கிரக மாற்றம்
18-10-2019 துலாத்தில் சூரியன் அதிகாலை 01.03 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம் 11-10-2019 இரவு 10.25 மணி முதல் 14-10-2019 காலை 10.20 மணி வரை.
மேஷம் 14-10-2019 காலை 10.20 மணி முதல் 16-10-2019 இரவு 08.45 மணி வரை.
ரிஷயம் 16-10-2019 இரவு 08.45 மணி முதல் 19-10-2019 அதிகாலை 05.25 மணி வரை.
மிதுனம் 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தனாமான 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். சிறப்பான பணவரவும், சேமிப்புகள் அதிகரிக்கும் யோகமும் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். ராகு 3-ல் இருப்பதால் உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். குரு பகவான் வழிபாடும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 19.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் வரும் 18-ஆம் தேதி முதல் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு வலமான பலன்களை தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் யோகம், நினைத்ததை செயல்படுத்த கூடிய திறன் இந்த வாரத்தில் உண்டு. பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் பேசும் போது பேச்சில் சற்று நிதானமாக இருப்பது நல்லது.
மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 13, 14, 17, 18.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பது குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதன், சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நெருங்கியவர்களே உங்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவார்கள் என்பதால் சற்று எச்சரிக்கையோடு இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது சிறப்பான பலனை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் — 13, 14, 15, 16, 19.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் புதன், சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சிறப்பான பணவரவுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்களும் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் வரும் 18-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பாகும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வது, சஷ்டியன்று முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.
சந்திராஷ்டமம் – 11-10-2019 இரவு 10.25 மணி முதல் 14-10-2019 காலை 10.20 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்– மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிக்கனமாக இ-ருப்பதும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது, பௌர்ணமியன்று கிரிவலம் செனஙறு வருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் — 13, 19.
சந்திராஷ்டமம் – 14-10-2019 காலை 10.20 மணி முதல் 16-10-2019 இரவு 08.45 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றலாம். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும், இடமாற்றமும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் — 13, 14, 15, 16.
சந்திராஷ்டமம் – 16-10-2019 இரவு 08.45 மணி முதல் 19-10-2019 அதிகாலை 05.25 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது நெருக்கடிகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் – 14, 15, 16, 17, 18.
சந்திராஷ்டமம் – 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் கடுமையான நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், இவ்வாரத்தில் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்-. தொழில் வியாபாரத்தில் நல்ல உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள்.
குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உறவினர்களால் சில நேரங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல், வண்டி வாகனங்கள் மூலமாக விரயங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல்— வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சி தேவை. சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகர் வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் புதன், சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்ப்புகள் விலகும் நிலை உண்டாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.
பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுதிடுவீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானை வழிபாடு செய்வதால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் – 13, 19.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் கேது, சனி சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களை தரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சூரியன், செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வாகனங்களில் செல்கின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். சஷ்டியன்று விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் – 14, 15, 16.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்று இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
அசையும் அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் – 13, 17, 18.