ஈரானைச் சேர்ந்த இன்ஸ்டகிராம் நட்சத்திரமான சாஹர் தாபர் என்பவர் தெய்வ நிந்தனை செய்ததாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தாஸ்னிம் செய்தி முகாமை தெரிவித்துள்ளது.
22 வயதான சாஹரின் இன்ஸ்டகிராம் பதிவொன்று கடந்த வருடம் வைரலாக பரவியதை அடுத்து சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானார்.
சாஹருக்கு 50 பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்ஸ்டகிராமில் பதிவும் ஔிப்படங்கள் அனைத்தையும் பெரும்பாலும் திருத்தம் செய்தே அவர் பகிர்ந்து வருகின்றார்.
அவர் கடந்த வருடம் பகிர்ந்த ஒரு ஔிப்படம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஜோம்பியாக இருந்தால் எப்படி இருப்பாரோ அதே போன்று அந்தப் ஔிப்படத்தில் காட்சி தருகிறார் எனச் சர்வதேச ஊடகங்கள் விவரித்திருந்தன.
குழி விழுந்த கன்னங்கள், கேலி சித்திர கதாபாத்திரம் போன்ற மூக்கு என குறித்த ஔிப்படத்தில் காட்சியளித்திருந்தார். இவ்வாறாகக் காட்சியளிக்க தாம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அப்போது அவர் கூறியிருந்தார்.
இதன் காரணமாக, அவர் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து அவரை இன்ஸ்டகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்த நிலையில், பின் வரும் நாட்களில் அவரே, குறித்த ஔிப்படங்கள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் திருத்தியமைக்கப்பட்டவை என்று விளக்கமளித்தார்.
தெய்வ நிந்தனை, வன்முறையைத் தூண்டுதல், சட்டத்திற்குப் புறம்பாக சொத்துகளைக் குவித்தல், நாட்டின் ஆடை கட்டுப்பாட்டை மீறுதல், ஊழல் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் 22 வயதேயான சாஹர் தாபர் என்பவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளை அடுத்து அவரது இன்ஸ்டகிராம் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. ஈரானில் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், நவநாகரீக ஆடை வடிவமைப்புகள் குறித்து எழுதும் வலைப்பூ எழுத்தாளர்கள் பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் தற்போது சாஹரும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.