தனுசு – குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசிக்காரர்களே ஜென்ம குருவால் உங்களுக்கு பொற்காலம் பிறக்குது !
குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ). தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, இதுநாள் வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரித்த குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதால் எதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். கடந்த கால வீண் செலவுகள் படிப்படியாக குறையும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சற்று குறையும். குரு பார்வை 5, 7, 9-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளால் இருந்த மனசஞ்சலங்கள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொதுநல காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிறைய ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து லாபத்தினைப் பெற்றுவிட கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய ஊயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சியுடன் பணிபுரிய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்றே கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றவிட முடியும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.
சர்ப கிரகமான ராகு 7-லும், கேது ஜென்ம ராசியிலும் 23.09.2020 முடிய சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் சனி பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இதுநாள் வரை நடைபெற்ற ஏழரைச் சனியில் ஜென்ம சனி முடிவதால் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிகள் ஒரளவுக்கு குறைந்து மன நிம்மதி உண்டாகும். சனி 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெறமுடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சாதகமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் சில நேரங்களில் அஜீரண கோளாறு உண்டாகும். மனைவி மற்றும் நெருங்கியவர்களால் எதிர்பாராத வகையில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விரோதிகள் கூட நண்பர்களாக செயல்படுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். மற்றவர்களின் உதவிகள் தடையின்றி கிடைத்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குருபகவான் கேது சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொருளாதார நிலையானது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குருபார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.
கமிஷன் ஏஜென்ஸி
தனக்காரன் குருபகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளிலில் இருப்போருக்கு சுமாரான லாபம் கிட்டும். முடிந்தவரை பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்தால் வீண் விரயங்கள் ஏற்படுவதை குறைக்க முடியும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும் என்றாலும் எதிர்பார்த்த லாபங்களும், புதிய வாய்ப்புகளும் சற்று தாமதப்படும். குறித்த நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் போன்ற யாவும் தடையின்றி கிட்டும். பணியில் நிம்மதியான நிலையிருக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான் சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் வேலைபளு குறையும்.
அரசியல்
அரசியல்வாதிகள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை சற்று மந்தமடையும். உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
விவசாயிகள்
விவசாயிகள் பட்டபாட்டிற்கான பலனை சற்று கஷ்டப்பட்டாவது அடைந்து விடுவார்கள். விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
பெண்கள்
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குயைறாது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்த்து விட்டால் கடன்கள் ஏற்படுவதையும் குறைக்கலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணிபுரிபவர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மேலும் மேலும் உற்சாகத்தை அளிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அரசு வழியில் ஆதரவுகள் சற்று தாமதமாகும்.
குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
ஜென்ம ராசியில் குரு பகவான் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் சனி- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது உத்தமம்-.
குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
உங்கள் ராசியில் குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரியங்களில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது.
தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது சிறப்பு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.
குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
உங்கள் ராசிக்கு குரு பகவான் ஆட்சி பெற்று சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும், ஜென்ம ராசியில் கேது, 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம்.
உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமை இருந்தாலும் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன் கிட்டும்.
குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஜென்ம ராசியில் கேது, 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும்.
வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நிலவிய தேக்கங்கள் படிப்படியாக விலகி லாபம் காண முடியும். ஜென்ம ராசியில் கேது, 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள்.
கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் உடல் நல பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது நல்லது.
குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
ஜென்ம ராசியில் குரு சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதும் 2-ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறுதடைக்கு பின் நற்பலன் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன் கோபத்தை குறைப்பது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள்.
சர்ப கிரகமான ராகு 6-லும் கேது 12-லும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபம் கிடைக்கும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களை குறைத்து கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை, குருபகவானையும் வழிபடவும்.
குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
ஜென்ம ராசியில் குரு பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. 2-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்த கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற அலைச்சலால் சுக வாழ்வு பாதிப்பு, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9
நிறம் – மஞ்சள், பச்சை
கிழமை – வியாழன், திங்கள்
கல் – புஷ்ப ராகம்
திசை – வடகிழக்கு
தெய்வம் – தட்சிணா மூர்த்தி
பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.
ஏழரை சனி நடைபெறுவதால் சனி பகவான் வழிபாடு செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனி யந்திரம் வைத்து வழிபடுவது சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
23.09.2020 முடிய சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிக்க இருப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது. விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது.