திருவையாறு அருகே 14 வயது சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்ததோடு, பாலியல் தொல்லையும் கொடுத்த பெண் உள்ளிட்ட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசு மருத்துவமனையில், உடலில் சூடுவைத்த காயங்களுடன், 14 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த மகளிர் காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது, பாலியல் அத்துமீறலால் சிறுமி பாதிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த சிறுமியின் வாக்கு மூலம் அதிரவைத்தது. சிறுமி தன் வயதை ஒட்டிய சிறுவனுடன் காதலில் விழுந்து தனிமையை கழித்துள்ளார். இதை பார்த்துவிட்ட அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மகேந்திரன், கண்ணன்,சிவகுமார் ஆகியோர் மிரட்ட தொடங்கி உள்ளனர்.
அவர்களும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றுள்ளனர். அதற்கு சம்மதிக்காமல் சிறுமி தப்பிச்செல்ல முயன்றதால், செல்போன் திருடி விட்டதாக கூறி ஆடைகளை களைந்து நிர்வாணமாக மரத்தில் கட்டிவைத்து அடித்து தாக்கி உள்ளனர். வித்யா என்ற பெண் இரும்பு கம்பியால் சிறுமியின் உடலில் பல இடங்களில் சூடுவைத்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட காயங்களை காவல்துறையினரிடம் அந்த சிறுமி சுட்டிக்காட்டினார். மேலும் சிறுமி என்றும் பாராமல் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
மரத்தில் கட்டிவைத்திருந்த போது தான் தப்பி வந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்ததாக அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
இதையடுத்து சிறுமிக்கு சூடுவைத்து பாலியல் அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்த வித்யா, அத்துமீறிய குற்றச்சாட்டுக்குள்ளான சிவகுமார், மகேந்திரன், கோபால கிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
படிக்கின்ற வயதில் காதல் என்ற போதையில் விழுந்தால் சிறுமிகளுக்கு என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சிறுமிக்கு நேர்ந்த அவலமும் ஒரு சாட்சி..!