வவுனியாவில் இந்த வருடத்தில் மாத்திரம் 36 பேர் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக பிரதி மாகாண சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வவனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது வவுனியா மாவட்டத்தில் தற்கொலை செய்யப்படும் விகிதம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இணைத்தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கும்போது,
வவுனியாவில் அண்மைக்காலமாக தற்கொலை அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. எனவே சமூக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. இது பாரிய சமூக பிரச்சனையாக மாறியுள்ளது. எனவே பாடசாலை மட்டத்தில் கல்வி திணைக்களங்கள் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும். யாரோ இறந்தார்கள் என விட்டு விட முடியாது. இது பாரிய பிரச்சனை. எனவே ஏனைய மாவட்டங்களை விட எமது மாவட்டத்தில் தற்கொலை அதிகரித்துள்ளதால் அதனை அனைவரும் கரிசனை கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அங்கு பிரசன்னமாகியிருந்த மேலதிக பிரதி மாகாண சுகாதார வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 36 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந் நிலையில் நாம் நாளைய தினம் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.