இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லை என தெரியவந்துள்ளது.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் கேரளாவுக்கு பலமுறை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஐஎஸ் இயக்கத்தில் தொடர்பிருப்பதாக பலர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த மாலுக் ஜூத் மில்கன் தியாஸ் (30) என்ற நபரை பொலிசார் கேரளாவில் திருவனந்தபுரத்தில் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள Thampanoor KSRTC பேருந்து பணிமனையில் மில்கன் நின்று கொண்டிருந்த நிலையில் போனில் யாருடனோ சிங்களத்தில் பேசியுள்ளார்.
இதை பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பொலிசார் வந்து மில்கனை கைது செய்தனர்.
முதலில் தான் ஒரு விமானநிலைய ஊழியர் என மில்கன் பொலிசாரிடம் கூறினார், ஆனால் அது பொய் என விசாரணையில் தெரியவந்த நிலையில் அவரிடம் பாஸ்போர்ட் மற்றும் விசாவும் இல்லை என தெரிந்து பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
அவரிடம் நாகர்கோவில் – வர்கலா ரயில் டிக்கெட் இருந்தது.
மில்கன் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு படகில் வந்திருக்கலாம் எனவும், பின்னர் கேரளாவின் வர்கலா என நினைத்து திருவனந்தபுரத்தில் இறங்கியிருக்கலாம் எனவும் பொலிசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மில்கனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.




