இந்திய மாநிலம் தமிழகத்தில் ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி ஒருவர், மகனின் சடலத்தோடு இரண்டு தினங்கள் தூங்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை அடையாறு வெங்கட் ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் 70 வயதான கலைக் கண்ணன். அஞ்சல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி இறந்துவிட்ட நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகனுடன் கலைக்கண்ணன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது குடியிருப்பானது சில தினங்களாக பூட்டியே இருந்துள்ளது. இதனால் கலைக்கண்ணன் வெளியூர் சென்றிருப்பார் என அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கருதியுள்ளனர்.
ஆனால், அவரின் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடையாறு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், வீட்டின் பூட்டை உடைத்தனர். வீட்டுக்குள் படுக்கையறையில் கலைக்கண்ணனின் மகனின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது.
கட்டிலின் அருகில் கலைக்கண்ணன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்ட பொலிசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைக்கண்ணனும் இன்று மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவித்த தகவலில், கலைக்கண்ணன், அவரின் மகன் ஆகியோர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுவதில்லை.
தனிமையில் வாழ்ந்த இவர்கள் இருவரும், பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே நேரல் செலவிட்டு வந்துள்ளனர். பொருள்கள் வாங்க மட்டும் கலைக்கண்ணன் வீட்டை பூட்டிவிட்டுச் செல்வார்.
மகன்மீது அன்பாக இருந்தார். இந்தச் சமயத்தில்தான் மகன் இறந்துபோய்விட்டார். அதை கலைக்கண்ணனின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், மகனின் சடலத்தின் அருகிலேயே இரண்டு தினங்களாக இருந்துள்ளார். மகன் கண்விழிக்காததால் சாப்பிடாமல் இருந்த கலைக்கண்ணன் மயங்கிவிட்டார்.
மருத்துவமனையில் மயங்கிய நிலையில் இருந்த கலைக்கண்ணனிடம் விசாரித்தபோது, பரிதாபமாக, என் மகன் எழும்பவில்லை சார் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
கலைக்கண்ணன் மற்றும் அவரின் மகன் சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்தபிறகுதான், அவர்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.