வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் இன்று அவதானித்ததுடன், அது தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த அநாமதேய கடிதத்தில் வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் எதிர்வரும் திங்கள்கிழமை வெடிகுண்டுவைக்கபடவுள்ளதாக, எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிசார், மற்றும் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவளை குறித்த மிரட்டல் கடிதம் காரணமாக வவுனியா வைத்தியசாலையை சூழவுள்ள அனைத்து பகுதிகளிலும் ரகசியகமரா பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளதுடன், மதீனாநகர் பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




