செவ்வாயின் சிறப்புக்கள் பலம் வாய்ந்த செவ்வாய் ! செவ்வாய் ஒரு பரிபூரண ஆண் கிரகம் என்பதால் ஒரு பெண்ணுக்கு!

0

பொதுவாக பலம் வாய்ந்த செவ்வாயின் தசை ஒருவருக்கு நடக்குமானால் அவருக்கு உடலைப் பாதுகாக்கும் ஆர்வம் வரும். உடற்பயிற்சி நிலையங்களில் ஆர்வத்துடன் உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்பவர்கள் செவ்வாய் வலுப் பெற்றவர்கள்தான்.

மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதும் செவ்வாய்தான். இளமைத் துடிப்புள்ள கிரகம் செவ்வாய். நவ கிரகங்களில் மனதை இளமையாக வைத்திருப்பவர் புதன். உடலை இளமையாக வைத்திருப்பவர் செவ்வாய். வாலிப முறுக்கேறிய உடல் செவ்வாயைக் குறிக்கும்.

“இளங் கன்று பயமறியாது” என்ற பழமொழியும் செவ்வாய்க்கே பொருந்தும். குழந்தை முதல் கிழப் பருவம் வரையிலான மனிதனின் வாழ்வில் 35 வயதிற்குட்பட்ட இளைய பருவத்தினரை செவ்வாய் குறிக்கிறார். இச்சமயத்தில் முன்யோசனை இல்லாமல் தடாலடியாக நம்மை ஏதேனும் காரியங்களில் இறங்க வைப்பவர் செவ்வாய்.

தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தோடு செவ்வாய் சம்பந்தப்பட்டால் ஒருவரை விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட துறைகளில் பொருளீட்ட வைப்பார். பூமி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலில் அபாரமான லாபம் தருவதும், வீடு கட்டி விற்கும் பில்டர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தருபவரும் இவர்தான்.

செவ்வாயின் இரண்டாம் ராசியான விருச்சிகம் மறைவிடங்கள், இன்சூரன்ஸ், மார்கெட்டிங் போன்ற துறைகளைக் குறிப்பிடும் என்பதால் ஒருவர் செய்யும் வேலை, தொழில் போன்றவற்றைக் குறிக்கும் பத்துக்கதிபதி எனும் ஜீவனாதிபதி விருச்சிகத்தோடு சம்பந்தப்படும் நிலையில் சிலருக்கு மேற்கண்ட பிரிவுகள் தொழிலாக அமையும்.

அதேபோல ஒருவருக்கு செவ்வாய் வலுப் பெற்று பாபத்துவம் பெற்றிருந்தால் அவர் நாகரிகமான ரவுடியாக இருப்பார். அடியாட்களின் தலைவன் என்று சொல்லத் தக்க வகையில் ஒரு கும்பலை வைத்துக் கொண்டு மிரட்டி கட்டைப் பஞ்சாயத்து செய்ய வைப்பவரும் செவ்வாய்தான்.

ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய் சந்திரன், குருவுடன் இணையாமல், இவர்களின் பார்வையைப் பெறாமல், வேறுவகையில் சூட்சும வலுவும் பெறாமல், லக்னத்தில் அமர்ந்தோ, லக்னத்தைப் பார்த்தோ இருந்தால் அவர் பெரிய கோபக்காரராக இருப்பார்.

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் பத்தாமிடத்தில் தனித்து உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பதை விட அவர் நான்கில் நீசம் பெற்று சுபத்துவ, சூட்சும வலுப் பெறுவது சிறந்த யோகங்களைத் தரும்.

பத்தாமிடத்தில் உச்சம் பெறும் செவ்வாய் திக்பலமும் பெறுவார் என்பதால் இந்த நிலை சரியானது அல்ல. இதுபோன்ற அமைப்புள்ள ஜாதகரிடம் யாரும் கிட்டே நெருங்கி பேச முடியாது.

ரிஷப லக்னத்திற்கு அவர் ஏழில் அமர்வதை விட பனிரெண்டில் அமர்வது யோகங்களைத் தரும். அல்லது மூன்றில் நீசம் பெற்று உச்சனான குருவுடன் இணையாமல் வேறுவகையில் நீசபங்கம் மட்டும் பெறுவது நல்ல அமைப்பு.

கடகத்திற்கு செவ்வாய் ஐந்து, பத்திற்குடைய யோகாதிபதியாக அமைவார். இந்த நிலையில் கூட அவர் ஐந்தாமிடமான திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் யோகங்களைச் செய்ய மாட்டார்.

ஒரு பாபக் கிரகம் கேந்திரங்களில் இருந்தால்தான் வலுப் பெற்று நன்மை செய்யும் என்ற விதிப்படி அவர் ஐந்தாமிடத்திற்கு ஆறாமிடமான பத்தில் ஆட்சி பெற்றால் மட்டுமே நன்மைகளைச் செய்வார்.

சிம்ம லக்னத்திற்கும் அவர் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாகி ஒன்பதாம் வீட்டில் அமர்வது நல்லநிலை அல்ல. அதற்கு பதிலாக ஒன்பதாம் வீட்டிற்கு எட்டாம் வீடான நான்கில் ஆட்சி பெறுவதே யோக நிலையாகும்.

இந்த சூட்சுமங்களையே சில வருடங்களுக்கு முன்பு “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” என்ற கட்டுரையில் “இயற்கைச் சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில், இயற்கைப் பாபக் கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதி மறைந்திருக்கிறது. அதுவே பாதகாதிபதியின், ரகசியம்” என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

மிதுன லக்னத்திற்கு செவ்வாய் ஆறுக்கு அதிபதியாகி பாப நிலை பெறுவதால் யோகம் செய்ய மாட்டார். கன்னிக்கும் அதேதான். செவ்வாய் தசை வராத மிதுன, கன்னி லக்னக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துலாம் லக்னத்திற்கு அவர் இரண்டு, ஏழுக்குடையவரானாலும் இரண்டிலோ, ஏழிலோ ஆட்சி பெறுவதை விடுத்து, பத்தாமிடமான கடகத்தில் நீசம் பெற்று திக்பலமும் சூட்சும வலுவும் அடைந்தால் நல்ல மனைவியையும், மண வாழ்க்கையையும், அளவற்ற செல்வத்தையும் தருவார்.

விருச்சிக லக்னத்திற்கும் செவ்வாய் நீசம் பெறுவது சிறப்பான நிலைதான். விருச்சிகத்திற்கு லக்னாதிபதியாகும் செவ்வாய் மூன்றில் உச்சம் பெற்றால் மிகச் சாதாரணமான வாழ்க்கையையே அளிப்பார்.

அதிலும் விருச்சிக லக்னப் பெண்களுக்கு செவ்வாய் உச்சம் அடையவே கூடாது. சிலநிலைகளில் உச்ச செவ்வாய் ஆண் தன்மையை அளித்திடுவார் என்பதால் இது நல்ல அமைப்பல்ல. இதுபோன்ற பெண்கள்தான் ஆண்களுக்கு நிகரான தைரியத்தையும், உறுதியான தன்மையையும், உடல் உறுதியையும் பெற்றிருப்பார்கள்.

செவ்வாய் ஒரு பரிபூரண ஆண் கிரகம் என்பதால் ஒரு பெண்ணுக்கு செவ்வாய் வலுப் பெறுவது பெண்மைக்குரிய அம்சங்களைப் பின்னுக்குத் தள்ளி ஆண் தன்மையை அளிக்கும் என்பதால் பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் நேர்வலுப் பெறக்கூடாது.

விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் நீசம் பெற்று சூட்சும வலுப் பெற்ற எத்தனையோ கோடீஸ்வர ஜாதகங்களை என்னால் உதாரணமாகக் காட்ட முடியும். ஆனால் விருச்சிக லக்னத்தில் பிறந்து தனித்து, சுபத்துவ, சூட்சும வலுப் பெறாமல் செவ்வாய் உச்சம் பெற்ற ஒரு சொகுசு வாழ்க்கை வாழ்பவரை பார்ப்பது கடினம்.

இதுவரை சூட்சும விஷயங்கள் அல்லாமல் பொதுவான விஷயங்களை மட்டுமே திரும்பத் திரும்ப படித்திருப்பவர்களுக்கு என்னுடைய எழுத்துக்கள் முரண்பாடாகத் தெரியும். தீவிரமான ஆய்விற்குப் பிறகு உண்மைகளை உணர்ந்த பின்பே இவைகளை நான் எழுதுவதால் போகப் போக அனுபவத்தில் எது சரி என்பதை உணர முடியும்.

தனுசு லக்னத்திற்கு செவ்வாய் நான்கிலோ, பத்திலோ பனிரெண்டிலோ இருப்பது சிறப்பு. அவர் இரண்டு, ஐந்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சூட்சும வலு அடைந்திருந்தால்தான் நன்மை செய்வார்.

மகரத்திற்கு நான்காம் வீட்டில் ஆட்சியாகும் நிலையில் ஜாதகரை காவல்துறை போன்ற யூனிபாரம் அணியும் துறைகளில் வேலை செய்ய வைப்பார். லக்னாதிபதியின் வலுவைப் பொருத்து இந்த இடத்தில் இருக்கும் மேஷச் செவ்வாய் ஜாதகரை ஐ.பி.எஸ். ஆபீசர் ஆக்கக் கூடும்.

கும்பத்திற்கு பத்தில் தனித்து ஆட்சி பெறுவது நல்ல நிலை அல்ல. பனிரெண்டில் உச்சம் பெறுவது, அவர் மறைவு பெற்றதால் நன்மையை தரும். மூன்றில் ஆட்சி பெறுவது நல்லதுதான்.

மீன லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் அவர் ஆட்சி பெறுவதை விட, பத்தாமிடமான தனுசில் நட்பு பலம் பெற்று திக்பலம் அடைவது நல்ல யோகம். இரண்டாமிடத்தில் ஆட்சி பெறுவது பெரிய யோகங்களைச் செய்யாது.

நிறைவாக செவ்வாய் என்பவர் ஒரு மாளிகையைக் காவல் காக்கும் காவலாளியைத்தான் உருவாக்குவாரே தவிர மாளிகைக்குச் சொந்தக்காரனை அல்ல. மற்ற சுப கிரகங்களின் தயவு இருந்தால்தான் அவர் தரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும்.

என்னதான் ஒருவர் செவ்வாயின் தயவினால் காவல்துறையில் உயர் அதிகாரியாகவோ, ராணுவத் தளபதியாகவோ ஆனாலும், குரு, சுக்கிர, புதன் போன்ற இயற்கைச் சுபர்களின் தயவினால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் ஒரு தலைமைச் செயலருக்கோ, உள்துறைச் செயலருக்கோ, மந்திரிக்கோ, முதல்வருக்கோ, பிரதமருக்கோ சல்யூட் அடித்துத்தான் ஆக வேண்டும்.

கீழ்கண்டவைகள் செவ்வாயின் காரகத்துவங்களாக நமது மூலநூல்களில் குறிப்பிடப் படுகின்றன. இந்தக் காரகத்துவம் எனும் கிரகங்களின் செயல்பாடுகள் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளின் அபாரமான ஒருமுகப்பட்ட மனதாலும், சிந்தனையாலும் தீவிரமான ஆய்வுக்குப் பிறகு கண்டறியப் பட்டவை.

இந்த விஷயங்களை செவ்வாய் சுப வலுப் பெற்றால் ஒரு நிலையிலும், பாப வலுப் பெற்றால் வேறு நிலையிலும் செய்வார் என்பதால் ஒரு அனுபவமுள்ளவரால் மட்டுமே செவ்வாய் இருக்கும் இடத்தையும், அவரது பலத்தையும் பொருத்து, இந்த ஜாதகருக்கு இந்த விஷயம் நடக்கும் என்று கணிக்க முடியும்.

செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார். பூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகள், ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவைகள், ராணுவம், பவளம், துவரம் பருப்பு, வீரியம், ராணுவத் தலைமை, கிரானைட், கிரஷர், ஜல்லி, அதிகாரம், ஆணவம், உடற்பயிற்சி, விளையாட்டு, சுறுசுறுப்பு, கொடிய விபத்து, ஆடு, அற்பாயுள், வெடிப்பொருட்கள், கோபம், கொடூர வார்த்தை, சண்டை, அசட்டுத் துணிச்சல், முன்கோபம், சகோதரர், விவேகமற்ற வீரம், குன்றுகள், மலைகள், சுரங்க உலோகங்கள், எதிரிகள், கூர்மையான ஆயுதம், சுப்ரமணியக் கடவுள், ஆண் சமையல் செய்தல், மிருகத்தனம், தலைமைக்கான இரக்கமற்ற தகுதி, சுதந்திர எண்ணம், வழக்கு, காவல்துறை, ஆளுமை, அடிதடி, கலவரம், வெட்டுக் காயம், முறையற்ற வேறுபட்ட காமம், கற்பழிப்பு, அறுவைச் சிகிச்சை நிபுணர், சிறைத் தண்டனை, கொடுமையான பேச்சு, மூர்க்கத்தனம், கடினமான மனம், வீண் விவகாரங்கள், உணர்ச்சிவசப்படுதல், வன்முறை போன்ற நிலைகளுக்கு செவ்வாய் காரணமானவர் ஆவார்.

செவ்வாய் பற்றிய ஜோதிட நுணுக்கங்கள்


தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில், தனது இன்னொரு வீட்டைப் பார்க்கும் ஒரே கிரகம் செவ்வாய் மட்டும்தான். அதேபோல தனது விருச்சிக வீட்டில் அமர்ந்து தன் நான்கு, ஏழு, எட்டு சிறப்புப் பார்வைகளால் தன் மூன்று எதிரிகளின் வீட்டையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கெடுக்கும் (சனியின் கும்பம், சுக்கிரனின் ரிஷபம், புதனின் மிதுனம்) ஒரே கிரகமும் செவ்வாய்தான்.

செவ்வாயும், சனியும் கேந்திரங்களில் வலுப் பெறுவார்கள் என்பதால்தான் அவர்கள் இருவருக்கும் நான்கு, பத்து பார்வைகள் அமைந்தன. இதையே வேறு வகையில் சொல்லப் போனால் நான்கு, பத்து என சிறப்புப் பார்வைகள் உள்ளதால்தான் பாபக் கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் வலுப் பெறுகின்றன.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்க்கும் அத்தனை பாவங்களும் கெடும். அவற்றால் பார்க்கப்படும் கிரகங்களும் வலுவிழக்கும். அதேநேரத்தில் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு சூட்சும வலுப் பெற்ற சனியின் பார்வை நன்மைகளை அளிக்கும். கடக, சிம்ம, மீன லக்னங்களுக்கும் சூட்சும வலுப் பெற்ற செவ்வாயின் பார்வை நிச்சயம் நன்மை தரும்.

இந்தப் பார்வை எந்த அளவுக்கு நன்மை என்பது செவ்வாய், சனியின் சூட்சும, சுப வலுக்களைப் பொருத்தது. இந்த நிலையைக் கணிப்பதற்கு அபாரமான கணிப்புத் திறமை தேவைப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் மருதாணி வைக்கும்போது அதன் நிறம் இப்படி வந்தால் என்ன அர்த்தம்!
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 22.10.2019 செவ்வாய்க்கிழமை !