விகாரி வருடத்தில் இந்த ஆண்டின் குருபெயர்ச்சி எப்போது?.. மிக மிக சிறப்பான ராசி எது?

0

மங்களகரமான விகாரி தமிழ் வருடம் கடக லக்னம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். இந்த புத்தாண்டில் மேஷம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு வெகு சிறப்பாக அமைந்துள்ளது.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27, 2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்-சிறப்பு!

தைரியத்திற்கு காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு பொருள் சேரும். எட்டில் அமர்ந்த குரு புத்தாண்டு பிறக்கும் போது அதிசாரமாக ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்.நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி உலாவருவதால் உங்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது. இதுநாள் வரை குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இனி குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிப்பீர்கள்
ரிஷபம்- சோதனைகள் சாதனைகளாகும்

களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் வாழ்க்கை என்றாலே ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். சோதனைகள் வந்தாலும் அமைதியை கடைபிடித்து வெற்றிக்கனியை பறிப்பீர்கள். இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு மூன்றாவது இடமான முயற்சி ஸ்தானத்தில் பிறக்கிறது. உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டு முழுவதும் ராகு இரண்டாவது வீட்டிலும் கேது எட்டாவது வீட்டிலும் நீடிக்கின்றனர். பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். உடைகிற மூங்கிலாக இருப்பதை விட வளைந்து கொடுக்கிற நாணலாக இருப்பதே நல்லது என்பதை உணர்ந்தவர்கள் நீங்கள், இந்த ஆண்டில் வீடு, மனை, இடங்களை வாங்கும் போது கவனமாக இருக்கவும். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.
மிதுனம்-சிறப்பு

மிதுனம் ராசிக்காரர்களே… இந்த புத்தாண்டில் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இரண்டாம் வீட்டில் சந்திரன் லாபத்தில் சூரியன், பத்தில் சுக்கிரன், புதன் என கிரகங்கள் சஞ்சரிப்பதால் தொட்ட காரியம் ஜெயமாகும். பணப்பற்றாக்குறை குறையும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எந்த வேலைக்காகவும் யாரையும் நம்ப வேண்டாம். தன் கையே தனக்குதவி என வேலை செய்தால் வெற்றி நிச்சயம். ஏழாம் வீட்டிற்குள் அதிசாரமாக சென்று சஞ்சரிக்கும் குரு பகவானால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தடைபட்ட திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.
கடகம்-நடுத்தரமான பலன்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே… கடகம் ராசியில் கடக லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில் உங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். காரணம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உங்களின் கவுரவம் அந்தஸ்து உயரும், பணவரவு அதிகரிக்கும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். வேலை விசயமாக வெளிநாடு பயணம் அமையும். இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனியால் பொன்னும் பொருளும் சேரும். புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பணியில் உத்தியோக உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
சிம்மம்- மிக மிக சிறப்பு

சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே இந்த புத்தாண்டில் நீங்கள் எதைத் தொட்டாலும் வெற்றியில் முடியும். சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் விவாதங்கள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும். வீடு மனை வாங்குவீர்கள். பொன், பொருள் நகைகள் சேரும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடி வரும், திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்திலும் பணி செய்யும் இடத்திலும் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.
கன்னி- முதலுக்கு மோசமில்லை

புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே! சந்திரன் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. பணவரவு தாராளமாகவே இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வீட்டில் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த புத்தாண்டு பிறக்கும் உங்கள் ராசி அதிபதி புதன் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உங்களின் ரசனை அதிகரிக்கும். புதிய தொழில்கள் அமையும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். மாணவர்களின் கவனம் படிப்பில் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். பணம் புகழ் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பண விரையம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
துலாம்-ஓரளவு சிறப்பு

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே… சந்திரன் உங்கள் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. பணவரவு தாராளமாகவே இருக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உறுதியற்ற நிலை உண்டாகும். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும்.

பயணங்களால் சுப செலவுகள் ஏற்படும். திடீர் பணவரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கோ, மகளுக்கோ நல்ல இடத்தில் வரன் அமையும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

வீடு மனை வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். வெளிநாட்டு வியாபாரம் நன்மையடையும். லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்- கஷ்டம் தீரும்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே நாடாளும் யோகம் கைகூடி வருகிறது, பணப்புழக்கம் அதிகரிக்கும். பாத சனி படுத்தினாலும் சுறுசுறுப்புக்கு பஞ்சமிருக்காது. பணவரவு அதிகமாக இருந்தாலும் சுப செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தும் வாய்ப்பு ஏற்படும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது சிக்கல்களையும், சிரமத்தையும் குறைக்கும். சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடி, எள் தீபம் ஏற்றி,கருப்பு வஸ்திரம் சாற்றி வணங்க, கதிரவனைக் கண்டபனிபோல் கஷ்டங்கள் மறையும்.
தனுசு- மனக்கவலை தீரும்

இந்த புத்தாண்டில் பணவரவு அதிகமாகவே இருக்கும். ஆண்டில் துவக்கம் சுமாராக இருந்தாலும் விரைவில் நல்ல காலம் பிறக்கிறது. ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் மனக்கவலை ஏற்பட்டாலும் சில நாட்களில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஜன்ம சனியால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சொத்து சேர்க்கைகள் அதிகமாகும். குருவின் சஞ்சாரத்தினால் பயணங்கள் நன்மையில் முடியும். செவ்வாய் சஞ்சாரத்தினால் சில மாதங்களில் பிரச்சினை தலைதூக்கும் என்பதால் செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட நன்மைகள் நடைபெறும்.
மகரம்- மகிழ்ச்சி

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே.. இந்த புத்தாண்டில் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் வகையில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. வெற்றி பெற வேண்டுமானால் கடின உழைப்பு அவசியம் என்பதை உணர்ந்து நீங்கள் வேலை செய்வீர்கள். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். விரைய சனியால் நோய்கள் எட்டிப்பார்த்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு ஓரளவிற்கு நன்மையும் நடுத்தர பலன்களையும் தரக்கூடிய சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது.
கும்பம்- நன்மைகள் அதிகம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே… இந்த புத்தாண்டில் உங்களுக்கு வெகு சிறப்பான நன்மைகள் நடைபெற உள்ளது. அரசு காரியங்களில் நன்மைகள் அதிகம் நடைபெறும். தொழிலில் லாபம் கூடும் வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் நன்மையில் முடியும். அரசு வேலை தேடி வரும். கடனாக பிறருக்கு கொடுத்த பணம் திரும்ப வரும். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் கை கூடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, பத்திரம், பணம் நகைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும்,
மீனம்- லாபம் அதிகம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே… இந்த புத்தாண்டில் உங்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும். துணிச்சல் அதிகரிக்கும். பணவரவும் அதிகமாகவே இருக்கும். வேலைச்சுமை கூடும். வேலை விசயமாக வெளிநாடு செல்வீர்கள். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், வருமானம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 15.04.2019
Next articleஇன்றைய ராசிப்பலன் – 16.04.2019 செவ்வாய்க்கிழமை!