குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 மிதுனம் மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்கள் !

0

மிதுனம் – குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசிகாரர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்! களத்திர குரு- அற்புதங்கள் நிகழும் !

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ). தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்கள்

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, தற்போது 6-ல் சஞ்சரிக்கும் குரு திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடபுடலாகக் கைகூடும். புத்திர பாக்கியம் சிறப்பாக அமையும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு, கார் போன்றவை வாங்கும் யோகம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள கடன்கள் பைசலாகும். பூர்வீக சொத்து ரீதியாக உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். குருபார்வை 1, 3, 11 ஆகிய வீடுகளுக்கு இருப்பதால் எதிலும் முன்னேற்றமான பலன்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் பெற முடியும்.

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும். கடந்த கால தேக்க நிலை விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தற்போது ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சில பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். தற்போது 7-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி தொடங்க உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். தேவையற்ற பயணங்களை குறைப்பது மூலம் ஏற்றமிகுந்த பலனை அடைய முடியும். கை கால் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு போன்றவை தோன்றி மறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

தனக்காரகன் குருபகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று ஜென்ம ராசியை பார்வை செய்ய உள்ளதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். கடந்த காலத்திலிருந்த பொருளாதார தடைகள் விலகி குடும்பத்தின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். ஜென்ம ராசியில் ராகுவும், 7ல் கேதுவும் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, நெருங்கிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூமி, வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட கஷ்டங்கள் யாவும் லாபங்களாக மாறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் பெற முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி திருப்பி வரும். இதுவரை இருந்த வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகளும், போட்டி பொறாமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைவதால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் உங்களின் பலமும் வலிமையும் கூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று நவீன கருவிகளையும் வாங்குவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைத்து நிம்மதி ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைவதால் எதையும் சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்

அரசியலில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மக்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். கட்சி பணிக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகளும் அதனால் வீண் விரயங்களும் ஏற்பட்டாலும் குரு சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை. பெரிய மனிதர்களிடம் பேசும் போது நிதானமாக இருந்தால் சாதகப்பலனை அடைய முடியும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் லாபமும் சிறப்பாகவே இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். பூ, காய்கனி போன்றவற்றாலும், கால்நடைகளாலும் லாபம் உண்டு. புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். பட்டபாட்டிற்கான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்துக்கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள்களை வாங்கி சேமிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது-.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்தநிலை சற்றே விலகும். பள்ளிப் படிப்பில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும், கல்லூரிகளில் பயிலுபவர்கள் சிறப்பான சாதனையை செய்ய முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைப்பீர்கள். நல்ல நட்புகளும் கிட்டும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு பகவான் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் படிப்படியாக மறையும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும்.

கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைகளுக்கு பின் கிடைக்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சனி- கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது சிறப்பு. உற்றார் உறவினர்கள் தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விநாயகரையும் அம்மனையும் வழிபடவும்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு பகவான் ஆட்சி பெற்று பஞ்சம ஸ்தானாதிபதி சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தற்போது உள்ள கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும்.

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், கூட்டாளிகளையும் தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020

குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் ஆட்சி பெற்று சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும்.

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது, 8–ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு பகவான் அதிசாரமாக சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து சென்றால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, உக்ர தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் அஷ்டம சனி நடப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சர்ப்ப கிரக சஞ்சாரத்தால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020

ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதாலும், வரும் 23.09.2020 முதல் கேது 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் சகலவிதத்திலும் மேன்மைகள் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி ப்ரீதியாக அஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020

உங்கள் ராசிக்கு 7-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது.

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவது சிறப்பு.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 7, 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

23.09.2020 முடிய ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. விநாயகரை வழிபடுவது செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8,
நிறம் – பச்சை, வெள்ளை,
கிழமை – புதன், வெள்ளி
கல் – மரகதம்
திசை – வடக்கு
தெய்வம் – விஷ்ணு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரிஷபம் கிருத்திகை 2,3,4ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்கள் !
Next articleதுணையைத் திருப்திப்படுத்த முடியவில்லையே என்ற கவலை ஏற்படுகிறதா ! இதோ தீர்வு !