அறிவியல் அடிப்படையில் காணும் போது மனம், சிந்தனைத்திறன் இவை இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை அறிய முடிகிறது. மனம் சிறப்பாக இருந்தால் மட்டுமே நமது சிந்தனைத் திறன் மேம்பாடு, ஆக்கபூர்வமான எண்ணங்கள் மட்டும் கற்பனைகள் போன்றவை ஏற்படுகின்றன.
இந்த உண்மையை ஜோதிட சாஸ்திரம் மற்றும் நமது பண்டைய புராணங்களில் மனோகாரகனாகிய சந்திர பகவானின் புதல்வனாக அறிவாற்றல் மற்றும் சிந்தனைத்திறனுக்கு காரகத்துவம் கொண்ட புதன் பகவான் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புதன் பகவானுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்றாக ரேவதி நட்சத்திரம் இருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்களின் வரிசையில் இறுதியான இருபத்தியேழாவதாக வருகிற நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். ரேவதி நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீரங்கநாதர் இருக்கிறார். புதன் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நட்சத்திரம் என்பதால் இயற்கையிலேயே சிறந்த அறிவாற்றல், பல விடயங்கள் பற்றிய ஞானம், சமயோசித அறிவு போன்றவை நிரம்பியவர்களாக ரேவதி நட்சத்திரக்காரர்கள் இருக்கின்றனர். எனவே இந்த ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த செல்வத்தையும், யோகங்களையும் பெறுவதற்கு கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வருவது நன்மை பயக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வு யோகங்கள் நிறைந்ததாக மாற ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று, மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர்க்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வஸ்திரம் சாற்றி வழிபடுவது புதன் கிரக தோஷங்களை போக்கி உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கச் செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு புதன்கிழமை அன்று காலையில் சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, வழிபடுவது புதன் பகவானின் அருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும். புதன்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு பச்சை வண்ண நிறமி சேர்த்து தயாரிக்கப்பட்ட தேங்காய் பர்பி பண்டங்கள் அல்லது பச்சை நிற இனிப்புகளை நைவேத்தியம் வைத்து, வணங்கி அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம்.
புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கோவில்களில் இருக்கும் பசுமாடுகளுக்கு அல்லது உங்கள் வீட்டில் அல்லது வீட்டிற்கு அருகே எங்கேனும் இருக்கும் பசுமாடுகளுக்கு ஊற வைக்கப்பட்ட பச்சை பயிர்களை சாப்பிடக் கொடுப்பது புதன் கிரக தோஷங்களை போக்கி, புதன் பகவானால் நன்மையான பலன்களை ஏற்பட செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.