சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொள்ளை, சென்னை தி.நகரில் பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் கொள்ளை என கடந்த வாரத்தில் மட்டும் சென்னையின் முக்கிய பகுதிகளில் அதுவும் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறு நடைபெறும் கொள்ளைகளில் வட மாநிலத்தை சார்ந்தவர்களே அதிகமான சம்பவங்களில் குற்றவாளியாக இருகின்றனர்.
வட மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இருந்து சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
மிகவும் திட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் அல்லது ஒன்று இரண்டு பேர் மட்டும் வீட்டில் உள்ள நேரம் என எந்த நேரத்தில் கொள்ளை அடிப்பது என முதலில் திட்டமிடுகின்றனர்.
வீட்டில் ஆள் இல்லை என்றால் நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றனர். ஆள் இருந்தால் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரத்தில் புகுந்து கைவரிசையை காட்டுகின்றனர்.
இவ்வாறு கொள்ளையில் ஈடுபடுபவர்கள் இரும்பு கிரில் கேட்டை இரும்பு அறுக்கும் கேஸ் வெல்டு மூலமாக அறுத்து உள்ளே புகுந்து விடுகின்றனர்.
சமீப காலத்தில் நடைபெற்ற பல கொள்ளை சம்பவங்களில் இரும்பு அறுக்கும் கேஸ் வெல்ட் மிஷன் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு 27 ஆம் தேதி நள்ளிரவு சென்னை தி.நகரில் உள்ள செளத் போக் சாலையில் உள்ள நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரக லட்சுமி அண்ணன் வீட்டின் பின்பக்க இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கிழ் தளத்தில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 ஆயிரம் ரூபாயையும்,
முதல் மாடியில் பூட்டியிருந்த இருந்த கிரகலட்சுமியின் அறை கதவை உடைத்து அங்கிருந்த சுமார் 20 சவரன் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் யார் ஈடுபட்டனர் என்பது மர்மமாகவே உள்ளது. மேலே குறிப்பிட்டது போல செளத் போக் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் மிகுந்த பகுதி, வீட்டினுள் ஆட்கள் இருக்கும் போதே துணிச்சலுடன் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதேபோல, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த திங்கள் கிழமை ஊழியர்கள் வந்து பார்த்த போது லாக்கர் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.
சனி ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறையில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவினை முதலில் துண்டித்துள்ளனர்.
பின்னர் சுவரில் துளையிட்டு வங்கியினுள் நுழைந்த கும்பல் லாக்கர் அறை இரும்பு கதவை கேஸ் வெல்டிங் மிஷனை கொண்டு உடைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து லாக்கர் அறையில் இருந்த இரண்டு லாக்கரை கேஸ் வெல்டிங் மூலமாகவே துளையிட்டுள்ளனர்.
பின்னர் உள்ளே இருந்த 130 பைகளில் இருந்த 32 லட்சம் பணமும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்துள்ளனர். அதனை தொடர்ந்து 3வது லாக்கரை துளையிடும் போது அதிகமான புகை வெளியேறி தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கொள்ளையர்கள் இரண்டு லாக்கரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் போலிஸார் வங்கியில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய நேபாளத்தை சேர்ந்த காவலாளி சாபீர் லால் தான் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொள்ளைக்கு பின்னர் அவர் தலைமறைவானது சந்தேகத்தை எழுப்பியது. மேலும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து தான் வங்கிக்குள் நுழைய துளையிடப்பட்டிருந்தது மேலும் 5 வருடம் பணியாற்றுவதால் சிசிடிவி கேமராவையும் அணைக்க அவருக்கு தெரிந்துள்ளது.
இவ்வாறு அணைத்து ஆதாரங்களும் சாபீர் லால் தான் செய்திருக்க கூடும் என்ற சந்தேகத்தை போலிஸாருக்கு எழுப்பியுள்ளது
இதனை தொடர்ந்து விசாரணையை துரிதபடுத்திய காவல்த்துறையினர் சாபீர் லால் மற்றும் அவரது மகன் டில்லு மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நேபாளத்திற்கு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.
எனவே மேற்கு வங்கம் மற்றும் நேபாளத்திற்கு தனிப்படையினர் விரைந்தனர். தொடர்ந்து சாபீர் லால் செல்போன் அழைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்திய போலீசார் அதில் நேபாளத்தை சேர்ந்த ஹீலா ராம், ஹர் பகதூர் ஆகியோரும் பெங்களுருவை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அதிகம் பேசியதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பெங்களூரு சென்ற தனிப்படை போலிசார் இவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர் இதில் ரமேஷ் என்பவர் கார் ஓட்டுநராக உள்ளதால் சென்னையில் கொள்ளையடித்தப்பிறகு கார் மூலம் கொள்ளையர்கள் தப்பிக்க இவர் உதவி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேபாளம் சென்ற தனிப்படையினர் சாபீர் லாலையும் நேற்று கைது செய்தனர். அவர் வெளிநாட்டவர் என்பதால் அவரை சென்னை அழைத்து வர சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் நேபாள போலிஸாரிடம் சாபீர் லால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிவீடு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என கொள்ளையடித்து கொண்டிருந்தவர்கள் தற்போது பெரு நகரங்களிலேயே சர்வ சாதாரணமாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை அரசும், காவல் துறையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்