இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தொடர்பில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து, ஒட்டுமொத்த இலங்கையை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது.
ஆயுட்காலம் முடிவடைய முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. 19வது அரசியலமைப்பு முரணாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அதற்கு எதிராக 12 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு யானை சிக்கல் ஒன்று ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளளார்.
ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சிங்கள மொழியில் குழப்பம் உள்ளது. அவர்கள் அரசியமைப்பின் ஆங்கில பதிப்பை மாத்திரம் பரிசோதித்தமையினால் யானைகள் சிக்கலில் சிக்கப்போகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியமைப்பின் 33 (2) ஆம் சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு “மேலதிகமாக” என்ற வார்த்தையை ஐக்கிய தேசிய கட்சியினர் அவதானிக்க தவறியுள்ளார்கள் என கம்மன்பில தெரிவித்துள்ளார்
அத்துடன் அந்த சரத்தில் ஜனாதிபதிக்கு விருப்பமான அளவு நாடாளுமன்றத்தை பிற்போட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வு பெற முடியாது. அரசியமைப்பிற்கு எதிராக ஜனாதிபதி செயற்படவில்லை. சிங்கள அரசியலமைப்பிற்கமைய பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது. ஆங்கிலத்தில் அப்படி இல்லை.
ஆங்கில அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி சட்டத்தரணிகள் வாதிடுகின்றார்கள். எனினும் இலங்கை உத்தியோகபூர்வ மொழி சிங்களம் என்பதனை மறந்து விட வேண்டாம்.
இன்னும் ஒரு விடயம் உள்ளது. எனினும் நான் அதனை கூற மாட்டேன். எங்கள் சட்டத்தரணிகள் அந்த விடயம் தொடர்பாகவே வாதிட உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் செயற்படும் போது அவருக்கு எதிராக தீர்ப்பு எப்போதும் வெளியாகது என சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.