நீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா!

0

திருமணம் என்று வந்துவிட்டால் அதில் முதிலிடத்தில் இருப்பது ஜாதக பொருத்தம்தான். ஏனெனில் நமது சமூகத்தில் ஜாதகம் பார்த்து அதில் பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. காதல் திருமணமாகவே இருந்தாலும் அது இருவீட்டு சம்மதத்துடன் நடக்கும் போது அதற்கு திருமண பொருத்தம் பார்ப்பது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

திருமண பொருத்தம் என்பது ஆண், பெண் இருவரின் பெயர், ராசி, நட்சத்திரம், ஜாதகம் என அனைத்தையும் பொறுத்துதான் பார்க்கப்படுகிறது. குறைந்தது ஏழு பொருத்தமாவது இருக்க வேண்டுமென முன்னோர்கள் கூறுவார்கள்.நமது ராசி எப்படி திருமணத்தில் முக்கியத்துவம் வகிக்கிறதோ அதேபோல நமது பிறந்த நட்சத்திரமும் மிகவும் முக்கியமான இடம் வகிக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திரம் எதுவென நமது முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளார்கள். இந்த பதிவில் ஒவ்வொரு நட்சத்திரதிற்கும் பொருத்தமான நட்சத்திரம் எது அவர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பார்க்கலாம்.

அஸ்வினி
திருமண உறவை பொறுத்த வரையில் இவர்கள் எப்பொழுதும் தங்களை புரிந்து கொள்பவர்களையும், தன்னை போலவே சிந்திப்பவர்களையும் எதிர்பார்ப்பார்கள். சுதந்திரத்துடன் நிபந்தனையற்ற காதலை தங்கள் துணையிடம் விரும்புவார்கள். இவர்களுக்கு சிறந்த துணை பரணி நட்சத்திரம் ஆகும், மேலும் ஆயில்யம், ரேவதி, ஸ்வாதி மற்றும் திருவோணம் போன்ற நட்சத்திரங்களும் சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

பரணி
காதலில் சிறந்து விளங்கும் இவர்கள் தங்கள் துணை அர்ப்பணிப்புடன் தன்னை காதலிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வாழ்க்கை மீதான அவர்களின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்பவர்களே இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது. புனர்பூசம், ஸ்வாதி, உத்திராடம் மற்றும் திருவோணம் இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

கிருத்திகை
இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், ஆர்வமிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் காதலில் இருப்பவர்கள் இவரின் கோபம் மற்றும் குற்றங்களை பொறுத்து கொள்பவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு சிறந்த துணையாக இருப்பது பூசம், கிருத்திகை மற்றும் சதயம் ஆகும்.

ரோகினி
அதிக உணர்ச்சிவசப்பட கூடிய இவர்கள் அதிக காதலை விரும்புபவர்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் காதலுடன் வாழவேண்டும் என்று விரும்புவார்கள். வெளிப்படையான மனம் கொண்ட இவர்கள் தங்கள் துணையிடம் இருந்து பரிபூரணமான காதலை எதிர்பார்க்கிறார்கள். அனுஷம் இவர்களுக்கு மிகச்சிறந்த துணையாக இருக்கும், மேலும் மிருகசீரிஷம், சதயம் மற்றும் பூசம் போன்றவையும் சிறந்த துணையாக இருக்கும்.

மிருகசீரிஷம்
அதிக காதல் உணர்ச்சி நிரம்பிய இவர்கள் தன்னை இணையாக மதிக்கும், தன்னை போலவே சிந்திக்கும் மனம் கொண்ட வாழ்க்கைத்துணையை எதிர்பார்ப்பார்கள். சரியான வாழ்க்கைத்துணை மட்டுமே வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும் என்னும் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் இவர்கள். அஸ்தம், ரேவதி, திருவாதிரை மற்றும் ரோகினி சிறந்த துணையாக இருப்பார்கள்.

திருவாதிரை
அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த இவர்கள் குழப்பரீதியான உணர்ச்சிகளை கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்து உறவுகளிலும் இவர்கள் 100 சதவீத அர்ப்பணிப்புடன் இருப்பார்கள், அதையே எதிரில் இருப்பவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். மிருகசீரிஷம்ம், ஸ்வாதி மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் சிறந்த துணையாக இருப்பார்கள்.

புனர்பூசம்
அக்கறையும், மகிழ்ச்சியும் நிரம்பிய இவர்கள் எப்பொழுதும் எதிர்பாலினத்திரிடையே மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள், இவர்களின் காதலுக்காகவும், கவனத்தை ஈர்க்கவும் பலரும் காத்திருப்பார்கள். இதனால் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். இவர்களை விரும்புபவர்கள் இதனை பொறுத்துக்கொள்பராக இருக்க வேண்டும். பரணி மற்றும் பூசம் போன்ற நட்சத்திரங்கள் இவர்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள்.

பூசம்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இவர்கள் மிகவும் கூச்சசுபாபம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலிப்பவர்கள் இவர்களிடம் இருந்து உணர்ச்சிகளை எதிர்பார்ப்பதிலும், உறவு நிலைகளிலும் மிகவும் கடினமாக உணருவார்கள். இவர்களுக்கு ஆயில்யம் மற்றும் அஸ்வினி மிகவும் சிறந்த துணையாக இருப்பார்கள்.

ஆயில்யம்
மிகவும் பொறாமை குணம் கொண்ட இவர்களுக்கு காதல் எப்பொழுதும் அதிகம் தேவைப்படும், தன் துணையின் கவனம் எப்பொழுதும் தன்னை சுற்றி மட்டுமே இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். நூறு சதவீத காதலை எதிர்பார்க்கும் இவர்கள் அதன் அளவு குறையும்போது மிகவும் வருத்தப்படுவார்கள். பூசம் மற்றும் அஸ்வினி இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.

மகம்
காதல் மட்டுமின்றி அனைத்து உறவுகளிலும் அதிக ஈகோ மற்றும் அதிக எதிர்பார்ப்பு கொண்டவர்கள் இவர்கள். தங்களின் துணைக்கென ஒரு எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள், அதற்கேற்ப அனைத்தும் நிறைந்த துணை கிடைப்பது மிகவும் கடினமாகும். பூரம், அஸ்தம் மற்றும் மகம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

பூரம்
வெள்ளி கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் அன்பு மற்றும் நல்ல குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள், கோபம் இருந்தாலும் இவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமானவராக இருப்பார்கள். தங்கள் துணையின் மகிழ்ச்சிதான் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பூரம் மற்றும் உத்திரம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

உத்திரம்
உணர்ச்சி மற்றும் எதார்த்த வாழ்க்கைமுறையில் நம்பிக்கை உடையவர்கள். மகிழ்ச்சியான தனிப்பட்ட வாழ்க்கையையும், உறவுகளையும் நிர்வகிப்பதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். குடும்பம்தான் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அனுஷமும், உத்திரமும் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கும்.

அஸ்தம்
மிகவும் உணர்ச்சிவசபடுவதுதான் இவர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். சிலசமயம் இவர்களின் சுயநலத்தால் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். காதலும், பொறுமையும் இவர்களுக்குள் இருக்கும் சிறந்த குணத்தை வெளிகொண்டுவரும். பூராடம், சித்திரை மற்றும் மிருகசீரிஷம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கலாம்.

சித்திரை
இவர்கள் எப்பொழுதும் தனக்கென ஒரு சொந்த இடத்தை உருவாக்கி கொள்வதில் இவர்கள் அக்கறையுடன் இருப்பார்கள், அதனால் இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். உறவில் சிறந்து விளங்கினாலும் இவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அஸ்தம், மூலம் மற்றும் சித்திரை சிறந்த துணையாக இருப்பார்கள்.

ஸ்வாதி
காதல் உணர்வும், தோற்றமும் இவர்களின் சிறந்த அம்சங்களாகும். இவர்கள் வித்தியாசமாக காதலிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். திருமண உறவில் மிகவும் ஆர்வமாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். பரணி நட்சத்திரம்தான் இவர்களுக்கு சிறந்த துணை. திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம் போன்றவை இவர்களுக்கு சிறந்த துணையாகும்.

விசாகம்
பொருள் மற்றும் உடல் தாண்டிய காதலில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள், அதுதான் இவர்களுக்கு வாழ்க்கையில் அமைதியையும் தரும். ஆனால் சிலசமயம் இவர்களுக்கு உறவில் ஏற்படும் சில அதிருப்தி இவர்களின் திருமண வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். விசாகம், அஸ்தம் மற்றும் சித்திரை இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.

அனுஷம்
இவர்களின் குணநலன்களில் தொடர்ந்து முரண்பாடுகளும், ஏற்ற இறக்கங்களும் இருக்கும். இவர்களுக்கு காதலில் நம்பிக்கை அதிகம் இருக்கும் அதற்காக எதையும் தியாகம் செய்வார்கள். காதலில் இவர்களுக்குள் எப்பொழுதும் மறைமுக ஆர்வம் அதிகம் இருக்கும். அஸ்தம், ரோகிணி மற்றும் உத்திரம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.

கேட்டை
மர்மங்களும், ஆன்மீக எண்ணமும் அதிகம் நிறைந்த இவர்களின் காதல் உணர்வை அதிகரிக்கிறது. உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் இவர்கள் காதலின் எல்லையை அடைய நினைப்பார்கள். அதேசமயம் இவர்கள் காதலில் அதிக பொறாமை எண்ணமும் கொண்டவர்கள். கிருத்திகை, மகம் மற்றும் திருவோணம் இவர்களுக்கு சிறந்த துணை.

மூலம்
நேர்மையான இவர்கள் அன்பானவராகவும் இருப்பார்கள், காதலில் இவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்கள் தங்களின் சொந்த வழியில் வாழ விரும்புவார்கள். பூராடம், மூலம் மற்றும் சித்திரை இவர்களின் சிறந்த துணை.

பூராடம்
மாற்றத்தை விரும்பும் இவர்கள் எளிதில் சலிப்பை உணர்வார்கள். இவர்களின் துணை எப்பொழுதும் இவர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து தன்னை மேம்படுத்தி கொள்வதில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வம் காட்டுவார்கள். மூல நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும் இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.

உத்திராடம்
தனிமையை விரும்பும் இவர்களால் காதல் வாழ்க்கையில் இவர்களுக்கு அடிக்கடி பல சிக்கல்கள் ஏற்படும். தன்னை போலவே குணம் உள்ளவர்கள் மீது இவர்கள் காதல் வயப்பட்டுவிட்டால் இவர்களின் காதல் வாழ்க்கை அருமையானதாக இருக்கும். உத்திரட்டாதி இவர்களின் சிறந்த துணையாகும்.

திருவோணம்
மென்மையான அதேசமயம் உணர்ச்சிவசபட கூடிய இவர்கள் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்க கூடியவர்கள். ஆனால் தனக்கு முழுமையாக பிடித்தவர்களிடம் மட்டுமே இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். உத்திரட்டாதி, பரணி மற்றும் பூசம் இவர்களுக்கு சிறந்த துணை.

அவிட்டம்
ஆர்வம் அதிகமுள்ள இவர்கள் தங்கள் துணையிடம் எப்பொழுதும் அதிக காதலை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினையாக இருப்பதே இவர்களின் ஈகோதான். அதனை தவிர்க்கவில்லை எனில் இவர்களின் காதல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அவிட்டம், சதயம் மற்றும் கிருத்திகை இவர்களுக்கு சிறந்த துணை.

சதயம்
காதலில் அதிகம் எதிர்பார்க்கும் இவர்கள் எப்பொழுதும் சுவாரசியமான நிகழ்வுகளை எதிர்பார்ப்பார்கள். உண்மையான காதல் கிடைக்கும் போது இவர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கும். ரோகிணி, அவிட்டம் மற்றும் கிருத்திகை இவர்களுக்கு சிறந்த துணையாவார்கள்.

பூரட்டாதி
ஆசையும், காதலும் இவர்களிடம் எப்பொழுதும் நிறைந்திருக்கும். இவர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் நங்கூரமாக காதல் இருக்கும். உண்மையான காதல் இவர்களின் வாழ்க்கையை முழுமையானதாக மாற்றும். உத்திரட்டாதியும், மிருகசீரிஷமும் இவர்களின் சிறந்த துணையாவார்கள்.

உத்திரட்டாதி
இவர்கள் இரட்டை குணங்கள் கொண்டவர்கள், ஒருசமயம் மிகவும் அன்பாக இருப்பார்கள், மற்றொரு சமயம் இவர்கள் முற்றிலுமாக புறக்கணித்து விடுவார்கள். ரேவதி, உத்திரட்டாதி மற்றும் பூரட்டாதி ஆகியவை இவர்களின் சிறந்த துணையாவார்கள்.

ரேவதி
உணர்ச்சிவசப்பட கூடிய இவர்கள் ஆழமான அன்பை செலுத்துவார்கள். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் இவர்களின் சிறந்த துணையாக இருப்பதுடன் இவர்களின் அன்பையும் பெறுவார்கள். பூரட்டாதி மற்றும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 5 ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை பழிவாங்காமல் விடமாட்டார்களாம்! ஜாக்கிரதை!
Next articleஇந்த ராசிக்காரர்கள் சரியான ஓட்டைவாயாக இருப்பார்கள்! இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லிவிடாதீர்கள்!