நெல்லை அருகே பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெல்லை டவுனில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வந்துள்ளார். இவருக்கு மேலசெவல் அருகே வாணியங்குளத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற ஜேசிபி ஆபரேட்டர், செல்போனில் மிஸ்டுகால் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் இருவரும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றின் மூலம பேசிப் பழகியதோடு, கடந்த 6 மாதங்களாக நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல கம்ப்யூட்டர் செண்டருக்கு சென்ற இளம்பெண், வீடு திரும்பாததால், பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர். இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை நாங்குநேரி அருகே சின்னமூலைக்கரைப்பட்டியில் சுண்ணாம்பு காளவாசலில், ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடந்ததை அவ்வழியே மாடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மூலக்கரைப்பட்டி போலீசார், கழுத்து அறுக்கப்பட்டு, கைகள் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.அப்போது, கொல்லப்பட்டு கிடப்பது நெல்லையில் கம்ப்யூட்டர் செண்டருக்கு சென்று, மாயமான இளம்பெண்ணின் உடல் என தெரியவந்தது.
இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்த பொலிசார், சந்தேகத்துக்குரிய ஒரு எண்ணை கண்காணித்தபோது, அது சுந்தரின் செல்போன் எண் என உறுதி செய்தனர். அந்த செல்போன் எண் மூலம் இருப்பிடித்தை கண்டறிந்து சுந்தரை கைது செய்தனர்.
விசாரணையில், வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க இளம்பெண்ணின் பெற்றோர் ஏற்பாடு செய்ததாகவும், அதற்கு இளம்பெண்ணும் உடன்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் கொலை செய்ததாக சுந்தர் கூறியுள்ளான். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தந்துவிடுவதாகக் கூறி, இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் சுந்தர் கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால், இருவருக்கும் தொடர்பில்லாத சின்னமூலக்கரைப்பட்டிக்கு இளம்பெண்ணை சுந்தர் அழைத்து வந்தது ஏன்? தனியாக வந்த இளம்பெண்ணின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தது ஏன்? என பல்வேறு கேள்விகளுக்கு பொலிசாருக்கு எழுந்துள்ளது.
சுந்தர் மட்டுமே கொலையை செய்தாரா?, நண்பர் யாருடனும் சேர்ந்து கொலை செய்தாரா?, கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் மூலக்கரைப்பட்டி போலீசார் சுந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.