நன்மை பயக்குமெனின்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Nanmai Pajakkumenin!
பூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு தூக்குத் தூக்கியது.
அத்துடன் ஒரு பத்துக் ‘கோட்டை நிலம்’; நெல் விலை முன்பு உயர்ந்த பொழுது ஒரு தட்டு; இவைகளினால் சாலைத் தெரு முதலாளி என்று பெயர். தெய்வ பக்தி, உலக நடவடிக்கைகளைப் பொறுத்து கோவிலுக்குப் போதல், நீண்ட பூஜை முதலியன எல்லாம் உண்டு.
பக்கத்து வீட்டுச் சட்டைநாத பிள்ளை, புஸ்தகப் புழு, இவருக்கு இருந்த சொத்து வகையறாக்களைப் புஸ்தகமாக மாற்றுவதில் நிபுணர். வீட்டிலேயே ஒரு புஸ்தகசாலை.
கிடைக்காத புஸ்தகங்கள், வேண்டாத புஸ்தகங்கள், வேண்டிய புஸ்தகங்கள், பழைய பிரதிகள், அபூர்வ ஏடுகள் எல்லாம் இவர் வீட்டில் பார்க்கலாம். ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் நீண்ட காலமாக. அவர் புஸ்தகம் எழுதுவது வெகுகாலமாக வெறும் சமாச்சாரமாக இருந்து பழங்கதையாக மாறிவிட்டது.
இவருக்கு உலகமே புஸ்தகம்; அறம், பொருள், இன்பம், வீடு எல்லாம் அதுதான்.
இந்த இரண்டு பேர்களும் அத்தியந்த நண்பர்கள். சாயங்காலம் நான்கு மணி முதல் சட்டைநாத பிள்ளை பூவையாப் பிள்ளையின் பேச்சு இன்பத்தை நாடுவார். இருவரும் வெளியே உலாவி வருவார்கள்.
இதுதான் இவர்கள் சந்திக்கும் நேரம். பணத்தைப் புஸ்தகமாக மாற்றும் சட்டைநாத பிள்ளை, தமது நண்பரிடம் கடன் வாங்கியிருந்தார் என்றால் அதிசயமல்ல. கொஞ்சம் நாளாகிவிட்டது.
சட்டைநாத பிள்ளை தனது புஸ்தகக் கூட்டத்தில் அளவளாவிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெண் தங்கம் ஒரு காகிதத் துண்டைக் கொண்டு வந்து கொடுத்து “மேல வீட்டு பெரியப்பா குடுத்தாஹ” என்றாள்.
உயர்திரு அண்ணாச்சி அவர்களுக்கு,
நம்ம விஷயத்தை கொஞ்சம் தாங்கள் துரிசாப் பார்க்கணும். இன்று சாயங்காலம் மேற்படி விஷயத்திற்கு வருவேன். மறக்கக்கூடாது.
இப்படிக்குத் தங்கள் உயிர் நண்பன் பூவையாப் பிள்ளை
என்று வாசித்தார்.
“சதி. அண்ணாச்சிக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்கணும். நெறுக்கிறாஹ. ஏட்டி நீ சவுந்திரத்தை அனுப்பு” என்று சொல்லிவிட்டார்.
கொடுக்க வேண்டியது 500 ரூ. அதிகமாக 200 ரூ. சேர்த்துப் பாங்கிற்குச் செக் எழுதியாகிவிட்டது. எதற்கு? எல்லாம் புஸ்தகத்திற்குத்தான்.
“ஏலே! சவுந்திரம், இதைப்போய் மாத்திக்கிட்டு சுறுக்கா வா. மணி பதினொண்ணு ஆயிட்டுதே! போ! போ!” என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த ‘செந்த அவஸ்தா’ முதல் பாகத்தில் தன்னை மறந்து விட்டார்.
ஒரு மணிநேரம் கழிந்தது. சவுந்திரமும் வந்துவிட்டான்.
எல்லாம் 100 ரூ. நோட்டுக்கள். சட்டைநாத பிள்ளை தன்னை மறந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாகச் செய்பவர். வந்த நோட்டுக்கள் நம்பரை எல்லாம் குறித்துக் கொண்டார்.
அப்பொழுதும் ஜரத்துஷ்டிரனுடைய மொழிகளில்தான் மனம். அதை யோசித்துக் கொண்டே ஐந்திற்குப் பதிலாக ஆறு நோட்டுக்களை எடுத்துக் கொண்டு பூவையாப் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்.
பூமிநாத பிள்ளையின் பூஜை முடியும் சமயம்.
“அண்ணாச்சி வரணும், வரணும், ஏது இந்தப் பக்கமே காணமே. ஒரு நிமிட்” என்று பூஜையின் ‘கியரை’ மாற்றி வேகத்தை அதிகப்படுத்தினார்.
‘மந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு இத்யாதி, இத்யாதி; முற்றிற்று; திருச்சிற்றம்பலம்’ என்று முடித்துவிட்டு, “என்ன அண்ணாச்சி? என்ன விசேஷம்” என்றார்.
“ஒண்ணுமில்லை, அந்த விசயத்தை முடுச்சிக்கிடலாம் என்று வந்தேன்”
“ஏது நம்ம துண்டில் ஏதும் மனத்தாங்கலாக எழுதிட்டேனோ?”
“அதொண்ணுமில்லே. கையிலிருக்கப்ப குடுத்திடலாமென்று நினைச்சேன். எனக்குத்தான் மறதியாச்சே” என்று நோட்டுப் பொட்டணத்தைக் கையில் கொடுத்தார்.
அவர் பிரித்துப் பார்ப்பது போல் கவனித்து விட்டு மடியில் வைத்துக் கொண்டார்.
“சரியாப் பாருங்க.”
“அதுக்கென்ன! எல்லாமிருக்கும், எங்கே போகுது?”
“அண்ணாச்சி நம்மகிட்டே ஒரு விசயமில்லா?”
“சொல்லுங்க”
“நம்ம பையன் பீ.ஏ.தானே?”
‘தன் பெண்ணுக்கு வரன் தேடுகிறாரோ’ என்று நினைத்தார் பூவையாப் பிள்ளை.
“ஆமாம் தங்கத்திற்கு வயதுதான் வந்துவிட்டதே. எல்லாம் நாளும் கிழமையும் வந்தா முடியும். அதுக்கென்ன விசாரம்” என்றார் பூவையாப் பிள்ளை.
“அதில்லே அண்ணாச்சி. அவுஹ காலேசிலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. நான் எழுதும் புஸ்தகத்திற்கு அது கட்டாயம் எனக்கு வேண்டியது.
எங்கேயும் கிடைக்காது. அவனை எடுத்து வரச் சொல்லுங்க. பிறகு காணமற் போயிட்டது என்று விலையைக் கொடுத்துவிடுவோம்” என்றார்.
“இம்பிட்டுதானே? ஏலே! அய்யா! நடராசாவை எங்கே?”
“நீங்க அவனைப் புஸ்தகத்தை மாத்திரம் எடுத்துவரச் சொல்லுங்க. அவனுக்குத் தெரியாது சின்னப் பையன்.”
நடராஜன் வந்தான்.
“அண்ணாச்சிக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். எடுத்துக் கொண்ணாந்து குடு.”
பெயர் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பையனை அனுப்பியாகிவிட்டது.
“பொறவு, நான் போயிட்டு வாரேன்.”
“என்ன அதுக்குள்ளே! வெத்திலை போடுங்க. நம்ம சவுந்தரம் இருக்கானே அவன் ஒரு 100 ரூபா வாங்கினான். இப்போ அப்போ என்கிறான். நீங்க கொஞ்சம் பாக்கணும்.”
“நான் கண்டிக்கிறேன். அந்த மாதிரி இருக்கலாமா? போயிட்டு வாரேன்” என்று விடைபெற்றுக் கொண்டார்.
பூவையாப் பிள்ளை பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டுமுன் எண்ணினார். அதிகமாக இருந்தது. கொண்டு போய் கொடுத்துவிடலாமே என்று நினைத்தார்.
‘அவராக வரட்டுமே; என்ன இவ்வளவு கவலை ஈனம்’ என்று நினைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.
அன்று முழுவதும் சட்டைநாத பிள்ளை வரவில்லை. இரண்டு நாள் பார்த்துக் கொண்டு பாங்கிக்கு அனுப்பலாம் என்று நினைத்துச் சும்மாயிருந்தார்.
சாயங்காலம் நடராஜன் புஸ்தகத்தைக் கொண்டுவந்தான். பிள்ளையவர்கள் அதைக் கொண்டு கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றிப் பேசவில்லை.
இரண்டு நாளாயிற்று.
சட்டைநாத பிள்ளைக்குப் புஸ்தகம் வாங்கப் பணம் தேவையாக இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தார்.
ஒரு நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. ஒருவேளை தவறுதலாகக் கொடுத்துவிட்டோ மோவென்று பூவையாப் பிள்ளையிடம் சென்றார்.
கேட்டவுடன் அவர் வெகு சாந்தமாக ‘இல்லையே’ என்று சொன்னவுடன் வீட்டில் எங்கும் தேடினார். பணத்தைக் காணோம் என்று வீட்டில் ஒரே அமளி; களேபரம்.
ஒன்றும் தெரியவில்லை.
பாங்க் காஷியரிடம் சென்று நம்பர்களைக் குறித்துக் கொடுத்து, வந்தால் சொல்லும்படி தெரிவித்துவிட்டு வந்தார்.
அன்று சாயங்காலம் காஷியர் அவர்கள் பூவையாப் பிள்ளை செலுத்திய 600 ரூபாயில் இவர் கொடுத்த ஆறு நம்பரும் இருக்கின்றன என்று தெரிவித்துச் சென்றார்.
முதலில் சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டுவிட்டார். இருந்தாலும் பணத்தாசை யாரை விட்டது என்று நினைத்துக் கொண்டு வெகு கோபமாகப் பூவையாப் பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.
“என்ன அண்ணாச்சி? நீங்க இப்படி இருப்பிஹ என்று நினைக்கவே யில்லை. நீங்க குடுத்த அறுநூறு ரூபாயில் எனது ஆறு நம்பர்களும் இருக்கிறது என்று காஷியர் பிள்ளை இப்பத்தான் சொல்லிவிட்டுப் போனார். நீங்கள் இப்படிச் செய்யலாமா?” என்று அடுக்கிக் கொண்டே போனார். ஸ்வரம் ஏறிக்கொண்டே போயிற்று.
பூவையாப் பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அகப்பட்டுக் கொண்டோ ம். மானம் என்றெல்லாம் ஒரு நிமிஷம் மனம் கொந்தளித்தது. திடீரென்று ஒரு யோசனை; வழிபட்ட தெய்வந்தான் காப்பாற்றியது.
“சவுந்திரம் மத்தியானந்தான் அவன் கடனுக்கு நீங்க உதவி செய்ததாகக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்கென்ன?”
“அப்படியா, திருட்டு ராஸ்கல். சவத்துப் பயலே என்ன செய்கிறேன் பாருங்கள்! நம்ம இடையில் சண்டை உண்டாக்கிவிட்டானே” என்று இரைந்து கொண்டு வீட்டிற்கு ஓடினார்.
சவுந்திரம், ‘கண்ணாணை’ ‘தெய்வத்தாணை’ எல்லாம் பலிக்கவில்லை. வேலைபோய்விட்டது.
“நீ நாசமாய்ப் போகணும்” என்று ஒரு கைப்பிடி அள்ளிவிட்டுப் போகும்பொழுது, தான் கொடுக்கவேண்டிய, தாங்க முடியாத பாரமாகிய கடன் சுமை தெய்வச் செயலாகத் தீர்ந்துவிட்டதை எண்ணவேயில்லை. என்ன நன்றி கெட்ட உலகம்!
ஒரு வாரமாகிவிட்டது.
புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
நடராஜன் சட்டைநாத பிள்ளையை நாடிச் சென்றான்.
“மாப்பிள்ளை வாருங்கோ.” சட்டைநாத பிள்ளை நடராஜனை எப்பொழுதும் இப்படித்தான் கூப்பிடுவார்; அதுவும் தனியாக இருக்கும் பொழுது.
“அந்தப் புஸ்தகம் வேண்டுமே; நாளாகிவிட்டது.”
“அதைத்தான் சொல்ல வந்தேன். புஸ்தகத்தை இங்குதான் வைத்திருந்தேன். காணவில்லை. பயப்படாதே; விலையைக் கொடுத்துவிடுவோம். சவுந்திரம் பயல் திருடி இருப்பானோ என்று சந்தேகம்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.
நடராஜன் திடுக்கிட்டுவிட்டான். இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் புஸ்தகம் கண்ணில் பட்டது. ஆச்சரியம், திகில், கோபம்.
“இந்தாருங்கள் 20 ரூபாய் இருக்கிறது. கேட்ட விலையைக் கொடுத்து விடுங்கள்” என்று சிரித்துக் கொண்டே நீட்டினார்.
“புஸ்தகம் அதோ இருக்கிறதே?”
சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டார்.
பிறகு சமாளித்துக் கொண்டு, “என்ன மாப்பிள்ளை! அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா?”
“அது திருட்டுத்தனம். என்னால் முடியாது.”
“நான் புஸ்தகத்தைக் கொடுக்க முடியாது. உம்மால் இயன்றதைப் பாரும்.”
“என்ன இது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கிறது! புஸ்தகத்தைக் கொடுமென்றால்.”
“அதைக் கொடுக்க முடியாது இதோ ரூபா இருக்கிறது. எடுத்துக்கொண்டு போம். நான் அண்ணாச்சியிடம் பேசிக்கொள்ளுகிறேன்.”
“அண்ணாச்சியாவது, ஆட்டுக்குட்டியாவது? புஸ்தகத்தைக் கொடும் என்றால்”
வார்த்தை அதிகப்பட்டது. ஏகவசனமாக மாறியது.
“அப்பா அதைத்தான் கொடுத்துவிடுங்களேன்” என்றது, தழுதழுத்த குரல் கதவு இடையிலிருந்து.
கண்கள் மாத்திரம் நடராஜன் மனதில் பதிகிறது. தங்கம்தான்! என்ன தங்கம்! மனதிற்குள், “இவனுக்கா இந்தப் பெண்” என்ற நினைப்பு.
“போ கழுதை உள்ளே. உன்னை யார் கூப்பிட்டது? நியாயம் சொல்ல வந்தாயாக்கும்! போ நாயே!”
நடராஜன் கோபமாகத் தகப்பனாரிடம் சென்றான்.
“என்ன அப்பா இப்படிச் செய்கிறாரே?”
“அதற்கென்ன செய்யலாம்? நீ எப்படியாவது முடித்துவிடு. வீண் சச்சரவு வேண்டாம். உனக்கு உலகம் தெரியவில்லையே!”
“திருட்டுத்தனமல்லவா?”
“திருட்டுத்தனம்தான். யார் இல்லையென்று சொன்னது? எனக்காக முடித்துவிடு.”
“நீங்களும் இப்படிச் சொல்லலாமா? அவர் பெண்ணுக்கு இருக்கிற புத்தி கூட”
கண்களுக்குப் பின் நின்ற முழு உருவம் எப்படியிருக்குமென்று நினைத்துக்கொண்டே காரியத்தைச் சரிபடுத்தச் சென்றான்.
எழுத்தாளர்: புதுமைப்பித்தன்