உலகம் முழுவதும் கடவுளை நம்பும் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் ஒரு பூஜையறை இருக்கும். பூஜையறை வைக்க இடம் இல்லை என்றாலும் குறைந்தது கடவுளை வணங்குவதற்கு என ஒரு இடத்தை தனியாக ஒதுக்கி இருப்பார்கள்.
கடவுளை வணங்க என ஒதுக்கப்படும் அனைத்து இடங்களுமே ஒரு கோயில்தான். வீட்டு பூஜைகளும், வழிபாடுகளும் இந்த இடத்தில்தான் நடத்தப்படுகிறது.
கோயிலுக்கு சென்று கூட்டத்துடன் கூட்டமாக கடவுளை வணங்குவதை விட உங்கள் வீட்டு கோயிலான பூஜையறையில் உள்ளம் உருக நீங்கள் முறையாக பூஜைகள் செய்து வழிபடும் போது அது உங்களுக்கு அதிக பலனையும், மனஅமைதியையும் தரும்.
அவ்வாறு கடவுளை வீட்டில் வைத்து வழிபடும்போது சில முக்கியமான தகவல்களை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
பூஜையில் வைக்கக்கூடிய பொருள்கள்:
வீட்டில் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பிரசாதமாக அரிசியால் செய்யப்பட்ட பொருளை வைத்து வழிபடுங்கள். ஏனெனில் அரிசிதான் கடவுள்களின் உணவாக இருந்தது என்று புராணக்குறிப்புகள் கூறுகிறது.
அதேபோல வெற்றிலையை வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றிலை கடவுளுக்கு மிகவும் பிடித்த பொருளாகும்.
இவை தவிர ஏலக்காய் மற்றும் எலுமிச்சை போன்ற பொருட்களையும் வைத்து வழிபடலாம். பூஜையின் போது மண் விளக்கு ஏற்றி வைக்கவும். ஆனால் விளக்கு மிகவும் பிரகாசத்துடன் அதிக சுடர்விட்டோ அல்லது மங்கிய சுடருடன் அணையும்படியோ ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இது உங்கள் மனதை சங்கடப்படுத்துவதோடு துர்சகுனமாகவும் கருதப்படுகிறது. விளக்கு எப்பொழுதும் கடவுளை நோக்கியே இருக்க வேண்டும், வேறு எங்கும் வைக்கக்கூடாது.
கடவுளுக்கு பிடித்த நிறம்:
ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த நிறம் என்று ஒன்றிருக்கும். அந்த நிற உடை அணிந்து கடவுளை வழிபடும் போது உங்களுக்கு ஆண்டவனின் அருள் பூர்ணமாக கிடைக்கும்.
எம்பெருமான் ஈசனை வழிபடும் போது வெள்ளை நிற ஆடை அணிந்து வழிபட்டால் அவரின் கோபத்தில் இருந்து தப்பிப்பதுடன் அருளையும் பெறலாம்.
விஷ்ணுவை வழிபடும் போது மஞ்சள் நிற ஆடையையும், துர்கை அம்மனை வழிபடும் போது சிவப்பு நிற துணியையும் அணிய வேண்டும்.
குலதெய்வ வழிபாடு:
அனைவரும் அவர்கள் வீட்டில் தங்களுடைய குலதெய்வத்தின் உருவச்சிலையையோ அல்லது படத்தையோ வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். தினமும் தங்கள் குலதெய்வத்தை வணங்குவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு உங்களை அனைத்து பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்க மிகவும் அவசியமானதாகும்.
நெய் விளக்கு:
நெய் தீபமேற்றுவது என்பது கடவுள் வழிபாட்டில் இருக்கும் முக்கியமான ஒன்றாகும். வீட்டிலேயே கடவுளை வழிபட்டாலும் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். தினமும் நெய் விளக்கேற்றும் வீட்டில் தீய சக்திகள் நுழைய முடியாது நம்பிக்கையாகும். நெய் தீபத்திற்கு எப்பொழுதும் பஞ்சை திரியாக உபயோகியுங்கள்.
ஐந்து கடவுளர்கள் வழிபாடு:
பஞ்சதேவர் என்று அழைக்கப்படும் சிவபெருமான், விஷ்ணு, விநாயகர், சூரியபகவான், துர்கை ஆகிய ஐந்து கடவுள்களை தினமும் வீட்டில் வழிபடுவது உங்களுடைய அனைத்து பிரச்னைகளையும் சரிப்படுத்தும். புனித நீருடன் துளசியை வைத்து விஷ்ணு, துர்க்கை, சூரிய பகவானை மட்டும் வழிபடலாம். சிவபெருமானையும், விநாயகரை வழிபடும் போது துளசியை உபயோகிக்காதீர்கள்.
சிவ வழிபாடு:
மும்மூர்த்திகளில் சிவபெருமான் அழித்தல் தொழிலைச் செய்பவர். முக்கண்ணைப் பெற்றிருப்பதால் கோபக்காரராக அவரை கருதிவிடலாகாது.
தீயவர்களுக்கு மட்டுமே அவர் ருத்ரமூர்த்தி. மற்றபடி சிவபக்தர்களுக்கு அவர் என்றுமே சாந்தமூர்த்திதான்.
பூஜையறையில் எல்லா கடவுள்களையும் வைத்து வழிபடுவது போல சிவபெருமானை வழிபடக்கூடாது.
மற்ற கடவுள்களுக்கு வைத்து வழிபடும் சிலப் பொருட்கள் சிவபெருமானின் கோபத்தை தூண்டக் கூடியவை ஆகும்.
மஞ்சள், கேதகை மலர், துளசி, தேங்காய் தண்ணீர் போன்றவற்றை வைத்து வழிபடுவது சிவபெருமானின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தந்து நிச்சயம் அழிவையும் ஏற்படுத்தும். சிவனுக்குப் படைத்த எந்த உணவையும் சாப்பிடவும் கூடாது.
அதேவேளையில் சிவபெருமானின் அன்பைப் பெற்றுத்தருவதும் அவருக்கு மிகவும் உகந்ததுமான வில்வ இலைகளை பூஜையில் வைத்தல், வெண்கலப்பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொண்டு சிவமந்திரங்களை உச்சரித்தபடி சிவனுக்கு அபிஷேகம் செய்தல், தயிர் வைத்து வழிபடுதல், சிவலிங்கத்துக்கு சந்தனக்காப்பு இடுதல் போன்றவற்றை செய்தால் சிவனின் உக்கிரம் தணிந்து அவரது ஆதரவு என்றும் கிட்டும்.