சாமியாரும் குழந்தையும் சீடையும்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Samiyarum Kulanthaiyum Sedaiyum!

0

சாமியாரும் குழந்தையும் சீடையும்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Samiyarum Kulanthaiyum Sedaiyum!

மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.

“இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.

“நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு கட்டிக் கொண்டு வந்தான்.

“இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?

“நிச்சயிக்க என்ன இருக்கிறது?…”

இப்படியாகப் பின்னிக்கொண்டே போனார் ஒரு சாமியார். எதிரிலே தாமிரவருணியின் புதுவெள்ளம் நுரைக் குளிர்ச்சியுடன் சுழன்று உருண்டது.

அவர் உட்கார்ந்திருந்தது ஒரு படித்துறை. எதிரே அக்கரையில் பனைமரங்களால் புருவமிட்ட மாந்தோப்பு; அதற்கப்புறம் சிந்துபூந்துறை என்று சொல்வார்களே அந்த ஊர்.

இப்பொழுது பூ சிந்துவதற்கு அங்கு மரம் இருக்கிறது. அதைப் போல எண்ணக் குலைவையும் ஏமாற்றத்தையும் சிந்துவதற்கு சுமார் ஆயிரம் இதயங்கள் துடிக்கின்றன. துடிப்பு நின்றவுடன் வைத்து எரிக்க அதோ சுடுகாடு இருக்கிறது.

இப்பொழுதும், இந்த நிமிஷத்தில் கூடத்தான் அது புகைந்து கொண்டிருக்கிறது. தோல்வியின், ஏமாற்றத்தின் வாகனங்களை வைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது பலவீனந்தானே.

பலவீனத்தை வைத்துக்கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால் தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.

அதை இந்தச் சாமியார் அறிந்து கொண்டிருந்தார். அதனால்தான், இவருக்கு விரக்தி ஏற்பட்டது. இவருக்கு இடது பக்கத்தில் சுலோசன முதலியார் பாலம். கட்டபொம்மு சண்டையின் போது சமரசம் பேச முயன்ற துபாஷ் அவர்.

அவர்தான் அதைக் கட்டியது. திருநெல்வேலிக்காரர்களுக்கு அதில் அபாரப் பெருமை. முட்டையும் பதநீரும் விட்டு அரைத்த காரையில் கட்டியதாம். அதில் ஒரு தனிப் பெருமை.

இதற்கு முன் எப்போதோ ஒரு முறை இது போல வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த வைக்கோல் போர், முன் பல்லைத் தட்டிய மாதிரி இரண்டு மூன்று கணவாய்களைப் பெயர்த்துக் கொண்டு போய் விட்டது. இப்பொழுது, மறுபடியும் கட்டி விட்டார்கள்.

பொய்ப்பல் கட்டிக் கொண்டால் எப்படியும் கிழவன் தானே; அப்படித்தான் அதுவும். வயசு முதிர்ந்த நாகரிகம் ஒன்று தன்னை வலுவுள்ளது மாதிரி காட்டிக் கொள்வது போன்றிருந்தது.

அதற்கும் சற்று அப்பால் பொதிகை. குண்டுக்கல் மாதிரி ஒரு குன்று; தெத்துக்குத்தான வானத்தின் சிவப்பு கோரச் சிரிப்பைத் தாங்குவது போலப் படுத்திருந்தது குன்றின் தொடர்.

சாமியாருக்குப் பின்புறத்தில் சுப்பிரமணியன் கோவில். அதாவது வாலிபம், வலிமை, அழகு, நம்பிக்கை இவற்றையெல்லாம் திரட்டி வைத்த ஒரு கல் சிலை இருக்கும் கட்டிடம்.

அதற்குப் பின்னால் ஒரு பேராய்ச்சி கோவில். மேற்குத் திசையின் கோரச் சிரிப்புக்கு எதிர்ச்சிரிப்பு காட்டும் கோர வடிவம். இருட்டில் மினுக்கும் கோவில். வாலிபமும் நம்பிக்கையும் அந்தக் கோரச் சிரிப்பின் தயவில் நிற்பது போல, சாமியாரின் முதுகுப் புறத்திலிருந்தன.

அவர் வெறுத்து விட்டவை; ஆனால், மனிதனால் வெறுக்க முடியாதவை. அதனால்தான், அவரது முதுகுப் புறமானது அவற்றிற்கு அப்பால் விலகிச் செல்ல முடியாது தவித்தது.

சாமியாரின் வலது பக்கத்தில்…

சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை. நான்கு வயசுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடையை மூட்டை கட்டிக் கொண்டு, படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிரிந்து வெளிவரும் பொழுது, ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம், கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும்.

சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.

குழந்தை சீடையை மென்று கொண்டு சாமியாரைப் பார்க்கிறது.

சாமியார் வெள்ளத்தைப் பார்க்கிறார். வெள்ளம் இருவரையும் கவனிக்கவில்லை.

“மனிதன் நல்லவன் தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது, அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது. இப்பொழுது, அறிவாளியாக அல்லல்படுகிறான்.

“சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். அதற்காக அவனைக் குற்றம் சொல்ல முடியுமா?

“மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது.

“அதனால் தான் காத்திருக்கிறான். ஆனால், அவனுக்குத் துரு துருத்த கைகள். அதனால்தான் பிசகுகளின் உற்பத்திக்கு கணக்கு வரம்பை மீறுகிறது…” என்றார் சாமியார்.

துறையில் தலை நிமிர்ந்து வந்த நாணல் புல் ஒன்று சுழலுக்குள் மறைந்து விட்டது. குழந்தையும் ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்துக் கொண்டு ஒரு சீடையை வாயில் போட்டுக் கொண்டு கடுக்கென்று கடித்தது.

அந்தப் படித்துறையில் கடுக்கென்ற அந்த சப்தத்தைக் கேட்க வேறு யாரும் இல்லை.

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணன் குழல்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kannan Kulal!
Next articleகயிற்றரவு! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kagitaravu!