தன் 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.
கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளையும் விஷம் வைத்து கொலை செய்த அபிராமியின் தந்தை சவுந்தர்ராஜன் கூறியதாவது, திண்டுக்கல்லை சேர்ந்த நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் குடியேறிவிட்டோம்.
எனக்கு அபிராமியும், ஒரு மகனும் உள்ளனர். சிறுவயது முதலே அபிராமி என்றால் எங்கள் அனைவருக்கும் செல்லம். இயல்பாகவே மிகவும் அழகு என்பதால் அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து வந்தோம்.
அவளுக்கு பிடிவாத குணம் அதிகம். தான் நினைத்ததை அடைந்தே தீருவாள். தான் பெற்ற பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் கொலை செய்யும் நிலை வரைக்கும் இந்த குணம் தான் அவளை கொண்டு வந்துள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யை காதலிக்கிறேன் திருமணம் செய்துவையுங்கள் என கூறினாள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம்.
ஆனால், பிடிவாதமாக இருந்தாள், விஜய் இல்லாவிட்டாள் நான் செத்துவிடுவேன் என கூறினாள். இதனால் திருமணம் செய்துவைத்தோம். ஆனால் விஜய்யின் குடும்பத்தார் கடைசிவரை இதற்கு சம்மதிக்கவில்லை.
திருமணம் நடந்தபின்னர் இருவரும் சந்தோஷமாக இருந்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவளது பிறந்தநாளுக்கு விஜய் ஸ்கூட்டி வாங்கிகொடுத்துள்ளார்.
அதில் இருந்துதான் அவளது போக்கு முற்றிலும் மாறத் தொடங்கியது. எப்பொழுதும் ஸ்கூட்டியிலேயே வலம் வரத் தொடங்கினாள்.
அபிராமிக்கு எப்பொழுதும் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகம். தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதையும் மறந்து, கணவன் சம்பாதிக்கும் பணத்தை, பியூட்டி பார்லருக்கு சென்று அலங்கரித்து கொள்வது, ஓட்டலுக்கு சென்று விதவிதமாக சாப்பிடுவது என்று உல்லாசமாக சுற்றத் தொடங்கினாள்.
இப்படித்தான் சுந்தரத்தின் நட்பு கிடைத்து அது கள்ளக்காதலாக மாறியது.
கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பகூட தனது இரண்டு பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு சுந்தரத்தின் வீட்டில் போய் இரண்டு நாள்களாக தங்கி விட்டாள்.
நான் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று, அபிராமியை அடித்து உதைத்து, அறிவுரை கூறி, மீண்டும் கணவனுடனேயே சேர்த்து வைத்தேன்.
எனது பேரப்பிள்ளைகள் இரண்டும் தாத்தா தாத்தா என்று என்னை அழைப்பது என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அவளது பேராசை மற்றும் உல்லாசப் போக்கால்தான் இந்த அளவுக்கு கொடூர மனம் வந்து விட்டது. இன்று தண்டனை அனுபவிக்கிறாள்.
வயதான காலத்தில் என் இறப்பிற்குப் பிறகு, எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டது. என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது என கதறி அழுதுள்ளார்.
எனது மகள் செய்த தவறுக்கு தக்க தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.




