ஆரம்பத்தில் ரசித்து பிறகு வெறுத்து இப்போது கடைசியாய் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருக்கிற போட்டியாளர் சாண்டிதான்.
சாண்டி குருநாதருக்கும், கமலுக்கும் செல்லப் பிள்ளை. ஒருவகையில் அங்கு அவருக்கு தரப்படும் முக்கியத்துவம் கூடுதல்தான். ஆனால் வேறு வழியில்லை. வேலைக்குப் போகாத சோம்பேறிப் பயலைக் கட்டி எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற மகராசி குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போய் உழைத்து, களைத்து வரும் மூத்த பிள்ளைக்கு சோற்றுக்குள் இன்னொரு முட்டை கூடுதலாக வைத்துத் தருவதற்கு நிகரானதே இது.
சொல்லப்போனால் அது மூத்த பிள்ளையின் மீதான பாசம் மட்டுமல்ல. பிற பிள்ளைகளும் நன்றாக வளர்வதற்கு ‘இவன் தெம்பா இருக்கனுமே ‘என்கிற தாயின் அக்கறை. பிக்பாஸ் சீசன் 3 க்கு சந்தேகமே இல்லாமல் சாண்டிதான் சம்பாதித்துக் கொட்டும் மூத்த பிள்ளை. அவர் இல்லையென்றால் இந்த நிகழ்ச்சி லவ்வர்ஸ் பார்க்கில் திறக்கப்பட்ட குடும்பநீதிமன்றமாக கூச்சலும், அழுகையுமாகவே முடிந்திருக்கும்.
சாண்டி 2k kid அல்ல.80 s kid ஆகவே இருக்கக் கூடும். ஆனால் மில்லினியம் இளைஞர்களைக் கவர்கிற எல்லா அம்சங்களும் சாண்டியிடம் இருக்கின்றன. சாண்டி கவினைப் போல் பிற நேரங்களில் தன் தரப்பை வளவளவென்று பேசுவதில்லை. எல்லாவற்றுக்கும் பாட்டாலும், நகைச்சுவையாலுமே பதில் சொல்கிற சிறந்த கலைஞன்.
சொல்லப்போனால் அந்த வீட்டில் சேரனின் தலைகீழான வேறொரு வடிவம்தான் சாண்டி. ( பெயர்களே சாட்சி)சேரன் சீரியசானவர். சாண்டி கலகலப்பானவர். சேரன் சரியாக ஆலோசனை சொல்கிறவர். சாண்டி சகலத்தையும் கலாய்க்கிறவர். சேரனுக்கு பாசம் என்றால் சாண்டிக்கு நட்பு.
சேரன் பெண்களை ஈர்ப்பவர் என்றால் சாண்டி கை விடப்பட்ட ஆண்களின் தலைவன். சேரன் கட்டுப்பாடானவர். சாண்டி சுதந்திர மனநிலைக்கான அடையாளம். சேரன் புனிதங்களைக் கொண்டாடுகிறவர். சாண்டி சகலத்தையும் கலைத்துப் பார்ப்பவர்.
சேரன் “என் மனைவி வரலன்னு கோபமா இருக்கேன்னு ‘ கமலிடம் சொன்னால், சாண்டி ‘கொழுந்தியா வரலன்னு’ கவலைப்பட்டதை சபையில் போட்டுடைத்தவர். ஆனால் அன்பு, பாசம் பற்றி பேசும் சேரனை விட தன் குடும்பத்தின் மீது ஆழமான ஈடுபாடு கொண்டவர் சாண்டிதான். லாலாவின் மீதான அவரது அன்பு கவித்துவமான ஒன்று. மனைவியை அவர் ‘ கண்ணம்மா’ என்றழைப்பது என்னை மிகவும் ரசிக்க வைத்தது.
அவருடைய தொடக்க கால வாழ்க்கை பற்றி எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக துயரங்களும், புறக்கணிப்புகளும் நிறைந்ததாகவே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனை அவர் கசப்பு மண்டிய நகைச்சுவையால் மட்டுமே கடந்து வந்திருப்பார்.
‘சாவு வீட்டிலும் சிரிப்பான் ‘ என்று முன்னாள் மனைவி காஜல் பேட்டி கொடுத்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவருக்கென்று தேவதையைப் போல் லாலா பிறந்த பிறகு அவர் அன்பை உணர்ந்திருக்க வேண்டும். அன்புக்காக ஏங்கிய அந்த கசப்பு அங்கதன் தன்னை வேறாக உணர்ந்த தருணம் அதுவாகவே இருக்க முடியும். (அதற்கு கண்ணம்மாவும் மிக முக்கியமான காரணம்)
சாண்டியின் பலமும், பலவீனமும் நட்புதான். இதிலும் சேரனுக்கு நேர் எதிர் அவர். சேரன் தனக்கு வேண்டியவராக இருந்தாலும் தான் நம்பும் மதிப்பீடுகள் அவரிடம் இல்லையென்றால் கோபப்படுவார். சாண்டி அப்படியில்லை. அவருக்கு ஆள்தான் முக்கியம். தனக்கு பிடித்தவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அர்ச்சுனனுக்காக தங்கச்சியையே கடத்தும் கிருஷ்ணனைப் போன்றவர் சாண்டி.
ஆனால் கவின் போன்ற ஒரு ஆளை இந்தளவு தூக்கிச் சுமக்க சாண்டிக்குத் தேவையே இல்லை. ஆனாலும் சாண்டி அதனைச் செய்கிறார். இதனால் தனக்கு கெட்ட பெயர் வருமென்றும் சாண்டிக்குத் தெரியும். ஆனால் தன் திறமைகள் மீதான தன்னம்பிக்கையால் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கிறார். கவினுக்கு ஆலோசனையும் சொல்கிறார்.
ஆனால் அந்த ஆலோசனைகளை இடது கையால் ஒதுக்கி விடும் கவின் பின்னால் கஷ்டப்படும் போதும் சொல்லிக் காட்டாமல் கூடவே நிற்கிறார்( கிட்டதட்ட கும்பகர்ணன் போல)கவின் தன்னைப் புண்படுத்திய போது யாருக்கும் தெரியாமல் பாத்ரூமில் போய் அழுது விட்டு பிறகு கவின் தனிமையில் இருப்பதைப் பார்த்து அவரிடம் வலியப் பேசி வீட்டுக்கு அழைத்து வந்தாரே அது ஒன்று போதும் .
சாண்டி யாரென்பதைத் தெரிந்து கொள்ள? சாண்டி கவினைப் போல நட்பு குறித்து பேசுகிறவரல்ல. யாருக்கும் தெரியாமல் நட்புக்காக எதையும் விட்டுக் கொடுக்கிறவர். கவின் குறித்த இந்த ஒருவிஷயத்தைத் தவிர அவரிடம் குறைகளே இல்லை. கலாய்க்கிற போது கூட யாராவது புண்பட்டால் உடனே மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு விடுகிறார்.
அவரிடம் இன்னொரு இயல்பும் உள்ளது. ஒன்றில் ஆழமாக ஈடுபட்டுக் கொண்டே மனதளவில் அதை விட்டு விலகியும் இருப்பார் ( லாலா மட்டும் விதிவிலக்கு)
பலரும் நினைப்பது போல் பாய்ஸ் டீம் சாண்டி உருவாக்கியதல்ல. அது கவினின் game plan ( கவின் பற்றிப் பேசும் போது அதனைப் பேசுகிறேன்) நண்பனின் plan ஐ அங்கீரித்து அதற்காக சிலுவையேற்பவர்தான் சாண்டி. அவருக்கு இப்படி கூட்டம் சேர்த்துதான் ஜெயிக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை . கவின் மனதில் நினைத்தாலே அதைச் செய்து விடும் நண்பன்தான் சாண்டி. அவருக்கு முகின், தர்ஷன், லோஸ்லியா எல்லாம் வெளிவட்டம்தான். கவின்தான் எல்லாம். இப்படி ஒரு நண்பன் கிடைப்பது வரம். அதற்கு கவின் தகுதியானவரா?என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அந்த வீட்டில் நிகழ்ந்த அழகான விஷயங்களில் ஒன்று சேரனும், சாண்டியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டது. சாண்டியின் குழந்தைத் தனத்தை சேரனும், சேரனின் பெரிய மனுஷப் பக்குவத்தை சாண்டியும் உணர்ந்திருப்பது அவர்களை இன்னும் வலுவான போட்டியாளர்களாக உருமாற்றியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் அடிப்படையை கேள்வி கேட்டவர் சேரன் என்றால் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கோணத்தில் கலாய்த்துத் தள்ளுபவர்தான் சாண்டி. மூன்று சீஸன்களிலும் இப்படி ஒரு ஆள் யாருமே இல்லை. ( கொஞ்சம் கஞ்சா கருப்பு.
ஆனால் அவர் இப்படி ஒரு புத்திசாலி இல்லை)எல்லோரும் ஒரு கம்பெனி ceo வாகக் கருதி பிக்பாஸிடம் நடந்து கொள்ளும் போது வேலை வெட்டி இல்லாத தாய்மாமனை கலாய்ப்பது போன்ற பாவத்துடன் சாண்டி பிக்பாஸிடம் நடந்து கொள்கிறார்.
பிக்பாஸின் தில்லுமுல்லுகளை ‘குருநாதா இதெல்லாம் உன் வேலைதானா? ‘ என்று கேட்டு அவரையே தலைகுனிய வைத்து அதையும் ஒரு ஃபுட்டேஜாக்கி போட வைத்து விடுகிறார். சோகமான தருணங்களில் கூட அவர் குருநாதரை மென்மையாகத் திட்டுவது அவ்வளவு அழகான ஒன்று.
குழந்தைகள், இளைஞர்கள், இல்லத்தரசிகள். ஆண்கள் , பெண்கள், முதியோர்கள் என்று சகலருக்கும் சாண்டிதான் ஃபேவரைட் . சேரனின் அம்மாவே சாண்டி ரசிகைதான். இரண்டாயிரங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்களில் விளிம்பின் குரல் மையத்திற்கு வந்ததைப் போல் சாண்டியின் வெற்றி விளிம்புநிலை அழகியலின் வெற்றியே.
சாண்டி வென்றால் அது ஆச்சர்யமே இல்லை. தோற்றால் ஒரே காரணம்தான். பல கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியை நடத்தும் கல்லூரி தன் நற்பெயருக்காக முதல் பரிசு பெறத் தகுதியான தம் கல்லூரி மாணவனை பழி கொடுப்பதற்கு நிகரானதே சாண்டி தோற்பது.
ஏனென்றால் சாண்டியின் வெற்றி பிக்பாஸ் டீம் தன்னைத்தானே வெற்றி பெற்றதாக அறிவிப்பதற்கு நிகரானது. ‘குருநாதா ‘ ‘லாலா’ என்ற இரண்டு சொற்களும் நீண்ட நாட்களுக்கு பலரின் மனதிலிருந்து நீங்காமல் இருக்கும். அந்த வெற்றி எந்த சீசனின் பிக்பாஸ் வெற்றியாளருக்கும் கிடைக்காத ஒன்று.