உலகின் தலைச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆண்டுக்கு 30 மில்லியன் யூரோ சம்பளத்தில் ஜூவன்டஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, 9 ஆண்டுகளாக விளையாடி வந்த ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகுகிறார்.
அடுத்த நான்கு ஆண்டுகள் இத்தாலியின் ஜூவன்டஸ் அணிக்காக விளையாட சுமார் 130 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக, 2009ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது உலகின் காஸ்ட்லியான வீரர் என்ற பெருமை அவருக்கு ஏற்பட்டது.
ரியல் மாட்ரிட் அணிக்காக, கடந்த 9 ஆண்டுகளில் 438 போட்டிகளில் விளையாடி, அதில் 451 கோல்கள் அடித்துள்ளார்.
4 முறை தங்கப் பந்து, 2 முறை ஃபிபா விருது, 3 முறை தங்க ஷூ உள்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணி 4 ஐரோப்பிய கிண்ணம் உள்பட 16 பட்டங்களை வென்றது.
அதில் ரொனால்டோவின் பங்கு மிகப் பெரியது. ஒவ்வொரு சீசனிலும் 50க்கும் மேற்பட்ட கோல்களை அடித்த சாதனையை 8 முறை புரிந்துள்ளார்.
தற்போது இத்தாலியின் ஜூவன்டஸ் அணிக்காக விளையாடவிருக்கும் ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு சுமார் 26,545,154 பவுண்ட்ஸ் சம்பளமாக வழங்கப்படுகிறது.
அதாவது வாரம் 510,483 பவுண்ட்ஸ் எனவும், ஒருநாளுக்கு சுமார் 72,925 பவுண்ட்ஸ் சம்பளம் எனவும் தெரியவந்துள்ளது.