பொய் – லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai Poi – lijonit aandhriv – rusiya!

0

பொய் – லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai Poi – lijonit aandhriv – rusiya!

“நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!”

“அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது.”

இப்பொழுதும் பொய் சொன்னாள். உண்மையில் நான் கூச்சல் போடவில்லை. மெதுவாகத்தான் சொன்னேன். அவளது கைகள் என் கைக்குள்ளிருந்தன. ஆனால் அந்தப் ‘பொய்’ என்ற வார்த்தை நாக சர்ப்பத்தின் சீறல் மாதிரி என் உதட்டை விட்டுப் புறப்பட்டது.

“நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னை நம்பத்தான் வேண்டும். இப்பொழுதாவது…” என்று எனக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். நான் அவளை மார்புறத் தழுவுவதற்காகக் கைகளை எடுக்குமுன் சென்று விட்டாள்.

நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் பாதி இருள். நான் அவள் பின்னாக, விருந்தினர்கள் கூடியிருந்த அறைக்குள் சென்றேன். விருந்து முடிவாகி எல்லோரும் புறப்பட வேண்டிய நேரம். இந்த விருந்து இங்கு நடக்கிறதென்று எனக்கெப்படித் தெரியும்? “நீயும் அங்கு வரலாம்” என்றாள்.

அங்கு நடந்த நர்த்தனத்தைச் சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் யாரும் நெருங்கவில்லை. என்னிடம் யாரும் பேசவில்லை. அங்கிருந்தவர்களுக்கு என்னைத் தெரியாது. நான் வாத்தியக்காரர்கள் பக்கத்திலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன்.

எனக்கு நேராக அந்தப் பித்தளைக் குழல்காரன் உட்கார்ந்துகொண்டு வாசித்தான். அவனது குழல் ஒவ்வொரு நிமிஷமும் “ஹோ”, “ஹோ”, “ஹோ” என்று என் காதில் சப்த அலைகளால் இடித்துக் கொண்டே இருந்தது.

சிற்சில சமயம் என் பக்கத்தில் சுகந்த வாசனை தவழ்ந்தது. அருகில் அவள்தான். மற்றவர்கள் அறியாது என்னிடம் வருவதற்கு என்ன சாமர்த்தியம் செய்தாளோ! ஒரு நிமிஷம், ஒரு வினாடி, அவளது கரங்கள் எனது உடலைத் தழுவும், அவளது தோள் எனது தோளில் சற்று அழுத்தும், ஒரு வினாடி குனிந்து எனது கண்களால் வெள்ளுடையிலிருந்து எழும் வெண்மையான மாசு மருவற்ற கழுத்தை நோக்குவேன்; சற்று நிமிர்ந்து அவளது முகத்தை – வெண்மையான, மாசுமருவற்ற, சத்தியத்திற்கு இருப்பிடம் போன்ற முகத்தை – நோக்குவேன்.

அவள் முகம், கல்லறைகளின் மீது செதுக்கப்பட்டிருக்குமே, அந்தத் தெய்வப் பெண்கள், அவர்களுடைய முகத்தை என் நினைவிற்குக் கொண்டு வந்தது. அவள் கண்களில் நோக்கினேன். அவள் கருவிழிகள் நான் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னும் அதிகக் கருமையாக, எனது புலனுக்கு, அர்த்தத்திற்கு, எட்டாதபடி நோக்கின.

ஒருவேளை, நான் சிறிது போதுதான் அவற்றுள் பார்த்திருக்கலாம் போலும்! ஆதலால்தான் எனது ஹிருதயம் அதில் சிறிதாவது தனது ஆசையைப் பதிய வையாது போயிருக்கலாம். ஆனால் எல்லையற்ற அன்பு, உணர்ச்சி என்பவற்றின் அர்த்தத்தை, அவற்றின் சக்தியை, அவற்றின் வேகத்தை, அவற்றின் பயங்கர உண்மையை அப்பொழுதுதான் அறிந்தேன்.

அவள் கண்களினின்றும் பாய்ந்த ஒளி ரேகையிலே எனது உயிரானது அவளிடம் மெதுவாக இழுக்கப்படுவதாக எனக்குப் பட்டது.

அதிலே, அந்த சுகத்திலே, ஒரு பயம், ஒரு வலி; என்னையே எனக்கு அந்நியனாக்கியது; என்னைத் தமியனாக்கியது; என்னை உயிரற்ற சவம் போலாக்கிவிட்டது.

பிறகு என்னை விட்டுத் தனியாகப் போய்விடுகிறாள். அதுவும் என்னுடைய உயிருடன், அந்த நெட்டையான அந்நியனுடன் நர்த்தனம் செய்ய. அவனுடைய நடையுடை பாவனைகளைக் கவனித்தேன்.

அவனுடைய பூட்ஸின் வளைவுகளை, அவனுடைய நாட்டியத் திறமையை, தொங்கி ஆட்டத்தில் அலையும் அவனது சிகையை, கவனிக்கக் கவனிக்க, என்னை எனது உணர்ச்சிகள் சுவரோடு சுவராக ஒண்ட வைத்து, அந்தச் சுவரைப் போல, என்னையும் உயிரற்றவனாக்கி விட்டது.

நெடு நேரமாகிவிட்டது.

விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கவாரம்பித்தனர். உடனே நான் அவளிடம் சென்று, “போவதற்கு நேரமாகவில்லையா? போகும் பொழுது நான் உன்னுடன் வருகிறேன்” என்றேன்.

அவள் ஆச்சரியமடைந்தவள் போல் புருவத்தைச் சற்று உயர்த்தினாள்.

“நான் அவருடன் தான் போகிறேன்,” என்று அந்த அந்நியனைச் சுட்டிக் காண்பித்தாள். அவன் எங்களைக் கவனிக்கவில்லை. யாருமற்ற ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று என்னை முத்தமிட்டாள்.

“நீ பொய் சொல்லுகிறாய்!” என்று மெதுவாகக் கூறினேன்.

“நாளைக்கு நாம் சந்திப்போம். நீ அவசியம் வரவேண்டும்” என்பதுதான் அவள் பதில்.

நான் வீட்டிற்கு வண்டியில் செல்லும்போது விடியற்காலமாகி விட்டது. சற்றுப் பச்சைப் பசேலென்ற வெளிச்சம் வீட்டுக் கூரைகளின் மேல் பரந்தது. எங்கு பார்த்தாலும் உறைந்த பனிக்கட்டி அந்தத் தெரு முழுவதிலும், என்னையும் அந்த ஸ்லெட்ஜ் (ருஷியாவில் மாரிக் காலத்தில் ஜலம் உறைந்து விடுவதால் சக்கரமற்ற வண்டியை உபயோகப்படுத்துவார்கள்.

அதற்கு ஸ்லெட்ஜ் என்று பெயர்) வண்டிக்காரனையும் தவிர வேறு ஒரு மனிதப் பிராணியும் கிடையாது. அவன் முகம்வரை மூடிக்கொண்டு வண்டியின் முன்பு குனிந்து உட்கார்ந்திருந்தான். நானும் அவனுக்குப் பின் நன்றாகப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். வண்டிக்காரன் மனத்தில் என்ன நினைவுகள் ஓடினவோ! ஆனால், என் மனத்தில்!

இந்தத் தெரு வரிசையிலுள்ள வீடுகளுக்குள் எத்தனையாயிரம் மக்கள் கனவுகளுடன், எண்ணங்களுடன் உறங்கிக் கொண்டிருப்பார்கள்; அவளை நினைத்தேன். அவள் எப்படி பொய் சொன்னாள் என்பதையும் மரணத்தைப் பற்றியும் நினைத்தேன்.

ஆமாம் அந்தச் சுவர்கள், மங்கிய ஒளியில் ரெட்டை நெடுகலாக நிற்கும் சுவர்கள், அவைகள் என் மரணத்தைப் பற்றி ஒரு முடிவிற்கு வந்து விட்டன போலும். அதனால் தான் அப்படி நிற்கின்றன. அந்த ஸ்லெட்ஜ் வண்டிக்காரனின் நினைவுகள் என்னவென்று எனக்குத் தெரியுமா? பிறகு அந்தச் சுவரின் கனவுகளை நான் எப்படியறிய முடியும்? ஆமாம்.

அவர்களுக்கு எனது எண்ணங்களை, எனது ஓடிக் குவியும் நினைவுகளைப் பற்றி என்ன தெரியும்?

வண்டியும் இந்த முடிவற்று நீளும் தெருக்களின் வழியாகச் சென்றது. உதயமும் கூரையின் மீது வெள்ளை வெளிச்சத்துடன் பரந்தது; பார்த்தவிடமெல்லாம் அசைவற்ற வெண்மை; கவிந்து தவழும் மஞ்சு என்னைச் சுற்றியது. எனது காதினுள், “ஹோ!” “ஹோ!” வென நகைத்தது.

2. அவள் சொன்னது பொய். அவள் வரவேயில்லை. வீணாக அவளுக்காக காத்திருந்தேன். எங்கும் ஒன்று போல இருள் ஒளியற்ற வானத்தினின்றும் உலகைக் கவ்வியது. எப்பொழுது சாயங்காலம், அந்தி மாலையாகி இரவாக மாறியது என்ற உணர்ச்சியே அற்று இருந்தேன். எனக்கு அவ்வளவும் ஒரே இரவாகத்தான் இருந்தது.

முன்னும் பின்னுமாக அளவு எடுத்து வைப்பது போல் நடந்து கொண்டே இருந்தேன். நம்பிக்கையும் நடையைப் போல் முன்னும் பின்னுமாகச் சென்றுகொண்டேயிருந்தது. அந்தப் பெரிய வீட்டண்டையில் நான் நெருங்கவில்லை.

அதில்தான் அவள் வசிக்கிறாள். அந்த இரும்புக் கேட்டுக்குப் பின் உள்ளேயிருக்கும் மஞ்சள் வெளிச்சத்தைக் காண்பிக்கிறதே அந்தக் கண்ணாடிக்கதவு, அதன் பக்கம் செல்லவில்லை. அந்தத் தெருவின் எதிர்ப் பாரிசத்தில், முன்னும் பின்னுமாக நடந்து கொண்டேயிருந்தேன்.

வீட்டை நோக்கி முன் செல்லும்பொழுது, அந்தக் கண்ணாடிக் கதவில் வைத்த கண்ணை மாற்றவில்லை. திரும்பி வரும்பொழுது நின்ற பின்பக்கம் பார்த்துக் கொண்டே சென்றேன். உறைபனி ஊசி முனைபோல் முகத்தில் குத்தியது. அந்த உறைந்த பனி நீர் உள்ளத்திலேயே சென்று குத்தியது.

துக்கமும் கோபமும் ஹிருதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்தன. வீணாகக் காத்திருந்தேன். என்ன பயன்? வாடைக்காற்று, ஒளியுள்ள வடக்கிலிருந்து இருள்கவ்விய தெற்கு நோக்கி அடித்தது; பனி உறைந்த கூரைகளில் ‘உஸ்’ என்ற சப்தத்துடன் விளையாடியது. உறைந்த பஞ்சு போன்ற பனிநீர் முகத்தில் குத்தியது.

அர்த்தமற்ற விளக்குகளைத் தழுவியது. தீபம் குளிரில் வளைந்து அசைந்தாடியது. இரவில் மட்டும் உயிர் பெறும் அந்தத் தீபத்தைக் காண எனக்கு வேதனையாக இருந்தது. நான் சென்றவுடன் இந்தத் தெருவில் உயிர் முடிவடைந்து விடும். வெறும் பாழ் வெளியில்தான் இந்தப் பனிப் பஞ்சு விழும் என்று நினைத்தேன்; ஆனால் அந்தத் தீபம் மட்டிலும் குளிரில் வளைந்து நடுங்கும்.

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 11.12.2019 புதன்கிழமை !
Next articleசாளரம் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – saaralam!