந்தான்.

செல்வம் சென்றுவிடுமாம்! அதனால் அதை வெறுக்க வேண்டுமாம். நீ வெறுக்காவிட்டாலும் தானே அது சென்றுவிடுமே! அது செல்லாவிட்டால், அந்தச் சகடக்கால் மாதிரி உருண்டு செல்லாவிட்டால், அதற்கும் இந்த மண்ணாங்கட்டிக்கும் என்ன வித்தியாசம்?

ரூ.அ.பை. வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அது பண்டம் மாற்றுவதற்கு இடையிலே சங்கேதமாக வைத்துக்கொண்ட ஒரு பொருள். வெறும் பணத்தை உண்ண முடியுமா? உடுக்க முடியுமா? இது தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு வஸ்து. அது சென்று கொண்டிருப்பதினாலேதான் அதற்கு மதிப்பு.

வெள்ளைக்காரன் செல்வத்தை வெல்த் (Wealth) என்று சொல்லுகிறான். அது பூர்த்தியாகும் வஸ்து என்று அர்த்தப்படும்படியாக இருக்கிறது. ஜடத்தின் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் வேண்டும். அது முதல்படி, மற்ற எல்லா இலக்ஷியங்களுக்கும்.

நமக்குச் செல்வம் ஜகந்நாதத்தின் தேர்ச்சக்கரம் மாதிரி இருக்கிறது. அது நம்மை நசுக்குகிறது. அதன் உருளைகள் சரியானபடி சுற்றவில்லை. போகும் வழியும் கண்மூடித்தனமாக இருக்கிறது. அதை நீக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு, செல்வமே வேண்டாம் என்று பேசுகிறவனைக் கண்டால், “உன் (அசட்டு) வேதாந்தத்தில் இடி விழ!” என்று சீறும்படியாகக் கோபம் வருகிறது.

வாஸுதேவ சாஸ்திரியை – அதுதான் ராஜமையர் எழுதிய இங்கிலீஷ் கதையில் வருகிறவர் – முக்கால்வாசித் தமிழர்களுக்குப் பிடிக்கும்.

அவரை எல்லோரும் இலக்ஷியமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். எனக்கு அந்த அசட்டு வேதாந்தியின் தர்மபத்தினிதான் நமக்குச் சரியான இலக்ஷியம் என்று சொல்லுகிறேன்.

சாக்கடையிலிருந்து நட்சத்திரங்களைப் பற்றிக் கனவு காண்பது வெகு கஷ்டமல்ல; அது நம்மவருக்கு ரொம்ப நாளையப் பழக்கம். பக்கத்திலிருக்கும் குறட்டில் ஏற முயல்வது, முதலாகச் செய்ய வேண்டியது.

நம்மவருக்குச் செல்வத்தின் தீமையைப் பற்றிச் சொல்லுவது, நம்புஸகனுக்கு பிரம்மச்சரியத்தின் உயர்வைப் பற்றி உபதேசிப்பது போல்தான்.

செல்வம் நிலையில்லாதது என்று கடிந்து கொள்ளுகிறீர்களே! எதுதான் உலகத்தில் நிலையாக இருக்கிறது? கடவுளைப் பற்றி வெகு லேசாக, எப்பொழுதும் இருக்கிறார் என்று கையடித்துக் கொடுப்பார்கள் நம்மவர்கள். கடவுளும் நம்மைப்போல், பிறந்து வளர்ந்து அழிகிறவர்தான்.

“அட போடா, நாஸ்திகா!” என்பீர்கள். இந்தக் காலத்துப் பிராமணன், வேத காலத்துப் பிராமணனைச் சந்தித்தால், ‘அவன் பதிதன்’ என்று முடிவு கட்டி விடுவான்.

அந்தக் காலத்தில் இருந்த கடவுள்கள் எல்லாம் எங்கே? அந்தக் காலத்துத் தமிழன், கொற்றவை என்ற தெய்வத்தைக் கும்பிட்டானாம். அது எங்கே? இந்த மாதிரி எத்தனையோ அடுக்கிக் கொண்டு போகலாம்.

இந்தச் செல்வமும் இப்படித்தான். பழைய காலத்து மனிதனுக்குக் கையிலிருந்த கல், ஈட்டிதான் செல்வம். வேத காலத்துப் பிராமணனுக்கு மாடும், குதிரையும்தான் செல்வம்.

அவன் அதை நிரையாகப் பெருக்கினான். யாகம் செய்தான். ஏன், தெய்வமாகக் கொண்டான்? தேவையைப் பூர்த்தி செய்யும் இலக்ஷியந்தான் தெய்வம்; அது எந்தத் தேவையானால் என்ன?

அந்த ட்ராம் கார் நண்பர் மாதிரி நமக்கு அசட்டு வேதாந்தம் வேண்டாம். அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டுப் பிறகு மெத்தைக்கு என்ன வார்னீஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்.

முற்றும்

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெவ்வாய் தோஷம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Sevvai Thosam!
Next articleசிவசிதம்பர சேவுகம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Sivasithambara Sevukam!