இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர் 75 வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய காதலியை பிரான்ஸ் நாட்டில் மீண்டும் சந்தித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ராபின்ஸ் (97) என்கிற இராணுவ வீரர் சமீபத்தில் நடைபெற்ற 75 வது D- நாள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பத்திரிக்கையாளர்கள், இரண்டாம் உலகப்போர் குறித்து அவரிடம் சில விடயங்களை கேட்டறிய முயன்றனர்.
அவர்களிடம் பேசிய ராபின்ஸ், 1944ம் ஆண்டு நான் இங்கு வருகை தந்திருந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய ஆடைகளை சலவை செய்வதற்கு ஒரு நபரை நான் தேடிக்கொண்டிருந்தேன்.
எனக்கு உதவி செய்வதாக ஒரு பெண் ஒப்புக்கொண்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய மகள் ஜென்னீன் பிசர்சன் (92) என்பவர் மீது எனக்கு காதல் மலர்ந்தது.
இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். இரண்டு மாதங்கள் கழித்து அந்த கிராமத்தை விட்டு நாங்கள் வெளியற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று நான் அவளிடம் கூறினேன்.
நான் அங்கிருந்து செல்லும் வரை அவள் அழுதுகொண்டே இருந்தாள். போர் முடிந்ததும் அமெரிக்க திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் என்னால் இங்கு வரமுடியவில்லை. அவளுடைய படத்தை நான் இன்னும் வைத்திருக்கிறேன் என கூறினார்.
மேலும் அந்த பெண்ணின் குடும்பம் பற்றிய தகவல்களை தனக்கு கிடைக்க உதவுமாறு பத்திரிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்தார்.
உடனே விரைந்து செயல்பட்ட பத்திரிக்கையார்கள், முதன்முதலாக அவர்கள் சந்தித்த இடத்திலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் ஜென்னீன் பிசர்சன் இன்னும் உயிருடன் இருப்பதை கண்டறிந்து, ராபின்சிற்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சந்தித்த இருவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பிசர்சனை கட்டியணைத்த ராபின்ஸ், நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன். நீ ஒருபோதும் என் இதயத்தை விட்டு வெளியேரவில்லை எனக்கூறினார்.
மேலும் தன்னுடைய காதலியின் நினைவாக வைத்திருந்த பழைய புகைப்படத்தை எடுத்து காட்டி, இது உனக்காக எனக்கூறி கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிக்கொண்ட பிசர்சன், அமெரிக்காவிற்கு சென்ற நீங்கள் ஏன் உடனடியாக என்னை பார்க்கக் திரும்பவில்லை. எனக்கு எப்பொழுதுமே உங்கள் நினைவு தான். ஒருநாள் நிச்சயம் நீங்கள் வருவீர்கள் என்று நான் நினைத்திருந்தேன். போர் முடிந்த சமயத்தில் கூட நீங்கள் இங்கேயே தங்கிவிட வேண்டும் என வேண்டியதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு திருமணம் நடந்த காரணத்தாலே திரும்ப முடியவில்லை என ராபின்ஸ் அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
சில மணி நேரங்கள் பேசிய இந்த காதல் ஜோடி, நார்மண்டியில் ஆண்டு விழா கொண்டாட்டம் காரணமாக மீண்டும் பிரிந்தனர்.
ராபின்ஸ் மனைவியும், பிசர்சன் கணவரும் இறந்துவிட்டதால் இந்த ஜோடி மீண்டும் இணைவார்கள் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இறுதியாக பிசர்சனை நோக்கிய ராபின்ஸ், நான் உன்னை காதலிக்கிறேன். 75 வருடங்களுக்கு பின் முதன்முறையாக கண்கள் ஈரமாக துவங்கிவிட்டன. மீண்டும் ஒரு முறை உதடுகள் ஒட்டிவிட்டன என கூறியுள்ளார்.