சீன கண்காணிப்பு கப்பலான யுவாங் வாங் 5ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள கப்பலின் வருகையை எதிர்த்தமைக்கான உறுதியான காரணங்களை வழங்கத்தவறியமையை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன்படி யுவாங் வாங் 5, ஏற்கனவே திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 16 அன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆகஸ்ட் 11ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை அது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்தது. எனினும் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியதை அடுத்து இது தாமதமானது.
அத்துடன் மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை, பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்தது. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கினால் கப்பல் தொடர்பான கவலைகளும் தெரிவிக்கப்பட்டன.
இதன்போது கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு அவரிடம் கோரப்பட்டது. இதே கோரிக்கையை இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கடந்த செவ்வாய்க்கிழமை விடுத்திருந்தார்.
எனினும் இரு தரப்பினரும் உறுதியான காரணங்களை முன்வைக்காததால், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பின் ஊடகம் கூறுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கு முன்னர், கப்பலை நங்கூரமிடுவதற்கான அனுமதி, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றால் வழங்கப்பட்டன.
எனினும், கொழும்பிடம் விளக்கம் கேட்கும் வரை, புதுடில்லிக்கு இந்த கப்பல் விடயம் அறிவிக்கப்படவில்லை என்று இந்திய செய்திகள் கூறுகின்றன.