மீனம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !

0

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும்.

பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும்.
உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும் சுகவாழ்வு சொகுசுவாழ்வு சற்று பாதிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்படும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வதன் மூலம் தேக்கநிலை ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாவதோடு உற்றார் உறவினர்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் ஏற்படும். திருக்கணிதப்படி தை மாதம் 10-ஆம் தேதி (24-01-2020) ஏற்படவுள்ள சனிமாற்றத்தின் மூலம் சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு கை கால் அசதி போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை
கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடைய முடியும்.

உத்தியோகம்
பணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேற கூடிய ஆற்றல் உண்டாகும். எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக விலகும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

தொழில் வியாபாரம்
தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயத்தையும் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும்.

கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். சில நேரங்களில் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும்.

அரசியல்
கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலையில் சரளமான நிலை இருப்பதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவினைப் பெற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகளும் சிறப்பாக அமையும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெற்று விடுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் மண வழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பொருளாதாரம் உயரும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமானபடக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

மாதப்பலன்

சித்திரை
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும் 2-ல் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அனைவரிடமும் விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வைகாசி
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் எதிர்பார்த்த லாபத்தை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகளும், கௌரவமான பதவிகளும் கிடைக்கும். அனுகூலமான பயணங்களும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

ஆனி
சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் அமையும். குரு 9-ல் இருப்பதால் மணவயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியுடன் இருக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ஆடி
ராசிக்கு 5-ல் செவ்வாய், சூரியன், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். புதிய பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் யோகமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி வம்பு வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி
ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளிலும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகளில் அமரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

புரட்டாசி
ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 7-ல் புதன், சுக்கிரன், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சொந்தமாக பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் அளிக்கும். சிவ பெருமானை வழிபடவும்.

ஐப்பசி
களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9-ல் குரு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பணவரவுகளிலும் சரளமான நிலையிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்து கொள்வது, முன்கோபத்தை குறைப்பது நல்லது. புத்திர வழியில் பூரிப்பும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். 19-ஆம் தேதி முதல் குரு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிறிது தேக்கம் உண்டாகும். தட்சிணாமுர்த்தியை வழிபடவும்.

கார்த்திகை
பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற்று மகிழ்வார்கள். பொருளாதாரம் உயர்வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

மார்கழி
ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். புதிய வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்கும் யோகமும் உண்டாகும். சிலர் கட்டிய வீட்டை புதுப்பிக்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனைத்து வகையிலும் அனுகூலங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை அடைந்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருப்பதால் வேலைப்பளு குறைவதுடன் மனதில் உற்சாகமும் பிறக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

தை
பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த இடங்களுக்கு இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பொருளாதார மேன்மையும் உண்டாகும். பொன், பொருள் சேரும். சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

மாசி
ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தாமதமாக கைகூடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

பங்குனி
ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், 11-ல் சனி, 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் நிதானம் தேவை. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9,
கிழமை – வியாழன், ஞாயிறு
திசை – வடகிழக்கு
நிறம் – மஞ்சள், சிவப்பு
கல் – புஷ்ப ராகம்
தெய்வம் – தட்சிணாமூர்த்தி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகும்பம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 12.04.2019 வெள்ளிக்கிழமை!