முதலாம் தவணைக்கான பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோர உள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரி மாதம் பூர்த்தியாகின்றதா அல்லது 19ஆம் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான ஐந்தாண்டுகள் என்ற அடிப்படையில் 2020 ஜூன் மாதம் நிறைவடைகின்றதா என பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
19ஆம் திருத்த சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை அமுல்படுத்திய தினத்தின் பின் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆரம்பாகின்றது என கருதப்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழியமைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உச்ச பட்சமாக ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகளே பதவி வகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 18ஆம் திருத்த சட்டத்தில் ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மட்டும் பதவி வகிக்க முடியும் என்ற சரத்து நீக்கப்பட்டிருந்தது.
19ஆம் திருத்த சட்டத்தின் அடிப்படையில் மைத்திரியின் பதவி காலம் புதிதாக கணிக்கப்பட்டால் கடந்த ஜனாதிபதி பதவிகளை கருத்திற் கொள்ளாது மஹிந்தவும், சந்திரிக்காவும் 19ஆம் திருத்த சட்ட அமுலாக்கத்தின் பின் புதிதாக ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட முடியும் என்ற வகையில் வாதங்கள் முன்வைக்கப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், 19ஆம் திருத்த சட்டமானது கடந்த காலத்தை பாதிக்காது என்றால் மஹிந்த ராஜபக்ச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூடிய சாத்தியம் உண்டு என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே மைத்திரியின் இறுதி துருப்புச் சீட்டு மஹிந்தவிற்கே கூடுதல் நன்மையளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.