மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸ் சம்பந்தியும், நடிகர் ஜெரால்டு மில்டனின் தாயுமான வனஜா கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு வனஜா என்ற மனைவியும் ஜெரால்ட் மில்டன் என்கிற மகனும் ஜெனிதா என்கிற மகளும் உள்ளனர்.
இதில் ஜெரால்டு மில்டன் திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பதவி வகித்து வந்தார். இதோடு சினிமாவில் நடிகராகவும் அவர் உள்ளார்.
கத்தி சண்டை, றெக்க உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெரால்டு நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸின் மருமகன் ஆவார்.
ஜெரால்ட் மில்டனின் தங்கை ஜெனிதா, மார்டின் என்பவரைத் திருமணம் செய்து பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஜெனிதாவின் குழந்தை கெல்வின் (5)-ஐ கவனித்து கொள்ள தாய் வனஜா பெங்களூரில் உள்ள அவர் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்றுமுன்தினம் மதியம் தனது பேரன் கெல்வினை அழைத்துச் செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கி வந்தார் வனஜா.
அப்போது 4 மர்ம நபர்கள் வீட்டில் மேல் ஏறுவதை பார்த்த வனஜா திருடன் திருடன் என கத்தியுள்ளார்.
நால்வரும் அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து சத்தம் போட்ட வனஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் நால்வரும் தப்பியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பொலிசார் வனஜாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
வனஜா உண்மையிலேயே நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.