மாமல்லபுரத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்திச்சென்று அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லால் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் காணப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்னர்.
விசாரணையில் அவர் நெய்வேலியை சேர்ந்த கட்டிட பொறியாளர் அருண்பிரகாஷ் என்பதும் மர்ம நபர்கள் அவரை கடத்தி துண்புறுத்தி கொடூரமாக கொலை செய்து, அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை சிதைத்ததும் தெரியவந்தது.
நெய்வேலியை சேர்ந்த அமுதா என்ற பொறியாளரை கடந்த 3 வருடமாக அருண்பிரகாஷ் காதலித்து வந்ததாகவும், இருவரும் வேறு வேறு சாதி என்பதாலும் அருண்பிரகாஷ் வீட்டில் வசதி குறைவு என்பதாலும் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து துபாய்க்கு வேலைக்கு சென்ற அருண்பிரகாஷ் அங்கிருந்து திரும்பி, சென்னை ஓரகடத்தில் தங்கி அருண் எக்செல்லோ கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அருண்பிரகாஷ், தினமும் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடந்து வரும் புதிய கட்டுமான பணியை பார்ப்பதற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் 2 ந்தேதி மாலையில் மர்ம நபர்கள் அருண்பிரகாஷை கடத்திச்சென்று இந்த கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
காதலியின் தந்தை தான் கூலிப்படையை வைத்து அருண்பிரகாஷை கடத்திச்சென்று கொலை செய்துள்ளதாக அருண் பிரகாஷின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அருண் பிரகாஷ் ஏற்கனவே 2 பெண்களிடம் பழகி ஏமாற்றியதாகவும், தற்போது தங்கள் பெண்ணை ஏமாற்ற முயன்றதால் அவரை தூக்கி விட்டோம் என்று அருண் பிரகாஷ் செல்போனில் இருந்து தனக்கு ஒருவர் பேசியதாக காதலி அமுதாவின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் காதலன் அருண்பிரகாஷை மறக்க சொல்லி தனது தந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும், தான் பணியவில்லை என்பதால் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்திருக்கலாம் என்று காதலி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால் கொலையாளிகளை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.