அடுத்த வருடம் நடைபெறவுள்ள கபொத உயர்தர பரீட்சையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தோற்றவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முதலாவதாக 1981ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய அமைச்சர், அடுத்த வருடம் மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளார்.
அதற்கமைய 38 வருடங்களின் பின்னர் அவர் உயர் தரப் பரீட்சை எழுதுகின்றார். அவர் தனிப்பட்ட ஆசிரியர் ஒருவர், வீட்டிற்கு அழைத்து வந்து அரசியல் பாடம் கற்பதாக தெரியவந்துள்ளது.பொதுவாக மாணவர்கள் ஆசிரியர்களை ‘சர்’ என அழைப்பார்கள் எனினும், இளம் ஆசிரியர் தனது அரசியல் மாணவரை சர் என அழைத்து கற்பித்து வருகிறார்.
அமைச்சிற்கு காலை நேரத்திலும், பிற்பகலில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் அமைச்சர் இரவில் வகுப்பிற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.1979ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதிய அமைச்சர் 1981ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதினார்.38 ஆண்டுகளுக்கு முன்னர் பரீட்சையில் தோல்வியடைந்தவர் மீண்டும் பரீட்சை எழுதுவதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
தான் வெளியிட்ட கருத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தானே சட்டத்தரணியாகி வாதிட தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.சட்டத்தரணியாகுவதற்கு உயர்தர பரீட்சை கட்டாயமாகும். அதற்கமைய உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணியாக திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனது நண்பர்களும் இதனைக் கேட்டு சிரித்தார்கள் எனினும், கல்வி கற்பதற்கு வயது அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.