மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பது குறித்து ஆராய எதிர்வரும் வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் வெளிவந்த புலனாய்வுத் தகவல்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திரத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் ரணில் வியூகங்களை அமைத்து வருவதாக புலனாய்வுத் தகவல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிட்டியுள்ளதாகவும் இதனாலேயே அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதனையும் மீறி ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் திட்டம் தீட்டுவதாகவும் மாகாண சபைத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே ரணில் அவ்வாறானதொரு திட்டத்தைப் போடுவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் ஜனாதிபதிக்கு சென்றுள்ளன.
இதன்படி அடுத்த வாரம் கட்சித் தலைவர்களைக் கூட்டி மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு கட்சித் தலைவர்களை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான வழிமுறைகளில் ரணில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான யோசனையொன்றினை ஐக்கிய தேசியக் கட்சி சபையில் முன்வைத்துள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஜனாதிபதியை மேலும் மேலும் ஆத்திரமூட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடி நிலைமை நாட்டில் தோன்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.