பலாலியில் இருந்து 72 ஆசனங்களையுடைய விமான சேவையை உடன் ஆரம்பிக்க முடியும். இருப்பினும் அதற்கான அலுவலக வசதிகளை உடனடியாக ஏற்படுத்தியதும் விமான சேவையை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் என இலங்கை சிவில் விமான சேவைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியின் 6வது கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலமையில் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே சிவில் விமான சேவைப் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கில் காங்கேசன்துறை துறைமுகம் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளை மேற்கொண்டு யாழில் இருந்து விமான சேவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராயாவின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சிவில் விமான சேவைப் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில் ,
”விமான நிலைய தற்போதைய ஓடு பாதையில் 72 ஆசனங்களை உடைய விமானங்களை தரை இறக்க முடியும் என்னால் 72 ஆசணங்களையுடைய விமானங்களை பயன்படுத்தி யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிக்கும் வகையில் உடனடியாக அதற்கான அலுவலக வசதிகளை ஏற்படுத்தி அதனையடுத்து பிராந்திய விமான நிலையமாக்கும் ஏற்பாடுகள் இடம்பெறும்” என்றார்.




