நவராத்திரி நிகழ்வை அவமதிக்கும் முகமாக சன்னி லியோனி யின் ‘ஆணுறை’ விளம்பரத்தால் பரபரப்பு
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், இந்து சமூக மக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனமான மேன்ஃபோர்ஸ் நிறுவனம், தங்களின் ஆணுறை தயாரிப்பின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வெளியிட்ட விளம்பரம் நாட்டில் சிலரை கோபப்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து பிபிசியின் கீதா பாண்டே கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.
இன்று (வியாழக்கிழமை) 9 நாட்கள் கொண்ட நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ள சூழலில் , கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நடிகை சன்னி லியோன் ”நவராத்திரியை கொண்டாடுங்கள், ஆனால் காதலோடு” என்று கூறும் பெரிய அளவிலான விளம்பர பலகைகள் குஜராத் மாநிலத்தின் பல பெரும் நகரங்களில் கடந்த சில நாட்களாக காணப்பட்டன.
பாலியல் ரீதியான படங்களில் ஆரம்பத்தில் தோன்றிய சன்னி லியோன், பிரபலமான பாலிவுட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகரமான திரையுலக பாதையை அமைத்து கொண்டார்.
இந்தியாவில் பெரும் அளவு ரசிகர்களை கொண்ட சன்னி லியோன், நாட்டின் மிகப் பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனமான மேன்ஃபோர்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ளார்.
இந்த விளம்பர பலகையால் கோபமடைந்த சிலர், விற்பனையை அதிகரிக்க மிக மோசமான யுத்திகளை கையாள்வதாக ஆணுறை நிறுவனத்தை குற்றம்சாட்டினார்.
நவராத்திரி பண்டிகையை அவமதிக்கும் விதமாக இந்த விளம்பரம் உள்ளது என்று சிலர் சமூகவலைதளங்களில் விமர்சித்துள்ள நிலையில், அனைத்து இந்திய வணிகர் கூட்டமைப்பு (சிஏஐடி) அரசிடம் இது குறித்து புகார் தெரிவித்து இந்த விளம்பர பலகையை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
”விற்பனையை அதிகரிக்க நமது கலாச்சார மதிப்புமிக்க அம்சங்களை பணயம் வைக்கும் ஒரு பொறுப்பற்ற மற்றும் முதிர்ச்சியற்ற செயல் இது” என்று வணிகர் கூட்டமைப்பு, நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானிடம் அளித்த மனுவொன்றில் குறிப்பிட்டுள்ளது.
அகற்றப்பட்ட ஆணுறை விளம்பர பலகைகள்
புதன்கிழமையன்று இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்த அமைப்பின் பொது செயலாளரான பிரவீன் காண்டேல்வால் கூறுகையில், ”புனிதமான பண்டிகையான நவராத்திரி, பெண்களின் வலிமைக்கு அடையாளமாக விளங்குகிறது. இந்த பண்டிகையுடன் ஆணுறையை இணைப்பது மிகவும் ஆட்சேபத்துக்கு உரியது” என்று தெரிவித்தார்.
இது தொடர்பான பல டஜன் விளம்பர பலகைகள் சூரத் மற்றும் வதோதரா நகரங்களில் அகற்றப்பட்டுள்ளன.
ஆனால், ஆணுறை தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகை சன்னி லியோன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காண்டேல்வால் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து ஆணுறை தயாரிப்பு நிறுவனம் மற்றும் சன்னி லியோன் ஆகிய இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், நவராத்திரி பண்டிகையின்போது ஆணுறை குறித்து விளம்பரப்படுத்துவது தவறானது அல்ல என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்துக்கு இடம்பெயர்ந்த ஒரு இளம் பெண் என்னிடம் கூறுகையில், நவராத்திரி பண்டிகையின் போது தான்கேளிக்கை மற்றும் உல்லாசங்களில் ஈடுபட்டது குறித்து தெரிவித்தார்.
தடைகளை உடைக்கும் நவராத்திரி?
நவராத்திரி காலகட்டத்தில் இளம் மற்றும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கும், தங்குவதற்கும் உள்ள தடைகளை பல பெற்றோரும் சற்றே தளர்த்துவது வழக்கம்.
இந்த பண்டிகையை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய கார்பா நடனம் ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் தனியார் பண்ணை வீடுகள் போன்றவற்றில் நடக்கும்.
1990 காலகட்டத்தின் இறுதி முதல், இந்த பண்டிகையின்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை மறந்து , பாதுகாப்பற்ற செக்ஸில் இளம் வயதினர் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த பண்டிகை காலகட்டத்துக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு இளம் பெண்கள் கர்ப்பமடைவது மற்றும் கருக்கலைப்புக்கு மருத்துவமனைகளை நாடுவது போன்றவை அதிகரித்துள்ளன.
நீண்ட காலமாக குஜராத்தில் வாழ்ந்து வருபவர்கள், இதனை மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றும் ஆதீத கற்பனை என்றும் கூறினாலும், பல ஆண்டுகளாக இது குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் எச்சரிக்கை செய்து வருவதையும், அரசு அதிகாரிகள் இது குறித்து கவலை வெளியிட்டுள்ளதையும் மறுக்க இயலாது.
நவராத்திரி காலகட்டத்தில் அதிகரிக்கும் ஆணுறை விற்பனை
பாதுகாப்பான செக்ஸ் வைத்துக்கொள்ள இளம் வயதினர் அறிவுறுத்தப்படும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், ஆணுறை வாங்குவது தொடர்பான மனத்தடைகளை இளம் பெண்கள் கைவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநில மருந்து கடைகள் அமைப்புகளின் தலைவரான ஜஸ்வந்த் பட்டேல், கடந்த 10 ஆண்டுகளில் நவராத்திரி காலகட்டத்தில் ஆணுறைகளின் விற்பனை குறைந்தது 30 சதவீதம் அதிகரித்து வருவதை தான்பார்த்து வருவதாக குறிப்பிட்டார்.
ஆனால், ஆணுறையின் விற்பனை அதிகரித்திருந்தாலும், நவராத்திரி பண்டிகை முடிந்தபிறகு கருக்கலைப்பு செய்து கொள்ளும் இளம் வயதினர் அதிகரித்துள்ளதாக கடந்த 20 ஆண்டுகளாக அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் ரூபி மேத்தா என்ற மகப்பேறு மருத்துவர் கூறுகிறார்.
பரவலாக ஆணுறைகள் கிடைத்தாலும், 20 வயதினர் மத்தியில் மட்டுமே இது தொடர்பாக புரிதல் உள்ளது. பதின்ம வயதினர் மத்தியில் இது குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
பாலியல் கல்வி என்பது ஒரு அம்சம்; ஆணுறை விளம்பரம் மற்றொரு அம்சம். நமது கல்வி நிலையங்கள், பள்ளிக்கூடங்களில் சிறந்த முறையில் பாலியல் கல்வி குறித்து தெளிவு மற்றும் புரிதல் கற்றுத்தரப்பட வேண்டும். பதின்ம வயது பெண்கள் இது குறித்து மேலும் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே, இந்த பிரச்சனையை சமாளிக்க முடியவும் என்று ரூபி மேத்தா மேலும் குறிப்பிட்டார்.