இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணம் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் மேத்யூஸ் 85 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். பெர்னாண்டோ 49, மெண்டீஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர். ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து, 233 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பேரிஸ்டோவ் மலிங்கா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
வின்ஸையும் 14 ஓட்டங்களில் வெளியேற்றினார் மலிங்கா. சற்று நேரம் தாக்குப்பிடித்த மோர்கன் 21 ஓட்டங்களில் உடானா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
அரைசதம் அடித்து விளையாடிய ரூட்டை 57 ஓட்டங்களில் சாய்த்தார் மலிங்கா. அத்துடன், பட்லரையும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தார். இங்கிலாந்து அணி 35 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களள் எடுத்தது.
அந்த அணி 15 ஓவர்களுக்கு 82 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஸ்டோக்ஸ் ஒரு புறம் அதிரடியாக விளையாட மறுபுறம் விக்கெட் சரிவு தொடர்ந்தது.
மொயின் அலி 16, வோக்ஸ் 2, ரஷித் அலி 1, ஆர்ச்சர் 3 என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். 186 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து 9 விக்கெடை இழந்தது.
அப்போது, 44 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால், இலங்கை எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஸ்டோக்ஸ் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். இருப்பினும், 47வது ஓவரின் கடைசி பந்தில் உட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மலிங்கா 4 விக்கெட் எடுத்தார். டி சில்வா 3 விக்கெட் எடுத்தார். உடானா இரண்டு விக்கெட் சாய்த்தார். மலிங்கா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும்.