நாசகாரக் கும்பல்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Nasakara Kumbal!
டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல் தயாரித்துவிட்டு, பென்ஷன் பெற்று, திருச்செந்தூர் ஜில்லா போர்டு ரஸ்தாவில் பாளையங்கோட்டைக்கு எட்டாவது கல்லில் இருக்கும் அழகியநம்பியாபுரம் என்ற கிராமத்தில் குடியேறினார்.
(என் திருநெல்வேலி நண்பர்கள் அழகியநம்பியாபுரத்தைத் தேடி ஜில்லாப் படத்துடன் மோதி மூளையை வரள வைத்துக் கொள்ள வேண்டாம். அதில் இல்லை.)
ஏறக்குறைய அதே சமயத்தில் தான், குடிமகன் மருதப்பனும் இலங்கைத் தோட்டத் துரைகளுக்கு க்ஷவரகனாக இருந்து, படிப்படியாகக் கொழும்பு கோட்டைத் தெருக்களில் ஸலூன் வைக்கும் அதிர்ஷ்டமடைந்து, அதில் ஒரு பத்து வருஷ லாபத்தாலும்,
அங்கு சிறிது மனனம் செய்து கொண்ட ‘வாகட சாஸ்திரம்’, ‘போகர் இருநூறு’, ‘கோரக்கர் மூலிகைச் சிந்தாமணி’ இவற்றின் பரிச்சயத்தாலும் உயர்திரு. மருதப்ப மருத்துவனாராகி அழகியநம்பியாபுரத்தில் வந்து குடியேறினான்.
இவ்விருவரும் இவ்வூருக்கு ஒரே சமயத்தில் படையெடுத்தது தற்செயலாக ஏற்பட்ட சம்பவம். ஆனால், அழகியநம்பியாபுரத்தில் இவர்கள் வருகைக்கப்புறம் ஒரு மறைமுகமான மாறுதல் ஏற்பட்டது.
ஸ்ரீ விசுவநாத பிள்ளை சாதாரண வேளாளர் வகுப்பில் பிறந்து, வைத்தியத் தொழில் நல்ல லாபம் தரும் என்ற நம்பிக்கையில் வாலிப காலத்தில் அதில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் வைத்தியக் கல்வி படிக்க வருகிறவர்களுக்கு ‘ஸ்டைப்பன்ட்’ (உபகாரச் சம்பளம்) கொடுத்ததும் இவருக்கு இந்தத் தொழிலில் ஆசை விழ ஒரு தூண்டுகோல் என்று சொல்ல வேண்டும்.
மேலும், அக்காலத்தில் சர்க்கார் உத்தியோகம் கைமேலே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளைக்கார வைத்திய சாஸ்திரம் இவ்வளவு பிரமாத அபிவிருத்தியடையவில்லை. உளுத்துப்போன அந்த ‘மெடீரியா மெடிகா’வும் சீமையிலிருந்து தளும்பி வழிந்த வைத்திய சாஸ்திரமுமே இந்திய விதேசி வைத்தியசாலை ‘வடிகால்களில்’ ஓடின.
ஆகையால், பாஸ் செய்வதற்கும் உத்தியோகம் பார்ப்பதற்கும் அவ்வளவாகச் சிரமமில்லாதிருந்தது. மேலும் வெள்ளைக்காரர்கள் தங்கள் வைத்திய சாஸ்திரத்தைப் பிரசாரம் செய்வதிலேயே ஊக்கங் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ விசுவநாத பிள்ளை படித்துத் தேறி, பணம் சம்பாதித்தது ஒரு பெரிய வசன காவியம்; அதற்கு இங்கு இடமில்லை. ஆனால், அந்தப் ‘பிணமறுக்கும் தொழில்’ அவரை நாஸ்திகராக்கிவிடவில்லை.
அவருக்கு ‘மெடீரியா மெடிகா’வில் எவ்வளவு அபார நம்பிக்கையோ, அவ்வளவு சைவ சித்தாந்த நூல்களிலும் உண்டு. சிவஞான போதச் சிற்றுரையும், ‘ஸ்டெதாஸ்கோப்’பும், உத்தியோக காலத்தில் அபேதமாக இடம்பெற்றன. மேலும் திருநீறு முதலிய புறச் சின்னங்களின் உபயோகத்தையும் அவர் நன்கறிந்தவர்.
ஸ்ரீ விசுவநாத பிள்ளை பொதுவாக நல்ல மனுஷ்யர். நாலு பெயரிடம் சுமுகமாகப் பேசிப் பழகக்கூடியவர். எடுப்பு, மாஜி சர்க்கார் உத்தியோகஸ்தர் என்ற மிடுக்கு, ஒன்றும் கிடையாது.
பிள்ளையவர்களின் குடும்பம் விசாலமானதன்று. பெரிய கட்டுக் கோப்பில் தம் வம்சம் விருத்தியாகி லோகத்தின் அஷ்ட திக்கிலும் சென்று ஜயக்கொடி நாட்ட வேண்டும் என்று அவர் ஆசை கொள்ளாதவர் என்பதை அவருடைய ஏகபுத்திரன் மிஸ்டர் கிருஷ்ணசாமி நிரூபித்தான்.
ஸ்ரீமதி விசுவநாத பிள்ளை – அதாவது ‘சாலாச்சியம்மா’ (விசாலாட்சியம்மாள்) – நிரந்தரமாக, பிள்ளையவர்களின் சலித்துப் போன வைத்தியத்திற்கும் மீறின வயிற்று சம்பந்தமான வியாதி உடையவள் என்பதை மத்தியானத்தில் மட்டிலும் அருந்தும் கேப்பைக் கஞ்சி எடுத்துக் காட்டுகிறது.
சாலாச்சியம்மாள் பழைய காலத்து வேளாளக் குடும்ப நாகரிகத்து மோஸ்தர் பின்கொசுவம் வைத்துக் கட்டிய உடையுடனும், கழுத்து காதணிகளுடனும் வீடு நிறைந்து காட்சியளிப்பாள்.
மிஸ்டர் கிருஷ்ணசாமி அப்பாவின் வறுபுறுத்தலுக்காகப் ‘பட்டணத்தில்’ வைத்தியப் படிப்பில் தகப்பனார் சென்ற பாதையில் நம்பிக்கைகொள்ள முயலுகிறான்.
உயர்திரு. மருதப்ப மருத்துவனார் வாழ்க்கை இதே ரீதியில் செல்லவில்லை. மேடு பள்ளங்களைக் கண்டது. தலை நரைக்கும்வரை உழைப்பில் காய்த்துப்போன கை, காசு பணத்தை நிறையக் காணவில்லை.
அநுபவத்தின் கொடூரமான அல்லது இன்பகரமான சாயை விழாத, நம்பிக்கையும் நேசப்பான்மையும் நிறைந்த வாலிபப் பருவத்தில் குடிமகன் மருதப்பன் தூத்துக்குடியில் கொழும்புக்குக் கப்பலேறினான். திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களிடை கொழும்பு என்றால் இலங்கையின் ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் என்றுதான் பொருள்.
உயர்ந்த வேளாள வகுப்புக்களிடையேதான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்ற அர்த்தம். மருதப்பன் நம்பிக்கையும் மேற்சொன்ன விதத்தில்தான்.
நூரளைத் தோட்டத் துரைகளுக்கும் உயர்தரத் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் க்ஷவரத் தொழில் செய்து, கை நிறையக் கொடுத்த பக்க்ஷிஸ், சம்பளம், உணவு இவற்றுடன், இடையிடையே தொல்லைப்படுத்திய மலைக்காய்ச்சலும் பெற்று, கடைசியாகத் தன் முப்பதாவது வயதில் கொழும்பில் ஸலூன் வைத்தான்.
அந்தக் காலத்தில் ஸலூன் தொழிலில் அவ்வளவு போட்டி கிடையாது. இந்தியாக்காரர்கள் அவனுக்கு ஆதரவு அளித்தனர். தொழில் வளர்ந்தது. எப்பொழுதோ ஒரு முறை செய்த அவனுடைய இந்தியப் படையெடுப்பும் கலியாணமும் இடையிடையே நடைபெற்ற சம்பவங்கள்.
ஸலூன் முயற்சியில் நல்ல பலன் ஏற்பட்டதோடு, சித்த வைத்தியசாஸ்திரத்தில் சிறிதளவு பரிச்சயம் பெற்றுக்கொள்ள அவகாசமும் கிடைத்தது. இதனுடன் சமீபகாலமாக, இலங்கை மருத்துவ குல அன்பர்களின் சர்ச்சைகளின் மூலஸ்தானமாக விளங்கும் இலங்கைத் தினசரி ஒன்றும் அவன் மன விசாலத்திற்கு உற்ற துணையாக இருந்தது.
மருத்துவனார் தம் ஐம்பதாவது வயதில் தாய் நாடு திரும்பும் இலங்கைக் குடியேற்ற விருதுகளுடன் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பொழுது கையில் ரொக்கமாக ரூ.5,000 மும், மேற்கொண்டு அழகியநம்பியாபுரத்தில் மூன்று கோட்டை நன்செய்யும், கொழும்பு ஸலூனில் வாரிசாக அவர் புத்திரனும் உண்டு.
அழகியநம்பியாபுரத்திற்கு பஸ் வந்துவிட்டது என்பதற்கு ரஸ்தாவின் இடப்பக்கத்துப் புளியமரத்தடியில் இருக்கும் எட்டாவது மைல் கல், அதற்குப் பக்கத்தில் உள்ள வயிரவன் பிள்ளை வெற்றிலை பாக்குக் கடை, டாக்டர் விசுவநாத பிள்ளையின் நந்தவனம் என்ற புன்செய்த் தோப்பின் மூங்கில் கேட், இவை எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கும் மருதப்ப மருத்துவரின் இரண்டடுக்குக் காறை வீடு – யாவும் பறைசாற்றினாற்போல் அறிவிக்கும்.
ரஸ்தாவில் இரு புறமும் மிகவும் நெருக்கமாக வளர்ந்த புளிய மரங்கள்; பஸ் நிற்கும் ஸ்தானத்துக்கு அருகில் எப்போதோ ஒரு காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்; அதன் குறுக்குக் கல் யதாஸ்தானத்தைவிட்டுக் கீழே விழுந்து எத்தனை காலமாயிற்றோ! பொதுவாக, நம்மில் பலர் தம்மை எந்த ஹோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்களோ, அதே உரிமையில் அதற்குச் சுமைதாங்கி என்ற பெயர் கிடைத்திருக்கிறது.
நேரம் நல்ல உச்சி வெய்யில், ஆனாலும், சாலையில் இம்மிகூடச் சூரிய வெளிச்சம் கிடையாது. பலசரக்குக்கடைச் சுப்புப் பிள்ளை பட்டறையில் உட்கார்ந்து, சுடலைமாடன் வில்லுப்பாட்டுப் புஸ்தகம் ஒன்றை ரஸமாக உரக்கப் பாடி, கடைச் சாய்ப்பின் கீழ் துண்டை விரித்து முழங்காலைக் கட்டி உட்கார்ந்திருக்கும் இரண்டொரு தேவமாரை (மறவர்) மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.
தம்பலத்தால் வாயில் எச்சில் ஊற்று நிறைய நிறைய, வாசிப்புக்கு இடையூறு ஏற்படாதபடியும், கீழே உட்கார்ந்திருப்பவர் மீது சிறிதும் தெறிக்காதபடியும் லாவகமாகத் தலையை வெளியே நீட்டி அவர் துப்பும்போது, கடையின் பக்கத்துச் சுவரில் துப்பாமலிருப்பதற்கு நீண்ட நாள் அனுபவம் மட்டும் போதாது; அதற்குத் தனித் திறமையும் வேண்டும் என்பது தெரியும்.
ஆனால் கப்புப் பிள்ளையின் தனித் திறமை கேட்டிருக்கும் மறவர் கண்களில் படவில்லை. உலகத்தில் புகழையும் பெருமையும் சமாதி கட்டித்தானே வழிபடுகிறார்கள்! அழகியநம்பியாபுர மறவர்களுக்கும் இந்தத் தத்துவ இரகசியம் தெரிந்திருந்தது என்றால் அவர்களைப் பற்றி மனிதர்கள் என்று நம்பிக்கை கொள்ளாமல் வேறு என்ன செய்வது?
மலையாளம் போனியானா, ஏ, சுடலே!
நீ மாறி வரப் போரதில்லை!…
என்று இழுத்தார் பிள்ளை.
“ஆமாமிய்யா! மலையாளத்திலே அந்தக் காலந்தொட்டே கொறளி வேலைக்காரனுவ இருக்கானுவளா?” என்றான் பலவேசத் தேவன் என்ற அநுபவமில்லாத இளங்காளை. அவனுடைய முறுக்கேறிய சதை அவன் வேலை செய்கையில் உருண்டு நெளிவதைச் சாப்பாடில்லாமலே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் தலையாரித் தேவனின் மகன்.
“நீ என்னலே சொல்லுதே? அந்தக் காலத்துலேதான் இந்த வித்தை பெரவலம். சொடலையையே சிமிளிலே வச்சு அடச்சுப் பிட்டானுவன்னா பார்த்துக்கிடேன்!” என்றான் வேலாண்டி. அவன் ஒரு கொண்டையன் கோட்டையான் (மறவர்களுக்குள் ஒரு கிளை).
வயது விவேகத்தைக் குறிக்க வேண்டிய நரைத்த தலை அந்தஸ்தைக் கொடுத்தது; ஆனால் உடல் அநுபவமற்ற இளங்காளைகளின் கட்டு மாறாமல் இருந்தது. வாரத்திற்கு நிலத்தைக் குத்தகை எடுத்து, அதில் ஜீவிக்க முயலும் நம்பிக்கையின் அவதாரமான தமிழ்நாட்டு விவசாயிகளில் அவன் ஒருவன்.
இடுப்பில் வெட்டரிவாள் ஒன்று வைத்திருப்பான். அதன் உபயோகம் விறகு தறிப்பது மட்டுமல்ல என்று தெரிந்தவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், நாணயஸ்தன்; பொய் சொல்லுவது மறக் குலத்தோர்க்கு அடுக்காது என்று பழக்கத்திலும் அப்படியே நடப்பவன்.
இந்த இடைப் பேச்சைக் கேட்ட சுப்புப் பிள்ளை, கண்ணில் போட்டிருந்த பித்தளைக் கண்ணாடியை நெற்றிக்கு உயர்த்தி, சிறிது அண்ணாந்து பார்த்து, “அட்டமா சித்தியும் அங்கேயிருந்துதான் வந்திருக்கிறது. புராணத்திலேயேதான் சொல்லியிருக்கே!” என்று ஒரு போடு போட்டார்.
இப்படிப்பட்ட விஷயங்களில் சுப்புப் பிள்ளையின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது; ஏனெனில், பெரும்பாலும் அழகியநம்பியாபுரவாசிகளில் பலர் அவரிடமே குட்டுப்பட்டு சுவடிப் பாடம் கற்றிருக்கின்றனர். பலவேசமும் இதற்கு விதிவிலக்கல்லன். இப்பொழுது அவன் கோணல் மாணலாகக் கையெழுத்துப் போடுவதெல்லாம் அவர் புண்ணியத்தில்தான்.
“நம்மவூர்லே இருந்தானே கள்ளப்பிரான் பிள்ளை, கட்டேலே போவான், அவன் வேலெமானத்தைப் பாத்திரச் சாமான் விக்கிறவன் தடுக்காட்டி… நானே நேர்லே கண்டெனே! நம்ம வைத்தியர் வாளுக்குந்தான் தெரியும்!” என்று தலையை எதிர்வாடையை நோக்கி நிமிர்த்தி ஆட்டினார் சுப்புப் பிள்ளை.
சம்பத்துக் காரணமாக ஜாதி வித்தியாச மனப்பான்மையைச் சிறிது தளர்த்தி, ஒரு விதத்திலும் பட்டுக் கொள்ளாமல் ‘வைத்தியர்வாள்’ என்று மருதப்ப மருத்துவனாரை அழைப்பது அவரது சமீபத்திய சம்பிரதாயம்.
‘வைத்தியர்வாள்’ இச்சந்தர்ப்பத்தில் வீட்டு முற்றத்தில் ஏதோ பச்சிலைகளை ஸ்புடமிட்டு முகம் வியர்க்க ஊதிக் கருக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பாம்புச் செவியில் சம்பாஷணை அரை குறையாக விழுந்தது.
முகத்தைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்த மருத்துவனார், “பிள்ளையவாள், என்ன சொல்லுதிஹ?” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.
“என்ன! நம்ம கள்ளப்பிரான் பிள்ளே இருந்தானே… அவனைத் தான் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தேன்… அவனைப் பத்தித்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே…” என்று கடையிலிருந்தபடி குரலெழுப்பினார்.
உடலைத் துடைத்துக்கொண்டு, வேஷ்டியை உதறிக்கட்டியவண்ணம் கடையை நோக்கி நடக்கலானார் வைத்தியர்.
அப்பொழுது தூரத்தில் மோட்டார் ஹார்ன் சப்தம் கேட்டது.
“ஏது மணியும் ஒண்ணாயிட்டுது போலிருக்கே. அன்னா கேக்கது மெயில் பஸ்தானே! பிள்ளைவாள் தானம் (ஸ்நானம்) பண்ணியாச்சா? வாரியளா – செல்லுமா?” என்றார் சாய்ப்புக் கம்பைப் பிடித்து நின்ற வைத்தியர்.
“போகத்தான். ஏலே, ஐயா பலவேசம், கடையெச் சித்தெ பாத்துக்கிட மாட்டியா?” என்று பஸ் வரும் திக்கை நோக்கினார். மெயில் பஸ் என்றும் மத்தியானம் ஒரு மணிக்கு அழகியநம்பியாபுரத்தைத் தாண்டிச் செல்வது ஒரு விசேஷமான சம்பவம்.
கடைப்பிள்ளைக்குத் திருநெல்வேலி டவுனிலிருந்து ஏதாவது சாமான் வரும்; டாக்டர் விசுவநாத பிள்ளை (வகுப்புவாரிப் பிரதிநிதித்வம், சைவத்தின் உயர்வு, ஆரியர் சூழ்ச்சி இத்யாதி விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்தான், ஆனாலும்…) அவர்களுக்கு ‘ஹிந்து’ பத்திரிகை வரும்; சமயா சமயங்களில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் வரக்கூடிய தொலைப் பிரயாணிகள் வருவார்கள்.
இரண்டொரு நிமிஷத்தில் பஸ் வந்து ஏக ஆர்ப்பாட்டமாகக் காய்ந்த சருகுகளை வாரி வாரி இறைத்துக் கொண்டு சுமைதாங்கி முன் நின்றது.
பஸ் டாப்பில் இருந்த கடைச்சரக்கை உருட்டித் தள்ள கண்டக்டர் டாப்பில் ஏறினான். டிரைவர் – ஐயா பீடி பற்ற வைக்க இறங்கிக் கடைப்பக்கம் வந்தார்.
இவ்வளவு நேரமாக வாமனாவதாரமெடுத்துக் கால்களைச் சுருட்டிக் கிடந்த பிரயாணிகளில் இரண்டொருவர் கீழே இறங்கினார்கள்.
முன்புறம் க்ஷவரம்; பின்புறம் பின்னல்; ஈய வளையம் இழுத்துத் தோளோடு ஊசலாடும் காது; இடையில் வேஷ்டியாகக் கட்டிய பழைய கிழிந்த கண்டாங்கிச் சேலை – இக்கோலத்தில் இடுப்பில் சாணிக்கூடை ஏந்திய இரண்டொரு பறைச் சிறுமிகள் எட்டி நின்று கார் வினோதத்தைப் பார்த்தனர்.
கடைச் சரக்கை மேலிருந்தபடியே எறிந்த கண்டக்டர், “ஸார், ஸுட்கேஸ் பெட்ஷீட் வேங்கிக்கிடுங்க!” என்று குரலெடுத்தான்.
டிரைவர் பக்கத்தில் இருக்கும் ‘ஒண்ணாங் கிளா’ஸிலிருந்து, கையில் வதங்கிப் போன பத்திரிகை ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஒரு ‘மோஸ்தர்’ வாலிபன் நாஸுக்காக இறங்கினான்.
அவனது ‘சென்னை பிராட்வே’ பாஷன் பிளேட் மூஞ்சியும், விதேசி மோஸ்தர் உடையும் யதாஸ்தானத்தை விட்டகன்ற மூலவர் போன்ற ஒரு விசித்திர சோபையை அவனுக்கு அளித்தன.
அந்தக் காட்டு மிராண்டி ரஸ்தாவில் அந்தப் பழைய பசலி பஸ் எப்படியோ, அப்படி, லண்டனில் பழசானாலும் சென்னையின் நிகழ்காலமான அவனது உடை மோஸ்தர், அந்தக் கி.மு. உலகத்தில் அவனை வருங்கால நாகரிகனாக்கியது.
“ஏடே! தெரஸரய்யா மவன்லா வந்திருக்காவ!” என்று சொல்லிக் கொண்டே ஓடினான் பலவேசம் பெட்டியை இறக்க.
மாஜி உத்தியோகஸ்தர் மகன் என்றால் கிராமத்தில் எப்பொழுதும் ஓர் அந்தஸ்து உண்டே! அதைக் கொடுத்தனர் கடையில் பொழுது போக்க முயன்ற நபர்கள்.
“அதாரது?” என்று பொதுவாகக் கேட்டான் வேலாண்டி, கையைத் தரையில் ஊன்றி எழுந்திருக்க முயன்றுகொண்டு.
“என்னப்பா, இன்னந் தெரியலையா? நம்ம மேலவீட்டு தெரஸர் பிள்ளை இருக்காஹள்லா – அவுஹ மகன் மகராச பிள்ளை! – என்னய்யா சௌக்கியமா?” என்று கடைப் பட்டறையிலிருந்தபடியே விசாரித்தார் சுப்புப் பிள்ளை.
மகராஜன் அவர் திசையைப் பார்த்துச் சிரித்தான்.
“என்ன எசமான் சவுக்கியமா – அங்கே பட்டணத்திலே மளெ உண்டுமா? – ஐயா, உடம்பு முந்தி பாத்த மாறுதியே இரிக்கியளே!” என்றான் வேலாண்டி.
பீடியை இரண்டு தம் இழுத்து எறிந்துவிட்டு வெற்றிலை போட்டுக் கொண்ட டிரைவர், ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு, ‘வண்டி புறப்படப் போகிறது. பிரயாணிகள் ஏறிக்கொள்க!’ என்ற பாவனையில் ஹார்ன் அடித்தான்.
கண்டக்டர் அப்பொழுதுதான் தனக்கு ஞாபகம் வந்த ‘ஹிந்து’ பத்திரிகையை அவசர அவசரமாகக் கடைக்கு எடுத்து ஓடினான்.
தங்கள் தேக உபாதையை நீக்கிக் கொள்ளச் சென்றிருந்த பிரயாணிகள் அவசர அவசரமாக ஓடி வந்தனர். அதில் ஒரு முஸ்லீம் அன்பர் – பார்வைக்குச் செயலுள்ளவர் போல் முகத்தில் களை இருந்தது – அவர் முன் ஸீட்டைப் பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் அவசரமாக அதில் குறிவைத்து ஓடிவந்தார்.
இவ்வளவு கூட்டத்தையும் கவலையின்றிக் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர், “என்ன மரைக்காயர்வாளா? ஏது இப்படி?” என்று முகமலர்ந்து குசலப் பிரச்னம் செய்தார்.
மரைக்காயர்வாள் செவியில், அவர் ஸீட்டைப் பிடித்து மேல் துண்டைப் போட்டு ஏறி உட்காரும் வரை, அது ஏறவில்லை. ஏறி உட்கார்ந்து வெளிக்கம்பியைப் பிடித்து உடலை முறுக்கிக் கொண்டு, தலையணி ஒருபுறம் சரிய, “வைத்தியர்வாள்! வரவேணும், ஒரு அவசரம், ஒரு நிமிட்!” என்றார்.
மருதப்ப மருத்துவனார் முகம் மலர்ந்தது. “ஏது மரைக்காயர்வாள், எங்கே இப்படி?” என்று சொல்லிக் கொண்டே பஸ் அருகில் ஓடினார்.
“நம்ம மம்முது கொளும்புக்குப் போரான் இல்லெ! டவுன் இஸ்டேஷன் வரை கொண்டுபோயி வளியணிப்பிப்புட்டு வருதேன். வாவன்னா கோனா இருக்காஹள்லா, அவுஹ அளெச்சுக்கிட்டுப் போரதாவச் சொன்னாஹ.
அதிரியட்டும், நமக்கு ஒரு லேஹியஞ் செஞ்சு தாரதாவ சொன்னிஹள்லா? அதெத்தாங் கொஞ்சம் ஞாபகப் படுத்தலாமிண்டுதான்… இம்பிட்டுத்தான்… நீங்க வண்டியெவிடுங்க – சலாம்!” என்று அவர் பேச இடங்கொடாமல் காரியத்தை முடித்துக் கொண்டார் மாப்பிள்ளை மரைக்காயர்.
“சதி, சதி!” என்று சொல்லிக்கொண்டே பின் தங்கினார் மருத்துவனார். வண்டி புகையிரைச்சலோடு கிளம்பியது.
“பிள்ளைவாள்! என்ன வாரியளா?” என்று துண்டை உதறிவிட்டுத் தோளில் போட்டுக் கொண்டார் மருத்துவனார்.
“வாரியலா வைக்கச்சண்டா” என்று முணுமுணுத்துக்கொண்டே பட்டறையைவிட்டு இறங்கினார் சுப்புப் பிள்ளை.
இதுவரை பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு சிகரட் பிடித்து நின்றது அலங்காரப் பொம்மை.
“நான் சின்ன எசமாஞ் சாமானெ எடுத்துக்கிட்டுப் போகுதேன், ஐயா, கடயெ பார்த்துக்கலே, பலவேசம் – வாங்க எசமான்!” என்று மேல் துண்டுச் சும்மாட்டில் படுக்கையையும் தோல் பெட்டி மேல் துண்டுச் சும்மாட்டில் படுக்கையையும் தோல் பெட்டி ஒன்றையும் தூக்கிக்கொண்டு முன்னே நடந்தான் வேலாண்டி.
வைத்தியரும் கடைக்காரப் பிள்ளையும், டாக்டர் விசுவநாத பிள்ளை தோட்டத்திற்குள் மூங்கில் கதவைத் தள்ளிவிட்டு மறைந்தனர்.
சாலையில் முன்போல உயிரற்ற அமைதி. சுள்ளி பொறுக்கும் சிறுமிகள் கூட மறைந்துவிட்டனர்.
டாக்டர் விசுவநாத பிள்ளையின் தோட்டம் வெய்யிலுக்கு உகந்தது. வியர்க்க விருவிருக்கச் சுற்றியலைகிறவர்களுக்கு வேப்ப நிழலுக்கும் எலுமிச்சைக் காட்டுக்கும் மத்தியில் கட்டப்பட்டிருக்கும் சவுக்கை பூலோக சுவர்க்கம்.
சாப்பாட்டு நேரங்களைத் தவிர மற்றப் பொழுதைப் பிள்ளையவர்கள் சவுக்கையிலேயே மெய்கண்ட சிவாச்சாரியார் உறவிலேயே கழிப்பார். மத்தியானப் பொழுதில் ‘ஹிந்து’ப் பத்திரிகையோடு விளங்குவார்.
இருபக்கமும் நந்தியாவட்டையும் அரளியும் செறிந்த பாதை வழியில், வைத்தியருடன் சென்ற கடைக்காரப் பிள்ளை, “ஐயா! என்ன அங்கெ இருக்கியளா? மஹராசன் வந்திருக்கான் போலிருக்கே!” என்று குரல் கொடுத்தார்.
சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த பிள்ளை எழுந்து, குனிந்த வண்ணம் மூக்குக் கண்ணாடியின் மேல்வழியாகப் பார்வையைச் செலுத்தி, “லீவு! வர்ரதாக எளுதியிருந்தான் – எங்கே?” என்று கேட்டுக்கொண்டே அந்தஸ்தாக எழுந்திருந்தார்.
“வேலாண்டி வீட்டுக்கு அளச்சுக்கிட்டுப் போனான். இந்தாருங்க உங்க பேப்பர்!… சண்டை எப்பிடி யிருக்கு?” என்று பதில் எதிர் பார்க்காமலே மருத்துவரைத் தொடர்ந்தார் பிள்ளை.
சிறிது நேரத்தில் பிள்ளை மூங்கில் கதவையடைத்துக்கொண்டு போகும் சப்தம் கேட்டது.
விசுவநாத பிள்ளை தோட்டத்துக் கமலைக் கிணறு குளிக்க மிகவும் வசதியுள்ளது. கல் தொட்டியில் தண்ணீரை இறைத்து விட்டுவிட்டு நாள் பூராவும் குளித்துக் கொண்டிருக்கலாம்.
சுப்புப் பிள்ளை தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு, துலாக் கல்லில் காலை வைத்து நின்று, வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டார்.
மருத்துவர், தொட்டியில் பாதியளவு கிடந்த தண்ணீரைத் திறந்து விட்டுத் தொட்டியைக் கழுவ ஆரம்பித்தார்.
“ஐயா, ஒங்ககிட்ட ஒரு சமுசாரமிலா கேக்கணுமிண்ணு இருக்கேன்… நம்ம கொளத்தடி வயலிருக்கெ, முக்குருணி வீசம், அது வெலைக்கி வந்திருக்கரதாவப் பேச்சு ஊசலாடுது; அதான் நம்ம பண்ணையப் பிள்ளைவாள் வரப்புக்கு மேக்கே இருக்கே, அதான்.
நம்ம மூக்கம் பய அண்ணைக்கு வந்தான். ஒரு மாதிரி பேசறான். வாங்கிப் போட்டா நம்மது ஒரு வளைவ அமஞ்சு போகுதேன்னு நெனச்சென். நீங்க என்ன சொல்லுதிய?”
‘உஸ்’ என்றபடி முதல் வாளித் தண்ணீரைத் தொட்டியில் ஊற்றிவிட்டு, கிணற்றுக்குள் மறுபடியும் வாளியை இறங்கினார் சுப்புப்பிள்ளை. வாளியில் தண்ணீர் நிறைந்தது. நிமிர்ந்து வைத்தியரைப் பார்த்தார்.
“வே! ஒமக்கு என்னத்துக்கு இந்தப் பெரிய எடத்துப் பொல்லாப்பு? அது பெரிய எடத்துக் காரியம். மூக்கம் பய படுத பாட்டெப் பாக்கலியா! பண்ணையார்வாள்தான் கண்லே வெரலே விட்டு ஆட்ராகளே! ஒரு வேளை அது மேலே அவுகளுக்குக் கண்ணாருக்கும் – சவத்தெ விட்டுத் தள்ளும்!”
“என்னய்யா, அவுகளுக்குப் பணமிருந்தா அவுஹமட்டோ டே; அவுக பண்ணையார்ன்ன கொடிகட்டிப் பறக்குதா? அதெத்தான் பார்த்து விட்ரணும்லா! நான் அதுக்கு அஞ்சுனவனில்லெ. நாளெக்கே முடிக்கேன். என்னதான் வருது பாப்பமே!” என்று படபடத்தார் மருதப்பனார்.
“என்னமோ நாஞ் சொல்லுததெச் சொன்னேன்; உம்ம இஸ்டம்!” என்றார் பிள்ளை.
அன்று மாலை பொழுது மயங்கிவிட்டது. மேல்வானத்துச் சிவப்புச் சோதியும், பகல் முழுதும் அடங்கிக் கிடந்து மாலையில் ‘பரப்பரப்’ என்று ஓலை மடல்களில் சலசலக்கும் காற்றுந்தான் சூரியன் வேலை ஓய்ந்ததைக் குறிக்கின்றன.
குளக்கரைக்கு (ஏரிக்கரை) மேல் போகும் ரஸ்தாவில், முண்டாசு கட்டிக் கொண்டு கையில் இரண்டொரு பனை மடல்களைப் பிடித்த வண்ணம் நடந்து வருகிறார் சுப்புப் பிள்ளை.
குளத்துக்குக் கீழ்புறமிருந்து ரஸ்தாவுக்கு ஏறும் இரட்டை மாட்டு வண்டித்தடத்தின் வழியாக, வண்டிக்காரனுடைய தடபுடல் மிடுக்குகளுடன், மாட்டுச் சலங்கைகள் கலந்து புரள, குத்துக்கல்லில் சக்கரம் உராயும் சப்தத்துடன் ஒரு இரட்டை மாட்டு வண்டி மேட்டிலிருந்த ரஸ்தாவில் ஏறிற்று.
மங்கிய இருளானாலும் தொப்ளான் குரல், பண்ணையார் வண்டிதான் என்பதை நிச்சயப்படுத்தியது.
சாலையில் ஒதுங்கி நின்ற சுப்புப் பிள்ளை, “என்ன அண்ணாச்சி, இந்த இருட்லெ எங்கெ போயிட்டு வாரிய?” என்று குரல் கொடுத்தார்.
வண்டியுள் திண்டில் சாய்ந்திருந்த பண்ணையார் சிதம்பரம் பிள்ளை, “ஏடே, வண்டியை நிறுத்திக்கொ” என்று உத்தரவிட வண்டி சிறிது தூரம் சென்று நின்றது.
பிள்ளையவர்கள் உள்ளிருந்த செருப்பை ரஸ்தாவில் போட்டுவிட்டு மெதுவாக அதில் காலை வைத்து இறங்கினார்.
“கீளநத்தம் மேயன்னா இருக்காஹள்லா”
“ஆமாம் நம்ம நாவன்னா கோனாவோட மச்சினப்பிள்ளை”
“அவுஹதான்\ அவுஹளோட சமுசாரத்தோட ஒடப்பிறந்தாளெ மருந்தூர்லே குடுத்திருந்தது – அவ ‘செல்லா’யிப்போனா பதினாறு போயிட்டு வாரேன்!”
“மதினி போகலியா?”
“அவ வராமெ இருப்பாளா? கூடத்தான் வந்தா; அங்கே ஆள் சகாயம் ஒண்ணுமில்லே – இருந்துட்டு வாரனேன்னா – விட்டுட்டு வந்திருக்கேன்; இப்பொ அவ இங்கெ சும்மாதானெ இருக்கா?” என்றார்.
“ஆமாம், அதுக்கென்ன! வயசென்ன இருக்கும்?” என்றார் சுப்புப் பிள்ளை மீண்டும்.
“வயசு அப்படி ஒண்ணும் ஆகலெ – முப்பது இருக்கும்!” என்றார்.
“புள்ளெக ஏதும் உண்டுமா?… சரி, அதிருக்கட்டும். அண்ணாச்சி, ஒங்கிட்ட ஒரு சமுசாரம்லா சொல்லணும்னு நெனச்சேன். ஏங்காதுலே ஒரு சொல் விழுந்தது. ஒங்கிளுக்கு அதெத் தெரிவியாமே இருந்தா, நாயமில்லை!” என்றார்.
பணத்திற்கு ஏதோ அடிப்போடுகிறாரோ என்று பயந்த பண்ணையார் “ஏது, அனுட்டானமாச்சா?” என்று கேட்டுக்கொண்டே குளத்தினுள் இறங்கினார்.
கரைச் சரிவில் செருப்பை விட்டுவிட்டுத் தண்ணீருள் இறங்கிய பண்ணையார் பலத்த உறுமல்கள், ஓங்காரங்கள் முழங்க, கால் முகம் கழுவ ஆரம்பித்தார்.
முன்பே தம் மாலைப் பூஜை விவகாரங்களை ஒரு மாதிரி முடிவுகட்டிய சுப்புப் பிள்ளை, வேஷ்டி துவைக்கும் கல்லில் அமைதியாக உட்கார்ந்து காரியம் முடியட்டும் என்று எதிர்பார்த்திருந்தார்.
திருநீறிட்டு, திருமுருகாற்றுப்படையையும் திருவாசகத்தில் இரண்டொரு செய்யுட்களையும் மனனம் செய்துவிட்டு, “சிவா!” என்ற குரலெழுப்பிக் கரையேறினார் பண்ணையார்.
“நம்ம மருதப்பன் இருக்கான் இல்லியா, பய கொளும்புலெ ரெண்டு காசு சம்பாரிச்சிட்டான்னு மண்டெக் கருவம் தலை சுத்தியாடுது. இண்ணக்கி புதிய தெரஸர் புள்ளெவாள் கெணத்துலெ குளிச்சுக்கிட்ருக்கப்பச் சொல்லுதான்,
‘பண்ணையப் பணம்னா அவுகமட்டோ ட, ஊரெல்லாம் என்ன பாவட்டா கட்டிப் பறக்குதா?’ என்று; உங்களெ ஒரு கை பாத்துப்பிட்டுத்தான் விடுவானாம்; பாருங்க ஊரு போரபோக்கை!”
“சவம் கொலைச்சா கொலைச்சுட்டுப் போகுது! அவர் இப்ப மருத்துவர்லா! அப்படித்தான் இருக்கும் – எதுக்காம் இவ்வளவும்?”
“ஒங்க வயக்காட்டுப் பக்கம் முக்குருணி வீசம் இருக்குல்லா – நம்ம மூக்கன் பய நெலம், அதுக்குத்தான் இம்புட்டும். வாங்கப் போரேன்னு வீரியம் பேசுதான்.”
“மூக்கப்பய நெலமா?… எங்கிட்டல்லா கால்லெ விழுந்து கெஞ்சிட்டுப் போனான்; அந்த நன்னிகெட்ட நாய்க்கு ஒதவப் படாதுன்னு தான் வெரட்னேன். அவன் கால்லெ போய் விளுந்தானாக்கும்! அதுலெ என்ன வீராப்பு?”
“‘ஒனக்கு எதுக்குடா அந்த நெலம், அதெ வாங்குததுலெ பிள்ளைவாளுக்குத்தானே சௌகரியம்’ணேன். அவ்வளவுதான். இந்தவூரு புள்ளெமாரே அப்படித்தானாம்; எப்பவும் அடாபிடியாம்; அவன் கிட்ட காரியம் நடக்காதாம்!”
“அப்பிடியா சேதி! ஏலே தொப்ளான், நாங்க நடந்து வருதோம்; வண்டியைக் கொண்டுபோய் அவுத்துப் போட்டுப்புட்டு, எந்த ராத்திரியும் மூக்கன் பயலே கையோட புடிச்சா!”
“நாம வாங்குதாப்லியே காம்பிச்சுக்கப்படாது; தெரஸர் பிள்ளை வாள்தான் வேணும்னாஹள்ளா – அவக பேரச் சொல்லி வைக்கது.”
“அதெதுக்கு? கூட நாலு காசெ வீசினா போகுது. அந்த நாய்கிட்ட பொய்யெதுக்கு?”
“இல்லெ அண்ணாச்சி, உங்களுக்கு தெரியாது; நான் சொல்லுதைக் கேளுங்க!”
“ராத்திரி கடையடச்சம் பொரவு இப்படி வீட்டுக்குத்தான் வாருங்களேன், பேசிக்கிடலாம்!”
“அப்பா! அம்மைக்கி உடம்பு என்ன அப்படியே இருக்கே; நீங்க கெவுனிக்கரதில்லெ போல்ருக்கு!” என்றான் மகராஜன்.
எதிரிலிருந்த ஹரிக்கன் லைட் மீது ஒரு விட்டில் வந்து மோதியது. சிறிது மங்க ஆரம்பித்த திரியைத் தூண்டினான்.
“நம்ம கையிலே என்ன இருக்கு? இருவது வருஷமா குடுக்காத மருந்தா?” என்று மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுக் கண்களை நிமிண்டியவண்ணம் கூறினார் விசுவநாத பிள்ளை.
“நீங்க பென்ஷன் வாங்கினதோட, வைத்தியமும் உங்ககிட்ட பென்ஷன் வாங்கிட்டுதா? – நீங்களே இப்பிடிப் பேசுனா?”
“பேசுரதென்ன? உள்ளதத்தான் சொன்னேன். குடல் பலகீனப் பட்டுப் போச்சே! எது குடுத்தாலுந்தான் ஒடலோட ஒட்டமாட்டேங்குதே!”
“நான் ஒரு முறையைப் பிரயோகம் பண்ணிப் பாக்கட்டுமா? இயற்கை வைத்தியம். முதல்லே கொஞ்சம் பட்னி இருக்கணும்; அப்பொ ஒரு ‘கிரைஸிஸ்’ (வியாதி நிலையில் நெருக்கடி, கவலைக்கிடமான நிலை) ஏற்படும். அப்புறம் சிகிச்சையை ஆரம்பித்தால் பலனுண்டு.”
“என்னடா, நீ மெடிக்கல் ஸ்கூல்லெதானெ படிக்கிறே! இயற்கை வைத்தியம் எங்கெ வந்துது? வீணாக் காலத்தைக் கழிச்சு பெயிலாப் போகாதே!”
“அதுக்கும் படிக்கத்தான் செய்யரேன். இந்த முறையிலே எத்தனையோ பேருக்கு உடம்பு குணமாயிருக்கிறதே! நானெ செய்திருக்கிறனே!”
“சரி, பாரேன்! நானா வேண்டாமுங்கேன்?”
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் சவுக்கைக்கு வெளியில் செருப்புச் சப்தம் கேட்டது. தொப்ளான், ஹரிக்கன் லைட்டோ டு ஒதுங்கி நிற்க, பண்ணையார்வாளும் சுப்புப் பிள்ளையும் உள் வெளிச்சத்தில் பிரசன்னமாயினர்.
“அட, பண்ணையார்வாளா? ஏது இந்த இருட்லெ? இந்த நாற்காலியிலே உக்காரணும்; சுப்பு பிள்ளை, நீர் இந்த பெஞ்சிலே இப்டி இரியும். ஏது அகாலத்திலே?” என்று தடபுடல் காட்டி எழுந்து நின்றார் விசுவநாத பிள்ளை.
“விசேசமென்னா! இப்படி வந்தேன்! ஒங்களெ எட்டிப்பாத்துட்டுப் போகலாமெண்ணுதான் நொளஞ்சேன். ஏது மாப்ளெ எப்ப வந்தாப்லெ? ரசாவா?” என்றார் பண்ணையார். மகராஜனை மாப்பிள்ளை என்றழைப்பதில் அவருக்குப் பரமதிருப்தி.
“ஆமாம், கோடை அடைப்பு; மதியந்தான் வந்தான். ராசா, நீதான் பிள்ளைவாள் கடையிலே போயி ஒரு பொகயிலைத் தடை வாங்கிட்டு வா” என்று வருகிறவர்களுக்காகத் தாம்பாளத்தில் வைத்திருக்கும் வெற்றிலையை அடுக்கிப் பண்ணையார் முன்பு வைத்தார்.
“நான் அப்பமே கடையடைச்சிட்டனே!”
“எனக்கா இந்தச் சிருமம்? தடைப் போயிலைண்ணாத்தான் நமக்கு ஆகாதே. ஏலே தொப்ளான், செல்லத்தை வைய்யென்லே! என்னலே முளிக்கே!” என்று சுப்பு சிதம்பரம் பிள்ளைகள் ஏக காலத்தில் பேசினார்கள்.
வெளியே புறப்பட்ட மகராஜன் மறுபடியும் தூணில் சாய்ந்து உட்கார்ந்தான்.
“சவுக்கெலெயே காத்தைக் காணமே, ஊருக்குள்ள பின்ன ஏன் வெந்து நீறாகாது! அண்ணாச்சி இந்த வருஷம் காய்ப்பு எப்படி?” என்று தலையை இருட்டில் நீட்டி எச்சிலைத் துப்பிக் கொண்டே கேட்டார் சிதம்பரம் பிள்ளை.
“காய்ப்பென்ன, பிரமாதமா ஒண்ணுமில்லெ – ஏதோ வீணாக காயிரதுக்கு கெணத்துத் தண்ணி வேரடியிலே பாயிது”
“இல்லெ, ஒரு பத்து முப்பது ரோசாக் கம்பு வச்சுத் தளுக்க வச்சா பிரயோசனமுண்டு – ஒரு பயலைப் போட்டாப் போகுது” என்றார் சிதம்பரம் பிள்ளை.
பேச்சில் சோர்வு தட்ட அவர் சுப்புப் பிள்ளையைப் பார்த்தார்.
“தெரஸர் பிள்ளைவாள், ஒங்ககிட்ட ஒரு விசயமா கலந்துகிட்டுப் போகலாமுண்ணு வந்தேன் – ஐயாவும் வந்தாஹ – ஊர் விசயம் – தலை தெறிச்சுப் போய் அலயரான்கள் சில பயஹ – இப்பிடி வாருங்க” என்று எழுந்து விசுவநாத பிள்ளையை வெளியில் அழைத்துக் கொண்டு போனார் சுப்புப் பிள்ளை.
“ஆமாம், ஆமாம், சரிதான் வாங்குதவன் பாடு குடுக்கவன் பாடு, நமக்கென்ன? அப்படியா! பிள்ளைவாளுக்கு எடைலேயா வந்து விளுந்தான் அப்பமே எனக்குத் தெரியுமே காறை வீடு கட்னா கண்ணவிஞ்சா போகும்?” என்ற விசுவநாத பிள்ளையின் பேச்சுக்கள் இடைவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தன.
இருவரும் சில நிமிஷங் கழித்துச் சவுக்கைக்குள் ஏறினர்.
“என்ன!” என்று சிரித்தார் பண்ணைப் பிள்ளை.
“இதுக்கு நீங்க எதுக்கு வரணும்? சொல்லிவிட்டா நான் வரமாட்டனா? ராசா, நீ வீட்டுக்குப் போயி கண்ணாடி அலமாரியிலே சாவிக் கொத்தை வச்சிட்டு வந்துட்டேன் எடுத்தா அப்பிடியே அம்மைக்கி அந்த டானிக்கை எடுத்துக் குடு எல்லாம் நாளைலேயிருந்து ஒன் வயித்தியத்தெப் பாக்கலாம்” என, மேல்வேஷ்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டு வெளியேறினான் மகராஜன்.
“வீட்டுலே உடம்புக்கு எப்படி இருக்கு – தாவளையா?… நம்ம மாப்ளைக்கி இன்னம் எத்தனை வருஷம் படிப்பாம்? காலா காலத்லெ கலியாணத்தெ கிலியாணத்தெ முடிச்சுப் போட வேண்டாமா?”
“நானும் அப்பிடித்தான் நெனச்சேன். அடுத்த வருசத்தோட படிப்பு முடியிது… வார தை மாசம் நடத்திப் போடணும்னு உத்தேசம்… மூக்கம் பயலெ எங்கே இன்னம் காணம்?” என்று வெளிக்குரலை எதிர்பார்த்துத் தலையைச் சாய்ந்தபடி கேட்டார்.
“சவத்துப் பய இப்பம் வருவான் ராத்திரி பத்திரத்தை எளுதி முடிச்சுக்கிடுவோம் காலெலெ டவுனுக்குப் போயி ரிஸ்தர் பண்ணிப் போடுதது கூச்சல் ஓஞ்சப்பரம் பத்திரத்தெ எம்பேருக்கு மாத்திக்கலாம்.”
“அது அவாளுக்குத் தெரியாதா? காரியம் முடிஞ்சாப் போதும்” என்றார் சுப்புப் பிள்ளை.
நாலைந்து நாள் கழிந்து ஒரு நாள் மத்தியானம். நல்ல உச்சி வெய்யில் ‘சுள்’ என்று முதுகுத் தோலை உரிக்கிறது.
வயல் காட்டு வரப்புகளில் படர்ந்து கிடக்கும், அவருக்கு மட்டும் தெரிந்த, சில மூலிகைப் பச்சிலைகளைக் கை நிறையப் பிடுங்கி வைத்துக் கொண்டு, குளக்கரை மேல் போகும் ரஸ்தாவில் ஏறி, மறுபுறம் செங்குத்தாக இறங்கும் கல்லடுக்கிய சரிவு வழியாக இறங்கி, மருத்துவ மருதப்பனார் பச்சிலைகளைக் குளத்திலிட்டு அலச ஆரம்பித்தார்.
தலையில் முக்காடாக அணிந்திருந்த துணி, விலகி விலகிக் குனிந்து வேலை செய்வதற்கு இடைஞ்சல் கொடுத்ததால் நிமிர்ந்து நின்று தலையில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு மறுபடியும் குனிந்தார்.
“வைத்தியரய்யா! என்ன, தெரஸர், பிள்ளைவாள் ராவோட ராவா மூக்கன் நெலத்தைக் கொத்திக்கிட்டுப் போயிட்டாகளாமே!” என்ற குரல் மருத மரக்கிளை ஒன்றிலிருந்து கேட்டது.
அண்ணாந்து பார்த்தார். மருதக் கிளை ஒன்றிலிருந்து கீழே நிற்கும் ஆடுகளுக்குக் குழை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் வேலாண்டி.
“ஊர் வெள்ளாளன்மாரு கூடிக்கிட்டா என்ன? ஆனைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வரும். பண்ணையப் பிள்ளைவாளுக்கு அந்த நெலம் வந்துதான் நெரயணுமாக்கும்; வாங்கினா ஒரே வளவாப் போயிடுமேன்னு நெனச்சேன். சவத்துக்குப் பொறந்த பயஹ பேச்சேத் தள்ளு!”
“ஆமாம். மூக்கம் பய கொளும்புக்கில்லா போயிட்டானாம்… அந்தப் பயலுக்கு என்ன அவசரம் இப்பிடி அள்ளிக்கிட்டுப் போவுது.”
“மூதி தொலைஞ்சுட்டுப் போகுது. அண்ணெக்கி வந்து மூக்காலே அளுதானேன்னு பாத்தேன் ஊர்லே தேவமாருன்னு பேர் வச்சுக் கிட்டு பூனையாட்டம் ஒண்டிக்கெடந்தா என்னதான் நடக்காது.
புள்ளைமாருக்குன்னுதான் இந்த வூரா. அப்போ நாங்க போயிருந்தோம்… அதெத்தான் அத்துப் பேசட்டுமே என்னடே தொப்ளான், எங்கே அவசரம்?” என்றார் வைத்தியர்.
தலை தெறிக்க ஓடிவந்த தொப்ளான், “நீங்க இங்கியா இரிக்கிய, தெரஸய்யா சமுசாரத்துக்குத் தடபுடலாக் கெடக்கு, ஒங்களெ சித்த சத்தங்காட்டச் சொன்னாவ – டவுன் பஸ்ஸு போயிட்டுதா? பாத்தியளா?” என்று பஸ் எதிர்பாக்கப்பட்ட திசையை வெறிக்கப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“அதுவும் அப்பிடியா! காத்தெக் கட்டிப்போட முடியுமா? வேலாண்டி, நான் அப்பம் ஒரு சேதி சொன்னேனே பாத்தியா – பாத்துக்கோ!”
ஈரம் சொட்டும் பச்சிலை முடிப்போடு குறுக்குப் பாதை வழியாக ஊரை நோக்கி நடந்தார் மருத்துவர்.
“என்னடே! தொப்ளான் – நீ எங்கலே போரே?”
“நான் ஒரண்டையும் போகலே பட்டணத்து எசமான் பெரிய டாக்குட்டரெக் கூப்பிட டவுனுக்குப் போராவ.”
“என்னடே பஸ் வந்துதா?” என்று கொண்டே ‘மெட்ராஸ்’ மெருகிழந்து, கவலை தேங்கிய முகத்துடன் வந்தான் மகராஜன்.
“இல்லே எசமான், ஒண்ணையும் காங்கலியே!” என்றான் தொப்ளான்.
நேற்றிரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு ஸ்ரீமதி விசுவநாத பிள்ளை – அதாவது ‘சாலாச்சி ஆச்சி’ – இறந்துபோனாள். கிராமம் என்றால் கேட்கவா வேண்டும், இழவு வீட்டுச் சம்பிரமத்தை? அப்பொழுது பிடித்து ஓயாது ஒழியாது அழுகையும் கூச்சலும்.
வெளியே விசுவநாத பிள்ளை தலை குனிந்தவண்ணம் பெஞ்சியில் உட்கார்ந்திருக்கிறார். மகராஜன் தூணில் சாய்ந்து தலை குனிந்த வண்ணம் நகத்தை நிமிண்டிக் கொண்டிருக்கிறான்.
வெளிப் பெஞ்சியில் பண்ணையார் சிதம்பரம் பிள்ளை தமது ஓயாத வெற்றிலைத் துவம்சத்துடன் துஷ்டிக்கு வருகிறவர்களோடு பேசியும், சிற்றாள்களையும் சுப்புப் பிள்ளையையும் வேலை ஏவிக்கொண்டும் இருக்கிறார்.
சாலாச்சியம்மையின் தேகம் பலஹீனப்பட்டுப் போயிருந்தாலும் மகராஜனது இயற்கை சிகிச்சை பிரயோகிக்கப்பட்டிராவிட்டால் இவ்வளவு சீக்கிரத்தில் விழுந்துவிட்டிருக்காது.
‘கிரைஸிஸை’ எதிர்பார்த்துப் பூர்வாங்க சிகிச்சை நடத்தினான் மகராஜன். வியாதியே ‘அன்னத் துவேஷமாக’ இருக்கையில் பட்டினி முறை உடலை ஒரேயடியாகத் தளர்த்திவிட்டது. இரண்டே நாள் உபவாசம் நாடியையும் அரைகுறையாக்கியது.
அந்த நிலையில்தான் மருதப்ப மருத்துவனார் அழைக்கப்பட்டார். கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “இன்னும் நாற்பத்தெட்டு நாழிகை கழித்துத்தான் ஏதும் சொல்ல முடியும்; அதுவரை உடம்பில் சூடு விடாமல் தவிட்டு ‘ஒத்தடம்’ கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்” என்று அபிப்ராயம் சொல்லிவிட்டு வெளியேறினார்.
இரவு எட்டு மணிக்கு வந்த டாக்டர் கொடுத்த இரண்டு ‘இஞ்செக்ஷேன்கள்’ சுமார் ஒரு மணிநேரம் கவலைக்கிடமான தெளிவை உண்டாக்கின. ‘மகனுக்குப் பண்ணையப் பிள்ளை மகளை முடிச்சுவைக்கப் பார்க்கக் கொடுத்து வைக்கலியே’ என்ற ஏக்கத்தோடு ஆவி பிரிந்தது.
“ஏலே தொப்ளான், என்னலே இன்னங் குடிமகனைக் காணலெ; போனியா?” என்று அதட்டினார் பிள்ளை.
“வூட்லெதான் இருந்தாரு; ‘நீ போ, இதாவாரென்’னு சொன்னாரு!” என்றான் தொப்ளான்.
“என்ன இன்னமா வர்ரான் – ரெண்டு மணி நேரமாச்சே நீ போய் இன்னொரு சத்தங் குடு”
இரண்டு தென்னங் கீற்றுகளை இழுத்துவந்து தொப்பென்று போட்ட பலவேசம், “மாடசாமியத்தானெ கேக்கிய? அவன் வைத்யரு வீட்டெப் பாத்துப் போகுததெக் கண்டேன்!” என்றான்.
“நீதான் போயி அவனெ இப்படிக் கையோட கூட்டியா… நேரம் என்ன ஆகுது பாரு…” என்றார் சிதம்பரம் பிள்ளை.
“ஆகட்டும், எசமான்!” என்று சென்றான் பலவேசம்.
கால் மணி கழித்து, தனியாகவே திரும்பி வந்தான் பலவேசம். ஆனால் ஓடி வந்தான்.
“எசமான், நான் போனேன். வெளிலே மருதப்பரு நிண்ணுக்கிட்டிருந்தாரு. ‘இனிமே, குடிமகன் இந்த வேலைக்கு வரமாட்டான்; அவன் தொளில் இதில்லே; இனிமேச் செய்ய முடியாதாம்ணு போய்ச் சொல்லு’ன்னு சொல்லிப்பிட்டாரு!” என்றான் பலவேசம்.
“மாடசாமியா அப்படிச் சொன்னான்?” என்று தென்னங்கீற்றைத் தடுக்காக முடைந்துகொண்டிருந்த சுப்புப் பிள்ளை எழுந்தார்.
“இல்லெ, மருதப்பருதான் சொன்னாரு.”
“அவன் சொன்னான், இவன் கேட்டுகிட்டு வந்தானாம். நீ சாதி மறவனாலே! அப்பிடியே அலகிலே, ரெண்டு குடுத்துக் கூட்டியாராமே! என்ன வேலாண்டி, நீ என்ன சும்மா நிக்கே?
ரெண்டு சிறுக்கி மகன்களையும் பின்கட்டுமாறாக் கட்டிக் கொண்டா – முதுகுத் தொலியே உறிச்சுப்பிடரேன்!” என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.
“என்னண்ணாச்சி, நாலு காசுக்குப் பால்மார்றான் போலே, விசிறி எறிஞ்சாப் போகுது…” என்று சமாதானம் செய்ய வந்தார் விசுவநாத பிள்ளை.
“ஒங்கிளுக்கு ஊரு வளமே தெரியாது; அம்பட்டப் பயலா காரியமாத் தெரியலியே! ஏலே, நீ புளிய மிளார் நல்ல பொடுசாப்பாத்துப் பறிச்சுக்கிட்டு வாலே, தொப்ளான்!” என்று மறுபடியும் கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.
கால்மணிக்கூறு கழிவதற்கு முன் சிதம்பரம் பிள்ளை சுக்ரீவாக்ஞையின் பலன் ஏக இரைச்சலோடு விசுவநாத பிள்ளை வீடு நோக்கி வந்தது.
மேல்துண்டை வைத்துப் பின்கட்டுமாறாக மருதப்பரையும், மாடசாமியையும் கட்டிக் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான் வேலாண்டி.
“திரும்பினியா, பாளெ யறுவாளெக்கொண்டு தலையைச் சீவிப்புடுவேன் – நடலெ! என்ன முளிக்கே!” என்ற அதிகாரத் தொனி பின்னால் வயிற்றிலடித்துக் கொண்டு ஓலமிட்டுவரும் நாவிதக் குடும்பத்தின் இரைச்சலுக்கு மேல் கேட்டது.
“ரெண்டு பயல்களையும் அந்தத் தூணோடு வச்சுக்கட்டு! என்னலே மாடசாமி, சோலியப் பாக்கியா இன்னமும் வேணுமா?” என்றார் சிதம்பரம் பிள்ளை.
“முடியாதையா!” என்று முணுமுணுத்தான் மாடசாமி.
உள்ளே அழுதுகொண்டிருந்த பெண்களும் ரகளை பார்க்க வந்துவிட்டனர்.
“மிளாரெ எங்கடா?” என்று ஒன்றை வாங்கி முழங்காலிலும் முதுகிலும் மாறி மாறிப் பிரயோகித்தார். அவன் வலி பொறுக்கமாட்டாமல் குய்யோ முறையோவென்று கத்த ஆரம்பித்தான்.
அவன் மனைவி போட்ட ஓலத்தால் மருதப்பர் தூண்டுதல் என்பதும் எல்லோருக்கும் வெளியாயிற்று.
“பிள்ளைமாருன்னா என்ன கொம்பு மொளச்சிருக்கா? பிரிடீஸ் ராச்சியமா என்ன? ரொம்ப உறுக்கிரஹளே! மனிசனைக் கட்டிப் போட்டு அடிக்கதுன்னா நாய அநியாயமில்லையா – இண்ணக்கி சிரிக்கிரவுஹ நாளைக்கி வாரதையும் நினைச்சுப் பாக்கணும்!” என்றார் மருதப்பர்.
“நாசுவப் பயலா காரியமாத் தெரியலெயெ; வேலாண்டி, அவன் மொளியை (முழங்காலை)ப் பேத்துக் கையிலெ குடு! அவனுக்குக் குடுக்கிற கொடைலே இவன் சங்கெத் தூக்கணும்; என்ன பாத்துக்கிட்டு நிக்கே?”
வேலாண்டி கையிலிருந்த குறுந்தடியை ஓங்கி முழங்கால் குதிரையில் ஒரு போடு போட்டான். “ஐயோ அம்மா! என்னியப் போட்டுக் கொல்ராண்டோ ! ஊர்லே நாயமில்லியா! நீதியில்லியா!” என்று கதறினார் வைத்தியர்.
விசுவநாத பிள்ளை ஓடியே வந்து வேலாண்டியிடமிருந்த குறுந்தடியைப் பிடுங்கிக் கொண்டு, “அண்ணாச்சி, பாக்கச் சகிக்கலே – காரியத்தைப் பாத்துச் செய்யணும். சவத்துப்பய போரான். அவ அதிட்டம் இப்படியிருந்தது; இந்தப் பயல்களுக்கும் இப்படிப் புத்தி போகுது” என்று ஆரம்பித்தார்.
“எங்கை எப்படியிருக்குன்னு பார்லே!” என்று மறுபடியும் ஒரு குத்துவிட்டான் வேலாண்டி. மருதப்பன் பல்லில் முன்னிரண்டும் விழுந்துவிட்டன.
ரத்தங் கண்டதும் பீதியடித்துப் போன மாடசாமி, கண்களில் நீர் பெருக, சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தான்.
“சவத்தெ அவுத்து விடுடா! இந்தத் தெசேலே தலைவச்சுப் படுத்தா மாறுகால் மாறுகை வாங்கிப் போடுவேன், ஓடிப்போ நாயே!” என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை. அவிழ்த்துவிடப்பட்ட மருதப்பரும் மனைவியின் கைத்தாங்களில் நொண்டிக் கொண்டே தூரத்தில் சென்று,
ஒரு பிடி மண் எடுத்து வானத்தில் எறிந்து, “இப்பிடி சுட்ட மண்ணாப் போகணும்! என் வயிரெரியிராப்லே போணும்” என்று ஏச்சு அழுகையுடனே கூவிவிட்டுச் சென்றார்.
அப்படியும் இப்படியுமாகப் பிரேத சம்ஸ்காரம் முடிந்து திரும்ப மணி நான்காகிவிட்டது.
மாடசாமி முதுகுவலிக்குக் காரணமே வைத்தியர் மருதப்பர் அவனுக்கு முன்பு கொடுத்திருந்த சிறுகடன் தான் என்றும், ‘அதைத் திருப்பிக் கொடு அல்லது இந்த வேலை செய்’ என்று போதிக்கப்பட்டது என்றும் சிதம்பரம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது. அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
“போலீஸுக்கு கீலீஸுக்கு எட்டுச்சுன்னா அவன் தலை அவன் களுத்திலே இருக்காது!” என்று மருதப்பருக்கு வேலாண்டி மூலம் எச்சரித்தனுப்பிவிட்டு, விசுவநாத பிள்ளைக்குத் தக்க சமாதானங்கள் சொல்ல ஆரம்பித்தார்.
மனைவியையிழந்தது, தெருக்கூத்தாகக் கிரியை நடந்தது, உத்தியோக காலத்தில் சர்க்காரின் அதிகார எல்லையைத் தெரிந்து கொண்டிருந்தது – எல்லாம் அவரை ஒரேயடியாகப் பீதியடிக்க வைத்துவிட்டன.
பரஸ்பரப் பேச்சில் மனைவியின் கடைசி ஆசையையும் சொல்லி வைத்தார் விசுவநாத பிள்ளை, பேச்சுவாக்கில்.
“நீங்க சொன்னாப்லெ வர்ர தை மாசம் முடிச்சிப்புடுவம்!” என்று அந்தப் பேச்சை முடிவு கட்டினார் பண்ணையார்.
மருதப்பர் அன்று வீட்டுக்குள் சென்று படுத்தவர், மானத்தாலோ மனக்கொதிப்பாலோ அல்லது அடி பலத்தாலோ வெளியேறவில்லை.
இரகசியமாக இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பிராது அனுப்பினார். ஏற்க மறுத்து எச்சரித்து விரட்டப்பட்டான் போன ஆள். ஊரே திரண்டு எதிர்க்கும் பொழுது பணமிருந்து என்ன பயன்?
போதாக் குறைக்குத் தாழ்த்தப்பட்ட, கிராமங்களில் அவமானகரமானது என்று கருதப்படும் ஒரு தொழிலைச் செய்யும் ஜாதி! சில சமயத்தில் ஊரையே அழித்துவிட வேண்டும் என்ற நபும்ஸகக் கோபம் அவரைத் தகித்தது. அடுத்த நிமிஷம் ஒரே மலைப்பு!
சம்பவமும், செய்தி பாதி வதந்தி முக்காலாக ‘உஸ் ஆஸ்’ என்று பக்கத்தூர்களில் பரந்தது. வேளாளருக்கு நெஞ்சு விரிந்தது. “சவத்துப் பயல்களைச் சரிக்கட்டிப் பாருங்க, இல்லாட்டா அங்கயெப்போல மலையாளத்து அம்பட்டனெ குடியேத்திப் போடுவோம்.” என்று மூட்டை கட்டி வந்து இலவச அபிப்பிராயம் சொல்லிவிட்டுச் சென்றனர் பலர்.
மகராஜனுக்கு அழகிய நம்பியாபுரத்தில் இருப்பே கொள்ளவில்லை. ‘எப்பொழுதடா பதினாறு கழியும், சென்னைக்குப் போய்விடுவோம்’ என்ற துடிதுடிப்பு.
இப்படியிருக்கையில் மருதப்பரைக் காணோம் என்ற பேச்சுக் கிளம்பியது. இது ஊர்க்காரருக்கே அதிசயத்தை விளைவித்தது. வீடு அடைத்துப் பூட்டிக் கிடந்தது. எங்கு போனார், எப்படிப் போனார் என்பதே ஆச்சரியம்.
சிதம்பரம் பிள்ளை இதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. “சவம் தன்னைப் பயந்து கொளும்புக்கு ஓடியிருக்கும்!” என்று திருப்தி கொண்டார்.
விசுவநாத பிள்ளைக்கு இப்பொழுது சாப்பாட்டுக்குக் கூட வீட்டுக்குப் போவதென்றால் வேம்பாகிவிட்டது. மகராஜனே சமயாசமயங்களில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவான். “அப்பாவைத் தனியாக இங்கே விட்டுவிட்டுப் போவதா, உடன் வந்தால் என்ன?”
என்று நினைத்தான். ஆனால் சவுக்கை மோகம் கொண்ட பிள்ளையவர்கள் மறுத்துவிட்டார்கள். பிள்ளையும் பண்ணையாரும் அன்னியோன்னியம். பிரிந்து காண்பது துர்லபம். அப்படி ஒட்டிக் கொண்டனர்.
சிதம்பரம் பிள்ளையின் முரட்டுத் தைரியத்தில் டாக்டருக்கு நிலைதளராத நம்பிக்கை; டாக்டரின் குருட்டுக் குழந்தைத் தன்மையில் அவருக்கு ஒரு முரடனின் பிரேமை. சுப்புப் பிள்ளைக்கு நினைப்பு புது மாதிரியாக ஓடியது.
இவ்வளவு கோளாறுக்கும் அந்த நிலந்தான் காரணம் என்ற உண்மையைக் கண்டுபிடித்து, பிள்ளையவர்கள் காதில் ஓதினார். அதிரடித்துப்போன நெஞ்சில் இது சடக்கென்று வேரூன்றியது.
அதனால் அவரையறியாது வெளிக்காட்டிக் கொள்ள தைரியமற்ற ஒரு பயங்கர வெறுப்பும் உறவாடியது. அதை வைத்தே தன் மகளை இரண்டாந்தாரமாக டாக்டருக்கு முடித்துவிட்டால் என்ன என்று கோட்டை கட்டினார் சுப்புப் பிள்ளை. சொத்துக்குச் சொத்தாச்சு. இந்த அல்லற் பிழைப்பும் ஒழியும்.
பதினாறும் கழிந்தது. சமயம் பார்த்து விதை ஊன்றினார் சுப்புப் பிள்ளை. பயிரிட வேண்டியதுதானே பாக்கி! தானாகவே முளைவிடும் என்பதில் சுப்புப் பிள்ளைக்கு அபார நம்பிக்கை.
அடுக்களைத் தாலி கட்ட வைத்தால் போகிறது!
பதினாறு முடிந்த ஐந்தாவது நாள் விடியற்காலம் மூன்றரை மணி. முண்டிதமான தலையுடன் பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கிறான் மகராஜன். கூடவே தகப்பனாரும், பண்ணைப் பிள்ளையும், சுப்புப்பிள்ளையும் நிற்கின்றனர்.
பஸ் வந்து நின்றது. இருட்டில் ஒருவர் இறங்கினார்.
மகராஜன் ஏறினான்; சாமான்களும் ஏற்றப்பட்டன. வண்டி புறப்பட்டது.
“போனதும் லெட்டர் போடு!” என்றார் விசுவநாத பிள்ளை.
“என்ன தெரஸர் பிள்ளையா? யாரு போராஹ?” என்றது அந்தப் புதிய குரல்.
“மரைக்காயர்வாள்! ஏது இப்படி!”
“பண்ணையார்வாளெப் பாக்க வந்தேன்; அன்னா, அவுஹளே நிக்காஹளே! நீங்க மூக்கன்கிட்ட வாங்கினிஹளாமில்லா, அந்த நெலத்தை எனக்கு முன்னாலேயே அடமானம் வச்சிருந்தான் – சமுசாரத்தைச் சொல்லிப்புட்டுப் போகலாமுண்ணு வந்தேன்.
நம்ம வைத்தியர்வாளும் அவுஹ பொஞ்சாதியும் நேத்துத்தான் இஸ்லாத்தைத் தளுவினாஹ! இந்த பஸ்லேதான் நம்ம கடெலே மானேசராயிருக்க கொளும்புக்குப் போராஹ!” என்றார் மரைக்காயர்.
“கோடு இருக்கே, நடத்திப் பார்ப்போமே!” என்றார் சிதம்பரம்பிள்ளை.
எழுத்தாளர்: புதுமைப்பித்தன்