மன்னார் – எமிழ் நகர் பகுதியில் உள்ள வீட்டு சமையலறையில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எமிழ் நகர் பகுதியில் உள்ள வீட்டு சமையலறையில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து மன்னாருக்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
குறித்த அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அந்த வீட்டில் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்பவில்லை என தெரியவருகிறது.
மாலை 7 மணிவரை கடுமையான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வீடு கடந்த 2007ஆம் ஆண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த வீட்டில் அவரின் மனைவி உட்பட இரண்டு பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.