இராகலை – சென்லெனாட் தோட்ட மேல் பிரிவில் இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சடலங்களை இன்று மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சென்லெனாட் தோட்ட மேல் பிரிவில் உள்ள காட்டுப்பகுதியில் காணப்படும் குகை ஒன்றில் இருந்தே இந்த சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில், இராகலை – சென்லெனாட் தோட்டத்தை சேர்ந்த 29 வயதான மகேஸ்வரன் ரத்னேஸ்வரன் என்ற இளைஞரினதும் மெதவத்த பகுதியை சேர்ந்த 31 வயதான செல்லையா அசோக்குமார் என்ற இளைஞரினதும் சடலங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று நாயுடன் வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.
முள்ளம்பன்றி ஒன்றை வேட்டையாடச் சென்ற குறித்த இருவரும், குகைக்குள் புகை விசிறியதன் பின்னர் உட்பிரவேசித்துள்ளனர்.
இதில் குறித்த இரு இளைஞர்களும், நாயும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மூச்சுத் திணறி இவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






