பொள்ளாச்சியில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி – உடுமலை சாலையில் கெடிமேடு என்ற இடத்தில் உள்ள கால்வாயில் கார் ஒன்று மிதந்ததை பொதுமக்கள் கண்டனர்.
உடனடியாக தீயணைப்புத்துறைக்கும், பொலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற அவர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
காருக்குள் 6 பேரது சடலங்கள் இருந்தன. விபத்தில் உயிரிழந்தவர்கள், கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரகாஷ் என்பவர், தனது மனைவி, இரு குழந்தைகள் மற்றும் சகோதரர் குடும்பத்தினருடன் அந்த காரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலை அகலமாகவும், அதன் வளைவில் பாலம் குறுகியதாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. நள்ளிரவில் கார் வேகமாகச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் பாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கால்வாயில் கார் விழுந்த போது கதவுகள் அனைத்தும் லாக் செய்யப்பட்டிருந்த காரணத்தால், யாராலும் தப்பித்து இருக்க முடியாது என பொலிசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.