குப்பனின் கனவு புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kuppanin kanavu!

0

குப்பனின் கனவு புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kuppanin kanavu!

அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தால்?

குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன்.

வண்டியை மேற்கும் கிழக்குமாக இழுத்துச் சென்றதுதான் மிச்சம். ஒரு சத்தமாவது கிடைக்கவில்லை.

மேலெல்லாம் நனைந்துவிட்டது. தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி – அது எந்த வெள்ளைக்காரன் போட்டதோ – அதுவும் தொப்பலாக நனைந்துவிட்டது.

தொப்பியிலும் உள்பக்கம் ஈரம் சுவரியது என்றால், வேஷ்டியைக் கூட பிழிந்துகட்ட நேரமில்லை. அவ்வளவு ஆவல்.

ஒரு நாலணா கிடைத்தால் வீட்டிலே எறிந்துவிட்டாவது முடங்கலாம். போகிற பெரிய மனிதர்களுக்கு ரிக்ஷா என்றால் மழையில் கசந்து கிடக்கிறது.

அந்தத் தெருமூலையில் நிற்கிற பிச்சைக்காரன் பாடு குஷிதான். பிச்சைக்காரனாக இருந்தால் கூட சீ என்ன மானங்கெட்ட பிழைப்பு!

குப்பன் பொருளாதார சாஸ்திரியல்ல; பொதுவுடைமைக்காரனல்ல. இத்தனை நாளும் அவன் பல்லை இளித்துக்கொண்டு “ஸார்”, “ஸார்” என்ற, சட்டைபோட்ட பேர்வழிகளைக் கண்டால் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. திருட்டுப் பசங்கள்! ஒரு பயலாவது ஏறக்கூடாதா?

“ஸார்” என்று ஒருவரிடம் வண்டியைத் திருப்புகிறான்.

அவர் “வேண்டாமப்பா” என்று கொண்டே டிராமில் ஏறிக்கொண்டு விடுகிறார்.

அந்த மனிதனைக் கிழித்துவிடலாமா என்ற கோபம்.

வண்டியை ஸென்ட்ரல் பக்கம் இழுத்துக் கொண்டு செல்லுகிறான். மனதிலே என்ன என்னவோ ஓடுகிறது. இப்பொழுது ஒரு மொந்தை சாராயம் அடித்தால் என்ன குஷியாக இருக்கும்! நாவில் ஜலம் ஊறுகிறது.

‘மெட்ராஸ் பூராவுமே வேகமாக இழுத்துக்கொண்டு ஓடலாமே’ என்று அவனுக்குப் படுகிறது. ஆமாம்! இந்த தொலையாத வேலை.

குப்பன் பெண்டாட்டி நாலு காசு பார்க்காமலா இருப்பாள். அவளும் கொஞ்சம் ‘தொழில்’ நடத்துகிறவள்தான். பிறகு “எந்த பத்தினியா இருக்கா?”

அவனுக்கும் தெரியும். அவனுக்குத் தெரியும் என்று அவளுக்கும் தெரியும். அவள் நாலு காசு பாத்திருந்தா வீட்டுக் கவலை ஒயுஞ்சுது இவனுக்கு அந்த நாலணா கிடைத்தால் சாராயக் கடைக்காச்சு.

குப்பன் வண்டியை இழுத்துக் கொண்டு போகிறான். முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி ஓயாமல் தூறல் விழுந்து சொட்டிக் கொண்டிருக்கிறது.

சில சமயம் மூக்கில் போகாமல் தும்மிக் கொள்கிறான் வண்டியும் சடசடவென்று அவன் எண்ணத்திற்குத் தாளம் போடுகிறது.

‘அந்த டிராமிலே ஏர்ன ஆசாமி மாதிரியிருந்தால்”

அவ்வளவுதான்

குப்பன் வண்டியிலே குஷியாக உட்கார்ந்திருந்தான்.

மேலே கோட்டு, உள்ளே சட்டை மடியிலே காசு. கையிலே பீடி இல்லை சிகரெட்டு வண்டியை இழுப்பதும் குப்பன் தான் குப்பாயியும் உட்கார்ந்துகொண்டால் ஸோக்காக இருக்கும். அவதான் ஊட்லெ இருக்கிறாளே

‘குப்பா, வண்டியெ வேகமா இஸ்திகினுபோ சாராயக் கடை இல்லெடா வெள்ளைக்காரன் குடிக்கர எடத்துக்கு ஒரு மிஸிகூட.

‘வண்டி போய் ஒரு மாளிகை முன்பு நிற்கிற மாதிரி குப்பம் இறங்கி குப்பனுக்குக் காசு கொடுக்கிறான். இந்தாடா நாலணா கூட ஓரணா எனாம்! உம் உள்ளே போகிறான் உள்ளே ஸோபா விசிப்பலகை நாறுகட்டில் ஸோக்காத்தான் இருக்குது ‘குப்பாயி’ என்று கூப்பிடுகிறான்.

‘போடா குப்பா. வேலை இக்குது’ என்று குப்பாயி வருகிறாள். அப்பொழுது ட்ராமில் ஏறிய கனவான் வருகிறார். ‘ஏண்டா குப்பா ஏன் வூட்லே ‘போசாமி அதெல்லாம் அந்தக் காலம் மலையேறிப் போச்சு அண்ணைக்கி ஏமாத்தலேயோ? ஏய்! பூடு. அப்படி முழி அப்போ ஏமாத்னப்ப எப்படி இருந்தது?

குப்பாயி, வெளிலே புடிச்சுத் தள்ளு அவனை. வா ஒனக்கு வேணும்னா நாலணா எடுத்துக்கினு பேசாதே ஓடிப்போ. கூச்சப் போடாதே, இது குப்பாயி வூடு. தெரிஞ்சிதா. நீ வேண்ணா வெளிலே ரிக்ஸாக்குது; இஸ்து பொயிச்சிகோ.

‘ஏண்டா முழிக்கிறே! போலீசைக் கூப்பிடுவேன்.’

படீரென்ற அறை. திடுக்கிட்டு நிற்கிறான். வண்டி லாந்தல் கம்பத்தில் மோதிக்கொண்டது.

“என்ன ரிக்ஷா, பிராட்வேக்கு வாரியா?” என்றார் ஒருவர்.

“ஏறு சாமி!”

“என்னா குடுக்கரே?”

“நாலணா!”

குப்பனுக்கு சற்றுமுன் இழந்த முதலாளிப் பதவியைவிட அந்த நாலணா மிகுந்த களிப்பைத் தந்தது.

நாலணா!

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொ-லை(காரன்) கை புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – kolaikaran kai!
Next articleகுற்றவாளி யார்? புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kutravali yar?