பெண் குழந்தை பிறந்த விரக்தியில், பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பெற்றோரே எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் – வேண்டா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
அண்மையில், பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டாவுக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது.
இதனால் விரக்தியடைந்த பெற்றோர், அரசு மருத்துவமனையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் வரும் வழியிலேயே குழந்தை இறந்ததாக நாடகமாடிய அவர்கள், குழந்தையை சிவக்குமாரின் தோட்டத்தில் வைத்து எரித்தனர்.
ரகசிய தகவலின் பேரில் பாச்சல் கிராமத்திற்கு விரைந்த திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள், பச்சிளங்குழந்தை எரிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் பச்சிளங்குழந்தையை கொன்றதை சிவகுமார் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.