யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆலய வளாகத்தில் சங்கிலி கொள்ளையர்களின் நடமாட்டம் காணப்படுவதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை ஐந்து மணிக்கு வைரவர் உற்சவத்துடன் ஆலய மஹோற்சவ திருவிழா நிறைவுக்கு வரும்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கொடியேற்ற வைபவத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்ததுடன், நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை காண புலம்பெயர் நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தாயகம் நோக்கி படையெடுக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சங்கிலி கொள்ளையர்கள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வின் போது உற்சவத்துக்கு வருகை தந்த இருவரின் தங்க சங்கிலிகள் கொள்ளையர்களால் பறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறான மோசமான சம்பவத்தில் புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே ஈடுபடுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.