சர்கார் படத்திற்காக, கேரள ரசிகர்கள் வைத்த நடிகர் விஜய்யின் மிகப்பெரிய கட்-அவுட் உடைந்து விழுந்துள்ளது.
துப்பாக்கி, கத்தி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் மூன்றாவதாக நடிக்கும் திரைப்படம் ‘சர்கார்’.இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட பல்வேறு நடசத்திரங்கள் நடித்துள்ளனர்.
சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் தீபாவளியன்று வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இதனிடையே, விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில், கொல்லம் நண்பர்கள் என்ற விஜய் ரசிகர் மன்றத்தினர், நடிகர் விஜய்க்கு சுமார் 175 அடியில், இந்தியாவிலேயே மிகப்பெரிய கட் அவுட்டை வைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று அங்கு பெய்த மழை காரணமாக, அந்த கட்-அவுட் உடைந்து விழுந்துள்ளது. இதனால், ரசிகர்கள் பலரும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகி உள்ளனர்.