இலங்கை சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து பி.எம்.எஸ்.சார்ள்சை நீக்கி விட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியை அந்தப் பதவியில் நியமிக்க சிறிலங்கா அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்தது.
இதற்கு எதிராக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பு மற்றும், சட்டப்படி வேலை செய்யும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனால், சுமார் 10,000 கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் முடங்கிக் கிடந்ததுடன், சிறிலங்கா அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக, பி.எம்.எஸ்.சார்ள்சை நியமிக்க நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று நிதியமைச்சர் மங்கள சமரவீர, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர், பி.எம்.எஸ்.சார்ள்சுடன் இணைந்து கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
இங்கு கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர, துறைமுகத்தில் இயங்கும் வணிக மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஆற்றல், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ். சார்ள்சுக்கு உள்ளது என்று தாம் முழுமையாக நம்புவதாகவும், அதற்காக புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பி.எம்.எஸ். சார்ள்சை “இரும்புப் பெண்“ என்று வர்ணித்த அவர், ஆனாலும், பிரபாகரனை அச்சமின்றி எதிர்கொண்ட அவருக்கு துறைமுக அதிகாரசபை மாபியா சவாலாக இருந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.
அதனால் தான், அவரை நிதியமைச்சுக்குள் எடுத்துக் கொண்டு, முன்னாள் கடற்படை அதிகாரியை சுங்கப்பணிப்பாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்ததாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பு சுங்கத்துக்குள் அதிகாரம் செலுத்தும் வணிக மாபியாவை கட்டுப்படுத்தவே, முன்னாள் கடற்படை அதிகாரியை நியமிக்க முடிவு செய்ததாக கூறிய அவர், முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் சிவில் பதவிகளையும், இராஜதந்திரப் பதவிகளிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“இந்த மாபியாவினால், மிளகு மற்றும் பாக்கு ஏற்றுமதியினால் சுங்கத் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு சுங்கப் பணிப்பாளர் பொறுப்பாக முடியாது.
2018இல் சுங்கத் திணைக்களம், 1.068 ட்ரில்லியன் ரூபா வருமான இலக்கை நிர்ணயித்திருந்த போதும், 87 வீத வருமானத்தை, 921 பில்லியன் ரூபாவை மாத்திரமே வருமானமாகப் பெற்றது.
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி 8.3 வீதத்தினால் அதிகரித்துள்ள போதும், சுங்க வருமானம், 1.4 வீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.