கோலோச்சுகின்றதா கொலை கலாச்சாரம்?தென்னிலங்கையில் 24 மணிநேரத்துக்குள் ஐவர் படுகொலை!

0
255

இலங்கையில் கொலை கலாச்சாரம் கோலோச்சிவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ரத்தொடவில, நீர்கொழும்பு உள்ளிட்ட ஐந்து இடங்களிலேயே இக்கொலைகள் அரங்கேறியுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவால் நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊறுகஸ்மந்திய – ரத்தொடவில பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு நடுவீதியில் போடப்பட்டிருந்தது என்றும், 37 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் இருவரே கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஹல்துமுல்லை – முருதஹின்ன பகுதியில் இரு குழுக்களுக்கிடையே நேற்று காலை ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், நீர்கொழும்பு பிரதான வீதியின் சீதுவ பகுதியில் அலுவலகம் ஒன்றில் நேற்று காலை இடம்பெற்ற தாக்குதலில் 30 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஜா-எல – வெலிகம்பிட்டிய பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்னரும் தெற்கில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

பாதாள குழுக்களுக்கிடையிலான போட்டி காரணமாகவே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று கூறப்பட்டது.

அத்துடன், விசேட அதிரடிப்படையினரும் சோதனை நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்டனர். இரவுநேர ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெற்றன. திடீர் சுற்றிவளைப்புகளும் இடம்பெற்று வந்தன.

இதையடுத்து குற்றச் செயல்கள் ஒப்பீட்டளவில் குறைவடைந்திருந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசிறுமிக்கு கொடுத்த அன்பு பரிசு! குழந்தையாக மாறிய ஜனாதிபதி!
Next articleபலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அமைச்சரவை யோசனை இன்று முன்வைக்கப்படுகின்றது!