வைரலான வீடியோ! கோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர்! பின்னர் நடந்தது என்ன?
தமிழகத்தில் கோயிலில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்ணை அர்ச்சகர் அறைந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. சிதம்பரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (51). தனது மகனின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு முக்குறுணி விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்ய சென்றார். அப்போது அங்கிருந்த அர்ச்சகர் தர்ஷனிடம் தேங்காயை கொடுத்த போது அர்ச்சனை ஏதும் செய்யாமல் தேங்காயை உடைத்து கொடுத்துள்ளார்.
இதற்கு அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் ஏன் உடைத்தீர்கள் என லதா தட்டி கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சகர் தகாத வார்த்தைகளால் லதாவை திட்டியுள்ளார். இதையடுத்து உடைத்த தேங்காயை நான் வாங்கமாட்டேன் என லதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் லதாவை கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் சுருண்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் அர்ச்சகரும், லதாவும் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து லதா அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட தர்ஷனை பொலிசார் தேடி வருகின்றனர்.