காஷ்மீர் புல்வாமாவில் மிக மோசமான தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதி ஆதிலின் கடைசி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் பேருந்து மீது காரை மோதி குண்டு வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 45 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது நடந்து முடிந்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது தற்கொலைப்படை தீவிரவாதி ஆதில் அகமது தார். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவர், காகபோராவைச் சேர்ந்தவர். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தான் காகபோரா உள்ளது.
சிஆர்பிஎப் பேருந்தின் மீது 350 கிலோ வெடிபொருட்கள் நிரம்பிய ஸ்கார்பியோ காரை மோதி தாக்குதல் நடத்திய ஆதில் அதில் தானும் உயிரிழந்துள்ளார். தாக்குதல் நடத்தும் முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் பெயர் ஆதில் ஓராண்டுக்கு முன்பாக ஜெய்ஷில் சேர்ந்தேன். ஓராண்டு காத்திருப்புக்குப் பின் ஜெய்ஷில் ஏன் சேர்ந்தேனோ அந்தக் காரணத்தை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன் நான் சொர்க்கத்துக்கு சென்றிருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி இது” என்று கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதி ஆதில் அகமதுவின் புகைப்படங்கள் வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. தற்கொலைப்படை தீவிரவாதி ஆதிலின் கடைசி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.