நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திடீரென நடைபெற்ற இந்த ரெய்டு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் கேரவன் (Caravan) பயன்படுத்துவது வழக்கம். இது வேனிட்டி வேன் (Vanity Van) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது அளவில் மிகப்பெரியதாக இருக்கும். அத்துடன் படுக்கை, ஏசி என பல்வேறு சொகுசு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
சினிமா படப்பிடிப்புகளுக்கு தயார் ஆகவும், உணவு அருந்தவும், படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தை சொகுசாக கழிக்கவும், வேனிட்டி வேன்களை திரையுலக நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலம்சேரி என்ற பகுதியில், சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அம்மாநிலத்தின் மோட்டார் வாகன துறையை (Motor Vehicles Department-MVD) சேர்ந்த அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்திற்குள் திடீரென நுழைந்தனர். பின்னர் அங்கு இருந்த 3 வேனிட்டி வேன்களை அவர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மலையாள சினிமா ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில்தான், இந்த ரெய்டு திடீரென நடத்தப்பட்டது. இது நடிகை நயன்தாரா மற்றும் நடிகர்கள் நிவின் பாலி, தயன் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்காக வாங்கப்பட்டது ஆகும். ஆனால் இது அவர்களுக்கு சொந்தமானது கிடையாது என கூறப்படுகிறது. எனவே படப்பிடிப்பை முன்னிட்டு வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 3 வேனிட்டி வேன்களில் ஒன்று மட்டும் மிக பிரம்மாண்டமான முறையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு இருந்தது. இது 19 இருக்கைகளை கொண்டது ஆகும். வரி செலுத்தவில்லை என்ற காரணத்தால்தான் 3 வேனிட்டி வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால் அபராதம் செலுத்தி, உரிய நடைமுறைகளை முடித்த பின்பு 3 வேனிட்டி வேன்களும் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டன. இதில், பிரம்மாண்டமாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்த 19 சீட்டர் வேனிட்டி வேனுக்கு மட்டும் 1.50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எஞ்சிய 2 வேனிட்டி வேன்களுக்கும் சேர்த்து மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் 3 வேனிட்டி வேன்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2 லட்ச ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 19 சீட்டர் வேனிட்டி வேன் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் எஞ்சிய 2 வேனிட்டி வேன்களும் தமிழ்நாடு பதிவு எண் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. வரி செலுத்தாமல் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகை பொறுத்தவரை ஒரு சிலர்தான் சொந்தமாக வேனிட்டி வேன்களை வைத்துள்ளனர்.
ஆனால் பெரும்பாலானோர் வேனிட்டி வேன்களை வாடகைக்கு எடுத்துதான் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் வரி செலுத்தாத வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சமே திரையுலகினரின் கவலைக்கு காரணம். ஆனால் பொதுமக்கள் மத்தியில் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் சட்ட விரோத நடவடிக்கைகள் கட்டுக்குள் வரும் என்பதுடன், அரசுக்கு வரி வருவாய் அதிகமாகும் என்பதே இதற்கு காரணம். எனவே இத்தகையை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.